1. காலத்தின் மீது சத்தியமாக. 2. நிச்சயமாக மனிதன் நஷ்டத்தில் இருக்கின்றான். 3. ஆயினும், எவர்கள் ஈமான் கொண்டு ஸாலிஹான (நல்ல) அமல்கள் செய்து, சத்தியத்தைக் கொண்டு ஒருவருக்கொருவர் உபதேசம் செய்து, மேலும் பொறுமையைக் கொண்டும் ஒருவருக்கொருவர் உபதேசிக்கிறார்களோ அவர்களைத் தவிர (அவர்கள் நஷ்டத்திலில்லை). (103:1-3)
நம்பிக்கை கொண்ட ஆண்களும், பெண்க ளும் ஒருவருக்கொருவர்
உற்ற நண்பர்களாக இருக்கின்றனர். அவர்கள் நல்லவற்றை ஏவுகிறார்கள், தீயவற்றை விலக்குகிறார்கள், தொழுகையைக்
கடைபிடிக்கிறார்கள். ஜகாத்தை கொடுத்து வருகிறார்கள். அல்லாஹ்வுக்கும், அவனது தூதருக்கும்
அடிபணிகிறார்கள். அவர் களுக்கே அல்லாஹ் கருணை புரிகிறான்…” (9:71)
மனிதர்களுக்காக தோற்றுவிக்கப்பட்ட (சமு தாயங்களில்) நீங்கள் சிறந்த
சமுதாயமாக இருக் கிறீர்கள். நீங்கள் நல்லவற்றை ஏவுகிறீர்கள்; தீயவற்றை விலக்குகிறீர்கள்; அல்லாஹ்வின் மீது நம்பிக்கை
கொள்கிறீர்கள்…” (3:110)
நன்மையின் பக்கம் அழைப்பவர்களாகவும், தீயதிலிருந்து
விலக்குபவர்களாகவும் உங்களில் ஒரு கூட்டம் இருக்கட்டும். அவர்களே வெற்றி பெற்றோர்
ஆவர். (3:104)
இந்த இறைவாக்குகள்
அனைத்தும் இறுதி நபிக்கு முன்னர் நபிமார்கள் செய்து வந்த மார்க்கப்பணி இறுதித்
தூதரின் உம்மத்தாகிய நம்மீது சுமத்தப்பட்டிருக்கிறது; கடமையாக்கப்பட்டிருக்கிறது
என்பதை உணர்த்துகின்றன.
மேலும், நபிமார்கள் அனைவரும்
இம்மார்க்கப் பணியை முழுக்க முழுக்க அல்லாஹ்வின் பொருத்தம் நாடி, நாளை மறுமையில் அந்த
இறைவனிடம் மட்டுமே கூலி-சம்பளத்தை எதிர்பார்த்துச் செய்ய வேண்டும்; ஒருபோதும் மக்களிடம்
கூலி-சம்பளத்தைக் கேட்கவும் கூடாது; எதிர்பார்க்கவும் கூடாது
என்பதை அனைத்து நபிமார்களும் பகிரங்கமாகப் பிர கடனப்படுத்தியதை 6:90,
10:72, 11:29,51, 25:57, 26:109,127,145,164,180, 34:47, 38:86, 42:23 ஆகிய 13 குர்ஆன் வசனங்கள்
கூறுகின்றன.
36:21 குர்ஆன் வசனம் கூலி வாங்காமல் மார்க்கப் பணி செய்கிறவர்களை மட்டுமே
மக்கள் பின்பற்ற வேண்டும்; அவர்கள்
மட்டுமே நேர்வழி நடப்பவர்கள் என உறுதிப்படுத்துகிறது. கடமையான மார்க்கப் பணிக்குச் சம்பளம் வாங்கினால் அதனால் மக்கள்
சுமையேற்றப்பட்டு வழிதவற அது காரணமாகிவிடும் என்பதை 52:40, 68:46 குர்ஆன் வசனங்கள்
கூறுகின்றன.
அதனால்தான் இம்மதகுருமார்கள் சிறிதும்
இறையச்சம் இல்லாமல், துணிந்து
குர்ஆன் வசனங்களை 2:159,161,162 கூறுவது போல் திரித்து, வளைத்து தவறான விளக்கங்கள்
கொடுப்பது, பொய்ச்
சத்தியம் செய்வது, அல்லாஹ்மீதே
ஆணையிட்டுப் பொய் உரைப்பது, துணிந்து
மற்றவர்கள் மீது அவதூறு பரப்புவது, நேரடி குர்ஆன், ஹதீஸ் கருத்மதுக்களைக்
கேட்கவிடாமல் மக்களைத் தடுப்பது இப்படிப்பட்ட நரகத்திற்கு இட்டுச் செல்லும் துர்ச்
செயல்களைத் துணிந்து செய்ய முடிகிறது.
இந்த உண்மைகளை மேலே
எழுதப்பட்டுள்ள குர்ஆன் வசனங்கள் அனைத்தையும் சுய சிந்தனையுடன், தன்னம்பிக்கையுடன் படித்து
விளங்குகிறவர்கள் ஒப்புக் கொள்வார்கள். இந்த வசனங்கள் எல்லாம் முன்சென்ற
காஃபிர்கள், யூதர்கள், கிறித்தவர்கள் பற்றி
இறங்கியவை; முஸ்லிம்களான
நம்மை இவை கட்டுப்படுத்தா எனக் கூறுவார்கள்.
அல்லாஹ் கண்டித்துக் கூறும்
ஒரு தவறை ஆதத்தின் மக்களில் யார் செய்தாலும் தவறு தான்; தண்டனைக்குரிய குற்றம்தான்.
உதாரண மாக லூத்(அலை) அவர்களின் சமூகம் ஓரினப் புணர்வில் ஈடுபட்டதாக குர்ஆன் 7:80,81 வச னங்களில் அல்லாஹ்
கண்டித்துக் கூறுகிறான். இந்தக் கடும் கண்டனம் அந்தச் சமூகத்திற்குரி யது.
எங்களுக்கில்லை என்று கூறுகிறார்களா?
ஓர் அரசு அதிகாரி அரசிடம்
சம்பளம் வாங்கிக் கொண்டு பணிபுரிகிறார், இந்த நிலையில் தனது
பணிக்காக மக்களிடம் கூலி வாங்குவது பகிரங்கமான லஞ்சம்-கையூட்டு என்பதில் மாற்றுக்
கருத்து உண்டா? இல்லையே!
அதேபோல் மார்க்கப் பணிக்கு இவர்களுக்கு அல்லாஹ்விடமே கூலி இருக்கிறது என்று
அல்குர்ஆனும், ஹதீஸ்களும்
தெளிவாகக் கூறிக் கொண்டிருக்க இந்த மவ்லவிகள் மார்க்கப் பணிக்காக மக்களிடம்
கூலி-சம்பளம் வாங்குவது கையூட்டு -லஞ்சமே.
“”மக்களே! நிச்சயமாக அல்லாஹ்
தூய்மையானவன். அவன் தூய்மையை அன்றி வேறு எதனையும் ஏற்றுக் கொள்ள மாட்டான். அன்
றியும் நிச்சயமாக, அல்லாஹ்
எதனைத் தூதர்களுக்குப் பணித்தானோ அதனையே நம்பிக்கையாளர்களுக்கும் பணித்துள்ளான்”. “”தூதர்களே! நீங்கள்
தூயவற்றையே உண்ணுங்கள், நற்செயல்களையே
செய்யுங்கள்….” (23:51) என்று இறை வன் கட்டளையிடுகிறான். (அதேபோல்)
“”நம்பிக்கையாளர்களே! நாம்
உங்களுக்கு அளித்தவற்றில் தூய்மையானவற்றையே உண்ணுங்கள்…” (2:172)
என்றும்
அவன் கட்டளையிட்டுள்ளான் என்று நபி(ஸல்) கூறியபின் ஒருவனைப் பற்றிக்
குறிப்பிட்டார்கள்.
அவன் மண் புழுதிகளில்
சிக்கி, நெடும்
தொலைப் பயணத்துக்கு ஆளாகி, (ஹஜ்ஜுக் குச் சென்று) தலைவிரி கோலமான நிலையில் தன் இரு கைகளையும்
விண்ணை நோக்கி உயர்த்தியவனாக, “”இறைவனே! இறைவனே!! என் துஆவை ஏற்றுக்
கொள்வாயாக!” என்று
கூறுவானானால் -அவன் உண்பதும், குடிப்பதும், உடுத்தியிருப்பதும்
ஹராமாகவும் ஆக, அவன்
ஹராமான பொருள்களைக் கொண்டு வளர்ந்து வரும் நிலையில் இறைஞ்சுவனானால், அவனுடைய இறைஞ்சலுக்கு
எவ்வாறு விடை அளிக்கப்படும்?” (அதாவது அவனு டைய துஆ எவ்வாறு
ஏற்றுக் கொள்ளப்படும்?) என்று கூறினார்கள். (அபூஹுரைரா(ரழி) முஸ்லிம் திர்மிதீ, அல்ஹதீஸ் 4321)
கடமையான மார்க்கப்
பணிக்குக் கூலி-சம்பளம் அறவே கூடாது என்று இத்தனை குர் ஆன் வசனங்கள் கூறிக்
கொண்டிருக்க ஹதீஸ்கள் இதுபற்றி என்ன கூறுகின்றன என்று பாருங்கள்.
“”குர்ஆனை ஓதுங்கள்! அதன் மூலம் சாப்பிடவோ, பொருள் திரட்டவோ
முற்படாதீர்கள்” என்று நபி(ஸல்) எச்சரித்துள்ளார்கள். (அஹ்மத், தஹாவி, தப்ரானி, இப்னு அஸாகிர்)
“”எவர் குர்ஆனை ஓதுகிறாரோ அவர் அல்லாஹ்விடமே கேட்கட்டும், வருங்காலத்தில் குர்ஆனை
ஓதிவிட்டு மக்களிடமே (கூலி-சம்பளம்) கேட்பவர்கள் தோன்றுவார்கள்” என்று நபி(ஸல்) எச்சரித்துள்ளார்கள். (திர்மிதி, அஹ்மத்)
குர்ஆன் வசனங்களும், ஹதீஸ்களும் தெளிவாக
நேரடியாக இப்படிக் கூறிக் கொண்டிருக்க இந்த மவ்லவிகள் குர்ஆன் வசனத்தைத் திரித்து
வளைத்து அதன் நேரடிக் கருத்தை எப்படி மறைக்கிறார்கள் தெரியுமா?
கடமையான மார்க்கப்
பணிபுரிகிறவர்கள், சொந்தமாக
உழைத்துப் பொருளீட்ட வாய்ப்பு இல்லாதவர்களாக இருப்பதால் அவர்களுக்கு ஜகாத், சதக்கா நிதியிலிருந்து
கூலி-சம்பளமாகக் கொடுக்கலாம் எனச் சுய விளக்கம் கொடுக்கிறார்கள்.
அல்குர்ஆனை வஹி மூலம் பெற்ற
நபி(ஸல்) அவர்கள் மட்டுமே குர்ஆன் வசனங்களுக்கு 2:213, 16:44,64 வசனங்களின் படி விளக்கம்
கொடுக்கக் கடமையும் உரிமையும் பெற்றவர்கள் என்பதையும், நபி(ஸல்) அவர்களுக்குப்
பிறகு யாருக்கும் சுய விளக்கம் கொடுக்கும் உரிமை இல்லை என்பதை 7:3,
33:36,66-68, 18:102-106, 59:7, 9:31 குர்ஆன் வசனங்கள் மிகக் கடுமையாக எச்சரிப்பதை ஒருபோதும்
விளங்க மாட்டார்கள். அந்தளவு உள்ளங்கள் இருளடைந்து விட்டன.
2:273 வசனத்திற்கு இவர்கள்
கூறுவதுதான் உண்மையான பொருள் என்றால், அதைக் கண்டிப்பாக நபி(ஸல்)
நடைமுறைப்படுத்திக் காட்டி இருப்பார்கள். மார்க்கத்தைக் கற்றுக் கொள்ளும் ஒரே
நோக்கத்துடன், வேறு
நோக்கமே இல்லாமல் மஸ்ஜிதுன் நபவிக்குப் பக்கத்திலிருந்த திண்ணையில் கிடந்த
அஸ்ஹாபுஸ்ஸுஃப்பாக்களுக்கு அரசு கஜானாவிலிருந்து மாதாமாதம் கூலி-சம்பளம் கொடுக்கக்
கட்டளையிட்டிருப்பார்கள். குறைந்தபட்சம் முஹாஜிர்களை அன்சார்களிடம் சாட்டி விட்டது
போல், இந்த
அஸ் ஹாஃபுஸ்ஸுஃப்பாக்களையும், இதர வசதியுள்ள நபி தோழர்களிடம் சாட்டிவிட்டு, அவர்களின் உணவுத் தேவையை
நிறைவேற்றிக் கொடுக்கக் கட்டளையிட்டிருப்பார்கள். ஏன் செய்யவில்லை? என்று இந்த மவ்லவிகள்
என்றாவது சிந்தித்திருப்பார்களா?
அதுபோல் அன்று முழுநேர
மார்க்கப் பணி புரிந்த நபிதோழர்களுக்கும் அப்படி ஏற்பாடு செய்து சமுதாயத்திற்கு
வழிகாட்டி இருப்பார்கள்.
பல நாட்கள் பட்டினி கிடந்து
மயங்கி விழும் நிலையிலும் அவர்களில் சிலர் இருந்துள்ளனர். ஆயினும் அவர்கள்
யாரிடமும் 2:273 கூறுவது போல் தங்கள் நிலையை வெளிப்படுத்தியதில்லை. அவர்களது பரிதாப
நிலையைப் பார்த்து நபிதோழர்கள் அவர்களாக முன்வந்து உபகாரம் செய்ததாகவே ஹதீஸ்கள்
கூறுகின்றன. இதையே 2:273 இறைக் கட்டளை வலியுறுத்துகிறது.
கடமையான மார்க்கப் பணிக்கு
கூலி-சம்பளம் வாங்க குர்ஆனில் வேறு ஆதாரமே இல்லை. 2:273 இறைவாக்கும் சம்பளம் பேசி
மாதா மாதம் குறிப்பிட்டத் தொகை வாங்க அனுமதிக்கவில்லை என்பது தெளிவான பின்னர் இந்த
மவ்லவிகள் எடுத்து வைக்கும் சுய விளக்கம் என்ன தெரியுமா?
சில நபி தோழர்கள் ஒரு ஊர்
வழியாக வரும்போது அவ்வூர் மக்களின் தலைவரைப் பாம்பு கடித்து வேதனையால் அவர்
துடித்துக் கொண்டிருந்தார். அப்போது நபிதோழர்களில் ஒருவர் சூரத்துல் ஃபாத்திஹாவை
ஓதி விஷத்தை இறக்கினார். அதற்காக அத்தலைவர் 30 ஆடுகளைக் கொடுத்தார்.
ஆயினும் குர்ஆன் ஓதி காசு வாங்கக் கூடாது என்ற தடை இருப்பதின் காரணமாக ஐயப்பட்டு
ஆடுகளை ஓட்டிக் கொண்டு வந்து நபி(ஸல்) அவர்களிடம் நடந்ததைக் கூறி, வாங்கிக் கொண்டு வந்த
ஆடுகள் ஹலாலா? ஹராமா
எனக் கேட்கிறார்கள். நபி(ஸல்) அவர்கள் பங்கு வைத்துக் கொள்ளும்படியும், தனக்கொரு பங்கு
தரும்படியும் கூறியதாக அபூ ஸஈது(ரழி) அறிவித்து புகாரீ, முஸ்லிம், அபூதாவூது, திர்மிதீ ஆகிய நூல் களில்
இருப்பதாக அல்ஹதீஸ் 4694ம் ஹதீஸில் பதிவாகி இருக்கிறது.
இச்சம்பவத்தைப் பெரிய
ஆதாரமாகக் காட்டி மார்க்கப் பணிக்குக் கூலி வாங்குவதை நியாயப்படுத்துகிறார்கள்.
கடமையான மார்க்கப் பணிக்கு கூலி கூடாது என்று அல்குர்ஆனில் நேரடித் தடை
இல்லாதிருந்தால் அவர்களின் இவ்வாதம் சரிதான். ஆனால் தெளிவான தடை இருக்கிறதே!
அதனால் தானே நபி தோழர்கள் நபியிடம் வந்து ஆடுகள் ஹலாலா, ஹராமா எனக் கேட்கிறார்கள்!
அந்த நபிதோழர் ஃபாத்திஹா சூராவை ஓதினார். ஆனால் விஷம் இறங்கவில்லை என்று வைத்துக்
கொள்வோம். குர்ஆன் ஓதியதற்காக ஆடுகள் கிடைத்திருக்குமா? கிடைத்திருக்காதே!
அப்படியானால் வைத்திய
அடிப்படையில் அவ்வாடுகள் கூலியாகக் கொடுக்கப்பட்டனவே அல்லாமல், குர்ஆன் ஓதியதற்காகக்
கொடுக்கப்படவில்லை என்பது விளங்குகிறதே! இந்த ஹதீஸை கொண்டு குர்ஆன் ஓதி நோயைச்
சுகப்படுத்தினால் அதற்காகக் கூலி வாங்க அனுமதி உண்டு என்பதற்கே ஆதாரம்
கிடைக்கிறது. பள்ளிகளில் தொழுதுவிட்டு வெளியே வரும்போது அங்கு காத்து நிற்கும்
நோயாளிகளுக்கு குர்ஆனிலிருந்து சில வசனங்களைக் கொண்டு ஓதிப் பார்க்கலாம். இங்கும்
நோய் சுகமான பின்னர் அதற்குரிய கூலியை பெறலாமே அல்லாமல் குர்ஆன் ஓதியதற்காக கூலி
வாங்குவது அனுமதிக்கப்பட்டதல்ல என்பதே குர்ஆன், ஹதீஸ் நேரடியாகக் கூறும்
உண்மையாகும்
தொழ வைப்பதற்காக நாங்கள்
நேரம் ஒதுக்கி வரவேண்டிய நிலையில் இருக்கிறோம். அதற்காகச் சம்பளம் வாங்குகிறோம்
என்ற வாதத்தை வைக்கின்றனர். இதுவும் மிகத் தவறான வாதமே! எப்படி என்று பாருங்கள்.
பெரும்பாலான இமாம்கள் தொழுகை ஆரம்பிக்கும் இறுதிக் கட்டத்தில்தான் பள்ளிக்கு
வருகிறார்கள். அவர்களுக்கு முன்னதாகவே பல தொழுகையாளிகள் பள்ளிக்கு வந்து காத்துக்
கிடக்கிறார்கள். அது மட்டுமா? தொழுகைக்காக அழைப்பு விடுக்கும் (பாங்கு) முஅத்தின்
தொழுகைக்கு அரை மணி நேரமோ, 20 நிமிடங்களோ முன் கூட்டியே வந்து பாங்கு சொல்லும் கட்டாயத்தில்
இருக்கிறார். நேரம் ஒதுக்கி முன்னரே வந்து பாங்கு சொல்லும் முஅத்தினுக்கே
அதற்காகச் சம்பளம் கொடுக்க மார்க்கத்தில் அனுமதி இல்லை என்றே ஹதீஸ் கூறுகிறது. அது
வருமாறு: “”முஅத்தினை
நியமனம் செய்தால் எந்த விதமான பிரதிபலனும் (கூலியோ, சம்பளமோ) பெற்றுக் கொள்ளாத
ஒருவரை நியமிக்க வேண்டும் என்று நபி(ஸல்) அவர்கள் என்னிடம் இறுதியான உறுதி மொழி
வாங்கினார் கள்” என்று
உஸ்மான் இப்னு அபில் ஆஸ்(ரழி) கூறினர். (அபூதாவூது, திர்மிதீ)
கொஞ்சம் மூளைக்கு வேலை
கொடுத்துப் பாருங்கள்! தொழுகைக்கு 30 நிமிடமோ, 20 நிமிடமோ முன்கூட்டியே நேரம்
ஒதுக்கி வந்து பாங்கு சொல்லும் முஅத்தினுக்கே சம்பளம் கொடுக்க மார்க்கத்தில்
அனுமதி இல்லை என்று ஹதீஸ் தெளிவாக நேரடியாகக் கூறும் நிலையில், தொழுகைக்குக் கடைசி
நேரத்தில் அவசர அவசரமாக வந்து, தொழுகை விரிப்பைக் கூட முஅத்தினே ஒழுங்குபடுத்தி வைத்த
நிலையில், வரிசைகளை
நேர்படுத்தி ஒழுங்குபடுத்தாமலும், முன் வரிசைப் பூர்த்தியாகி இரண்டாம் வரிசையில்
நிற்கிறார்களா? என்று
பார்க்காமலும் ருகூவுக்குப் பின்னுள்ள சிறு நிலையிலும், இரண்டு சுஜூதுக்கு
இடைப்பட்ட நிலையிலும் போதிய அவகாசம் கொடுக்காமலும் அவசர அவசரமாகத் தொழுது, தொழுகை முடிந்ததோ இல்லையோ
தலைப் பாகையை அவிழ்த்து எறிந்துவிட்டு வெளியே பறந்து செல்லும் இமாமுக்கு, தொழுகைக்காக நேரம் ஒதுக்கி
வருகிறார் என்பதற்காகச் சம்பளம் கொடுப்பதை மார்க்கம் அனுமதிக்குமா? இப்படி எல்லாம் சுய
புராணங்களை அவிழ்த்து விட்டு அறிவு குறைந்த சுய சிந்தனையற்ற ஆட்டு மந்தைபோல்
மவ்லவிகள் பின்னால் கண்மூடிச் செல்லும் மக்களை ஏமாற்ற முடியுமே
அல்லாமல் அல்லாஹ் வை ஏமாற்ற முடியுமா? ஒருபோதும் முடியாது.
மக்கள் இமாமுக்கு
முன்னாலேயே வந்து சுன்னத்து தொழுது, காத்துக் கிடந்து கடமையான
தொழுகையைத் தொழுத பின்னர் உபரியான தொழுகைகளையும் ஆர அமர தொழுது விட்டு, அதாவது இமாமுக்கு முன்னர்
வந்து, இமாமுக்குப்
பின்னர் செல்லும் அந்த மக்கள் மண்ணையா சாப்பிடுகிறார்கள்? அவர்கள் உழைத்துப்
பொருளீட்டி அவர்களும், அவர்கள்
குடும்பத்தார், உறவினர்
முதல் சாப்பிட்டு, இந்த
உழைப்பதில் சோம்பேறித்தனம் காட்டும் இமாம்களுக்கும் கொடுக்கவில்லையா?
இந்த நிலையில் இகாமத்
சொல்லும் நேரம் நெருங்கும்போது அவசர அவசரமாக வந்து தலைப்பாகைக் கட்டிக்கொண்டு
தொழவைத்து விட்டு அவசர அவசரமாக வெளியேறும் இந்த இமாம்களுக்குத் தங்கள் கைகளால்
ஹலாலான முறையில் உழைத்துச் சாப்பிடுவதற்கு என்ன கேடு?
இமாம்களின் நிலை
இதுவென்றால், அடுத்து
கடமையான பிரசார பணி செய்கிறவர்களும் கூலிக்கே மாரடிக்கிறார்கள். இமாம்களைப் போல்
ஒரு நாளில் அதிகபட்சம் சுமார் 5 மணிநேரம் செலவிடும் அவர்கள் முழு நேரப் பணியாளர்களாம்.
அதனால் அவர்களுக்கு ஹலாலான முறையில் பொருளீட்ட நேரம் இல்லையாம்! அதனால் பிரசார
பணிக்குச் சம்பளம் வாங்குகிறார்களாம்.
மார்க்கப் பணிக்குக் கூலி
வாங்கி நாங்கள் குபேரர்கள் ஆகிவிட்டோமா? அன்றாடம் நாட்களை ஓட்டுவதே
பெரும் சிரமமாக இருக்கிறது. வறுமையில் வாடுகிறோம் என்று மவ்லவிகள் கூறுகிறார்கள். “”மக்களிடம்
கையேந்துபவர்களுக்கு கொடுக்கும் வாசலை அல்லாஹ் மூடிவிடுகிறான். அல்லாஹ்வை மட்டும்
முழுமையாக நம்பி அவனிடம் மட்டுமே கையேந்துகிறவர்களுக்கு கொடுக்கும் வாசலை
முழுமையாகத் திறந்து விடுகிறான் அல்லாஹ் என்ற” என்ற ஹதீஃத்
இம்மவ்லவிகளுக்குத் தெரியாதா?
இங்கு இன்னொரு விஷயத்தையும்
முக்கிய மாகக் கவனத்தில் கொள்ள வேண்டும். நம் மீது 3:110, 9:71, 103:1-3 மூலம் விதிக்கப்பட்ட
கடமையான மார்க்கப் பணிகளுக்கு, அவற்றைச் செய்யாவிட்டால் நாளை மறுமையில் கேள்வி
கேட்கப்பட்டு தண்டிக்கப்படுவோம் என்ற வகையிலுள்ள மார்க்கப் பணிகளுக்கு
கூலி-சம்பளம் வாங்குவது மட்டுமே தடுக்கப் பட்டுள்ளது. நம்மீது விதிக்கப்படாததை
அதாவது செய்யா விட்டால் ஏன் செய்யவில்லை என்று கேட்டுத் தண்டிக்கப்படாத பணிகளான
குர் ஆனை, ஹதீஸ்களை
எழுதிக் கொடுப்பது, மொழி
பெயர்ப்பது, நூல்கள்
வெளியிடுவது, வெளியூர்களுக்கு
அழைப்பின் பேரில் சென்று பிரசாரம் செய்யும்போது பயணப்படி இவை அனைத்திற்கும் பணம்
பெறுவது மார்க்கத்தில் தடை செய்யப்படவில்லை என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
சுருக்கமாகச் சொன்னால்
நபிமார்கள் செய்த மார்க்கப் பணிகள் மட்டுமே முஸ்லிம்கள் மீதும்
கடமையாக்கப்பட்டுள்ளது. அவை அல்லாத வைக்கு கூலி-சம்பளம் பெறுவதை மார்க்கம் தடை
செய்யவில்லை என்பதே சரியாகும்.
இதை ஆதாரமாக வைத்து இமாமத்
செய்வது எங்கள் மீது கடமை இல்லையே என்று மவ்லவிகள் எதிர்க் கேள்வி கேட்கலாம்.
நபி(ஸல்) இமாமத் செய்தார்கள். ஆனால் அதற்காக ஊதியம் பெறவில்லை. மேலும் யாராக
இருந்தாலும் ஐங்கால தொழுகை கடமை. உள்ளூரில் இருக்கும் போது ஜமாஅத்தும் வலியுறுத்தப்பட்ட
சுன்னத். அந்த அடிப்படையில் ஒரு மவ்லவி பள்ளிக்குச் செல்லும்போது, அந்த மஹல்லாவாசிகளில், நபி (ஸல்) அவர்கள்
கூறியுள்ளபடி இமாமத் செய்யும் தகுதி அவருக்கே இருக்கிறது. எனவே நபி(ஸல்) அவர்களின்
கட்டளைப்படி அம்மக்களுக்கு இமாமத் செய்யும் பொறுப்பு அவருக்கு ஏற்படுகிறது. எனவே
இதைக் காரணம் காட்டி தொழ வைக்க கூலி-சம்பளம் பெற முடியாது.
இமாமத், பிரசார பணிகளை ஈமானின்
உறுதியோடு அல்லாஹ்வையும், மறுமையையும்
மிகமிக உறுதியாக நம்பி, அல்லாஹ்விடமே
அவற்றிற்குரிய கூலியை எதிர்பார்த்து தூய எண்ணத்தோடு செய்ய முன் வந்தால் நிச்சயமாக
அல்லாஹ் அதற்குரிய வழியை எளிதாக்கித் தருவான். இது 29:69ல் அல்லாஹ் உறுதியாக
அளிக்கும் உத்திரவாதமாகும்.