பான் கார்டு ஏன் அவசியம் என்பதற்கான முக்கியமான காரணங்கள்
ஒரு நாட்டின் மூலாதாரம் வரி வருவாய் ஆகும். எந்த ஒரு நாடும், அந்த நாட்டின் குடிமக்கள் சரியாக வரி கட்டுகின்றனரா என்பதைக் கண்காணிக்கவும், அவர்கள் வரி ஏய்ப்பில் ஈடுபடுவதைத் தடுக்கவும் பல்வேறு வழி முறைகளைப் பின்பற்றுகின்றனர். இந்தியத் திருநாட்டின் அத்தகைய ஒரு அரும் பெரு முயற்சியே பேன் கார்ட் ஆகும்.
இது உள்நாட்டு அல்லது வெளிநாட்டு வாழ் இந்தியர்களின் நிதி ஆதாரங்கள் மற்றும் பரிமாற்றங்களைக் கண்காணிப்பதற்காகப் பயன்படுத்தப்படுகின்றது. இந்த அட்டை இந்திய வருமான வரித்துறையினால் வழங்கப்படும் ஒரு நிரந்தரக் கணக்கு எண் உடைய பிளாஸ்டிக் அட்டை ஆகும்.
10 இலக்க எண்
நீங்கள் ஒரு சொத்து வாங்கும் போது, ஒரு புதிய தொலைப்பேசி இணைப்பு பெறும் பொழுது, ஒரு புதிய வங்கி கணக்கு ஆரம்பிக்கும் பொழுது, எந்த ஒரு புதிய முதலீடு செய்யும் பொழுது அல்லது எந்த ஒரு கட்டணம் செலுத்தும் போது உங்களுடைய நிரந்தரக் கணக்கு எண் அட்டை நகல் தேவைப்படுகிறது. எனவே, நீங்கள் இன்னும் அதை வாங்கவில்லை என்றால் உடனடியாக அதை வாங்க வேண்டும்.
சொத்துச் சம்பந்தப்பட்ட பரிவர்த்தனைக்கு நிறையப் பணம் தேவைப்படுகிறது. எனவே நீங்கள் 5 லட்சம் அல்லது அதற்கு மேற்பட்ட மதிப்புடைய அசையா சொத்தினை வாங்க வேண்டும் எனில் நீங்கள் உங்களுடைய நிரந்தரக் கணக்கு எண் அட்டை நகலைச் சமர்ப்பிக்க வேண்டும்.
இரண்டு சக்கர வாகனம் அல்லது கழற்றி மாட்டக்கூடிய கூடுதல் சக்கரம் உடைய வாகனங்களைத் தவிர்த்து பிற மோட்டார் வாகனங்களை நீங்கள் வாங்க அல்லது விற்க முயலும் பொழுது, நிரந்தரக் கணக்கு எண் அட்டை நகலைச் சமர்ப்பிக்க வேண்டும். பெரும்பாலும், நீங்கள் 5 லட்சம் அல்லது அதற்கு மேற்பட்ட மதிப்புடைய ஒரு மோட்டார் வாகனத்தை வாங்கும் போது, உங்களுடைய நிரந்தரக் கணக்கு எண்ணை சமர்ப்பிப்பது கட்டாயம் ஆகிறது.
நீங்கள் ஒரு புதிய வங்கிக் கணக்கு துவக்கும் பொழுது அதாவது அரசு, தனியார், கூட்டுறவு அல்லது மற்ற வங்கிகளில் ஒரு புதிய வங்கி கணக்கு துவக்கும் பொழுதும், அதற்குரிய விண்ணப்பப் படிவத்தில் நீங்கள் உங்களுடைய நிரந்தரக் கணக்கு எண் விவரங்களைக் குறிப்பிட வேண்டும்.
உங்களுடைய வங்கிக் கணக்கை திறந்த பிறகு, நீங்கள் உங்களுடைய வங்கிக் கணக்கில் 50000 மற்றும் அதற்கு மேற்பட்ட தொகையைச் செலுத்தும் பொழுது அல்லது 50000 அல்லது அதற்கு மேற்பட்ட தொகைக்கு வரைவு ஓலைப் பெறும் பொழுது, உங்களுடைய நிரந்தரக் கணக்கு எண் விபரங்களைச் சமர்ப்பிக்க வேண்டும். ஒரு கிரெடிட் மற்றும் டெபிட் கார்டு போன்றவற்றிற்கு விண்ணப்பிக்கும் போது, நீங்கள் உங்கள் நிரந்தரக் கணக்கு எண் அட்டை விவரங்களை வழங்க வேண்டும்.
நீங்கள் உங்களுடைய வீட்டிற்கு அல்லது வணிக நோக்கத்திற்காக ஒரு புதிய தொலைப்பேசி இணைப்புப் பெற்றுக்கொள்ள விரும்பினால், நீங்கள் தொலைப்பேசி அல்லது ஒரு செல்லுலார் தொலைப்பேசி நிறுவனத்திற்கு விண்ணப்பிக்க வேண்டும். அவ்வாறு விண்ணப்பிக்கும் போது, நீங்கள் விண்ணப்பப் படிவத்தில் உங்களுடைய நிரந்தரக் கணக்கு எண் விவரங்களைக் குறிப்பிட வேண்டும்.
இந்தியா அல்லது வெளிநாட்டுப் பயணங்களை மேற்கொள்ளும் பொழுது, உங்களுடன் உங்களுடைய நிரந்தரக் கணக்கு எண் அட்டையை எடுத்துச் செல்ல மறவாதீர்கள். ஏனெனில், உங்களுடைய பயணம் மற்றும் விடுதி வாடகை 25000 அல்லது அதற்கு மேல் செல்லும் பொழுது, நீங்கள் உங்களுடைய நிரந்தரக் கணக்கு எண் அட்டையின் நகலைச் சமர்ப்பிக்க வேண்டும். அதோடு கூட நீங்கள் ஏதாவது அயல் நாட்டிற்குப் பயணம் மேற்கொள்ளும் பொழுது ஒரே நேரத்தில் 25000 அல்லது அதற்கு மேற்பட்ட மதிப்புடைய தொகையைச் செலுத்தும் போது, நீங்கள் உங்களுடைய நிரந்தரக் கணக்கு எண் அட்டையின் நகலைச் சமர்ப்பிக்க வேண்டும்.
அனைத்து வகையான வைப்பு மற்றும் சேமிப்பு கணக்கு தொடங்க நிரந்தரக் கணக்கு எண் அட்டை நகலை வழங்க வேண்டும். எனவே 50000 அல்லது அதற்கு மேற்பட்ட மதிப்புடைய வைப்புநிதி முதலீடு அல்லது வேறு வகையான முதலீடுகளை வங்கி அல்லது அஞ்சலகங்களில் மேற்கொள்ளும் பொழுது, உங்களுடைய நிரந்தரக் கணக்கு எண் அட்டை நகலைக் கண்டிப்பாக வழங்க வேண்டும்.
வரி தாக்கல் செய்யும் சமயத்தில், மக்கள் வரியில் இருந்து தங்களைக் காப்பாற்றிக் கொள்ள இஎல்எஸ்எஸ் நிதியில் மொத்தமாகப் முதலீடு செய்வர். எனவே, நீங்கள் 50000 அல்லது அதற்கு மேற்பட்ட மதிப்புடைய அலகுகள் வாங்கும் போதெல்லாம், அதாவது பரஸ்பர நிதிகளில் உங்கள் பணத்தை முதலீடு செய்யும் போது, உங்களுடைய நிரந்தரக் கணக்கு எண் விவரங்களை வெளியிடுவது அவசியமாகின்றது.
நீங்கள் ஒரு லட்சம் அல்லது அதற்கு மேற்பட்ட மதிப்புடைய பங்குகளை வாங்கும் பொழுது அல்லது விற்கும் பொழுது, நீங்கள் உங்களுடைய நிரந்தரக் கணக்கு எண் விவரங்களைக் கட்டாயம் குறிப்பிட வேண்டும்.
ஒரு நிறுவனம் அல்லது வியாபாரிகளுக்குப் பணம் கொடுக்க
நீங்கள் 50000 அல்லது அதற்கு மேற்பட்ட தொகைகளைப் பின்வரும் காரணங்களுக்காகச் செலுத்தும் பொழுது, நீங்கள் உங்கள் நிரந்தரக் கணக்கு எண் அட்டை நகலைக் கட்டாயம் சமர்ப்பிக்க வேண்டும்.
அ) ஒரு நிறுவனத்திற்கு, அவர்களால் வெளியிடப்படும் பங்குகள், கடன் பத்திரங்கள், அல்லது கடன் திட்டங்களை வாங்கும் பொழுது அல்லது பெறும்போது.
ஆ) ரிசர்வ் வங்கியில் பணம் செலுத்தும் பொழுது
இ) ஒரு வருடத்தில் மொத்தமாக 50000 அல்லது அதற்கு மேற்பட்ட மதிப்புடைய தொகைக்கு, ஆயுள் காப்பீட்டுப் பாலிசிக்கான பிரீமியம் செலுத்தும் பொழுது .
ஈ) 5 லட்சம் ரூபாய் அல்லது அதற்கு மேற்பட்ட மதிப்புடைய தொகையை வியாபாரி அல்லது நிறுவனத்திடம் செலுத்தும் பொழுது அல்லது 5 லட்சம் அல்லது அதற்கு மேற்பட்ட மதிப்புடைய தங்கத்தை மொத்தமாக வியாபாரியிடம் இருந்து வாங்கும் பொழுது.