நமது சமுதாயத்தில் பல்வேறு
விருந்துகள் நீண்ட காலமாக நடைபெற்று வருகின்றன. பெயர் சூட்டு விழா விருந்து, கத்னா விருந்து, சடங்கு விருந்து, கல்யாண விருந்து, புதுமனைப் புகுவிழா விருந்து, பிள்ளைப் பேறு விருந்து, இறந்தவர் வீட்டில் அவர் அடக்கம்
செய்யப்பட்டதும் விருந்து, மூன்றாம்
நாள் பாத்திஹா விருந்து, ஏழாம்
நாள் பாத்திஹா விருந்து, நாற்பதாம்
நாள் பாத்திஹா விருந்து, ஹஜ்ஜுக்குச்
செல்லும் விருந்து என விருந்து மழைகள் பொழிந்து கொண்டிருக்கின்றன. மக்கள்
அம்மழையில் நனைந்த வண்ணமிருக்கின்றனர்.
இந்த விருந்துகளில் திருமணம் மற்றும்
புதுமனை புகுவிழா விருந்துகள் மார்க்கம் அனுமதிக்கின்ற விருந்துகளாகும். மற்ற
விருந்துகள் மார்க்கத்திற்கு முரணானவையாகும். அதிலும் குறிப்பாக இறந்தவர் வீட்டில்
அன்றைய தினமே நடத்தப்படும் விருந்து ஈவு இரக்கம் ஆகியவற்றுக்கு எதிராக
விடுக்கப்படும் சவாலாகும்.
மார்க்கத்திற்கு
முரணான, சம்பிரதாய விருந்துகள் இன்று சமூக
நிர்ப்பந்தங்களாகி விட்டன. மார்க்கத்தில் அனுமதிக்கப்பட்ட திருமணம், புதுமனை புகுவிழா விருந்துகள் கூட
கடன் வாங்கி வைக்கப்படும் போது அவையும் சமூக நிர்ப்பந்தங்களாகி விடுகின்றன.
இன்று சமுதாயத்தில் கல்யாண வீட்டில்
விருந்து நடத்தப்படுவது ஒரு தன்மானப் பிரச்சனையாகி விட்டது. அதனால் எப்படியாவது, கடன் வாங்கியாவது விருந்தை நடத்தி
விடுகின்றனர். எங்குமே கடன் கிடைக்கவில்லையெனில் இருக்கும் வீட்டை விற்று விருந்து
வைக்கின்றனர். கண்ணை விற்று சித்திரம் வாங்குதல் என்ற பழமொழிக்கேற்ப இன்று வீட்டை
விற்றேனும் விருந்து வைக்கும் கலாச்சாரம் தலைவிரித்தாடுகின்றது.
உதாரணத்திற்கு வீட்டில் இரு
சகோதரர்களுக்கு மத்தியில் பாகப்பிரிவினை ஏற்படுகின்றது என்று வைத்துக் கொள்வோம்.
நான்கு இலட்சம் பெறுமான வீட்டில் இரண்டு இலட்சம் ரூபாயை அண்ணன் தம்பியிடம்
வழங்குகின்றார். வீட்டில் தன்னுடைய பாகத்திற்காக வாங்கிய இரண்டு இலட்ச ரூபாயில்
ஒரு இலட்சத்திற்கு ஒரு நிலத்தை வாங்கி விட்டு, மீதி ஒரு இலட்சத்தை வாடகை முன்பணமாக செலுத்தினால் அதை நாம்
பாராட்டலாம். அல்லது ஒரு இலட்சம் ரூபாயை வாடகை முன்பணமாக செலுத்தி விட்டு மீதியில்
ஒரு தொழில் தொடங்குகின்றான் என்றால் அதையும் நாம் பாராட்டலாம்.
ஆனால் என்ன நடக்கின்றது? ஒரு இலட்சத்தை வாடகை முன்பணமாக
செலுத்தி விட்டு,
மீதியை விருந்து வைத்தே
காலியாக்குகின்றான். விருந்து வைப்பது மார்க்கத்தில் அனுமதிக்கப்பட்டிருந்தாலும்
இது போன்று வாடகைக்குக் குடி போகும் போதெல்லாம் விருந்து வைக்க வேண்டும் என்று
மார்க்கம் யாரையும் நிர்ப்பந்திக்கவில்லை. பொதுவாக திருமண விருந்து உட்பட
அனுமதிக்கப்பட்ட எந்த விருந்தையும் கடன் வாங்கி வைக்க வேண்டும் என்றோ அல்லது
குடும்பத்தின் தேவையைப் புறக்கணித்து விட்டு விருந்து வைக்க வேண்டும் என்றோ
மார்க்கம் வலியுறுத்தவேயில்லை.
நிச்சயமாக இந்த மார்க்கம் எளிதானது.
இம்மார்க்கத்தை யாரும் (தம்மீது) சிரமமானதாக ஆக்கிக் கொண்டால் அவரை அது மிகைத்து
விடும். எனவே நடுநிலைமையை மேற்கொள்ளுங்கள். இயன்றவற்றைச் செய்யுங்கள்.
நற்செய்தியையே சொல்லுங்கள். காலையிலும் மாலையிலும் இரவில் சிறிது நேரமும்
(அல்லாஹ்விடம்) உதவி தேடுங்கள் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள்
கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி),நூல்: புகாரி 39
அப்துர்ரஹ்மான் பின் அவ்ஃப் (ரலி)
அவர்கள் மதீனவுக்கு வந்த போது, அவர்களையும்
ஸஅது பின் ரபீஉ (ரலி) அவர்களையும் நபி (ஸல்) அவர்கள் சகோதரர்களாக ஆக்கினார்கள்.
ஸஅது (ரலி) வசதி படைத்தவர்களாக இருந்தார். அவர், அப்துர்ரஹ்மான் (ரலி)யிடம், “எனது
செல்வத்தை சரிபாதியாகப் பிரித்துத் தருகிறேன். (என் மனைவியரில் ஒருத்தியை
விவாகரத்துச் செய்து) உமக்கு மணம் முடித்துத் தருகின்றேன்” என்று கூறினார். அதற்கு
அப்துர்ரஹ்மான் (ரலி), “உமது
குடும்பத்திலும் செல்வத்திலும் அல்லாஹ் பரக்கத் செய்வானாக! எனக்குக் கடைவீதியைக்
காட்டுங்கள்”
என்று கூறினார். அவர் பாலாடைக்
கட்டியையும் நெய்யையும் இலாபமாகப் பெற்று அவர் தங்கியிருந்த வீட்டாரிடம் கொண்டு
வந்தார். சிறிது காலத்திற்குள் நறுமணப் பொருளின் கறையுடன் வந்தார். அவரிடம் நபி
(ஸல்) அவர்கள்,
“என்ன விசேஷம்?” என்று கேட்டார்கள். அதற்கவர், “அல்லாஹ்வின் தூதரே! நான் ஒரு அன்சாரிப் பெண்ணை மணமுடித்துக்
கொண்டேன்” என்றார். நபி (ஸல்) அவர்கள், “அவருக்கு என்ன மஹர் கொடுத்தீர்கள்?” என்று கேட்டார்கள். “ஒரு பேரீச்சங் கொட்டை எடைக்குத்
தங்கம்” என்று பதில் கூறினார். அதற்கு, “ஓர் ஆட்டையேனும் மணவிருந்தாக
அளிப்பீராக!”
என்று நபி (ஸல்) அவர்கள்
கூறினார்கள்.
அறிவிப்பவர்: அனஸ் (ரலி), நூல்: புகாரி 2048, 2049
இந்த ஹதீஸின்படி ஒருவர் திருமண
விருந்து வைக்கின்றார் என்றால் நிச்சயமாக அது அல்லாஹ்விடத்தில் கூலி வழங்கப்படக்
கூடிய, செலவழித்த பணத்துக்கெல்லாம் பரிகாரம்
கிடைக்கக்கூடிய ஒரு வணக்கமாக அமைந்து விடுகின்றது. ஆனால் மார்க்கத்தில் கடமையான
ஒன்றல்ல! ஹஜ் போன்ற கடமையான வணக்கத்தைக் கூட கடன் வாங்கியோ அல்லது இருக்கின்ற
வீட்டை விற்றோ செய்ய வேண்டும் என்று மார்க்கம் கூறாத போது இது போன்ற விருந்துக்காக
கடன் வாங்குவது அல்லது வீட்டை விற்பது எந்த அடிப்படையில் சரியாகும்?
இப்படி எங்கும் விருந்து எதிலும்
விருந்து என தொற்றிக் கொண்ட விருந்து மயம் தொடர்வதற்கு உரிய காரணங்கள் இரண்டு!
முதலாவது காரணம் விமர்சன பயமும் வெட்கமும் ஆகும்.
“நான் இந்த உறவினர் வீட்டில்
சாப்பிட்டேன். அந்த வீட்டில் சாப்பிட்டேன். அவர்களெல்லாம் நீ ஏன் விருந்து
வைக்கவில்லை என்று கேட்டால் நான் என்ன பதில் சொல்வேன்? என்னப்பா ஒரு சாப்பாடு போடக் கூடாதா? என்று கேட்டால் எனக்கு மானம் போகிற
மாதிரி இருக்கின்றதே!’ இது தான்
விருந்து வைப்பவர்கள் கூறும் காரணமும் பதிலும் ஆகும்.
இத்தனைக்கும் அந்த வீட்டிலெல்லாம்
சாப்பிட்டு விட்டு அதற்கான கட்டணத்தை அன்பளிப்பு என்ற பெயரில் மொய்யாக செலுத்தி
விட்டுத் தான் வந்திருப்பார். இந்த அடிப்படையில் ஒரு உணவு விடுதியில் சாப்பிடுவது
போல் காசைக் கொடுத்து விட்டு சாப்பிட்டு விட்டு வருகின்றார். இது எப்படி
விருந்தாகும் என்று யோசிக்காமல், அவர்
விருந்து போட்டார், இவர்
விருந்து போட்டார், நானும்
விருந்து போடாவிட்டால் என்னை எல்லோரும் விமர்சிப்பார்கள் என்று மக்களின்
விமர்சனத்துக்குப் பயந்து இவ்வளவு பெரிய விருந்து போடுகின்றார். கடன் வாங்கி
விருந்து போடுகின்றார். அல்லது தன்னுடைய குடும்ப முன்னேற்றத்திற்கான ஓர்
அத்தியாவசியத் தேவையைப் புறந்தள்ளி விட்டு அல்லது தனது வீட்டை விற்றுத் தீர்த்து
விட்டு விருந்து வைக்கின்றார். இங்கு இந்த விருந்து நன்மையை நாடப்படாத விருந்தாகி
விடுகின்றது. இங்கு இறையச்சம் காற்றில் பறக்க விடப்படுகின்றது. இவர் மக்களுக்கு
அஞ்சுகின்றார்.
وَاِذْ تَقُوْلُ لِلَّذِىْۤ اَنْعَمَ اللّٰهُ عَلَيْهِ
وَاَنْعَمْتَ عَلَيْهِ اَمْسِكْ عَلَيْكَ زَوْجَكَ وَاتَّقِ اللّٰهَ وَتُخْفِىْ
فِىْ نَفْسِكَ مَا اللّٰهُ مُبْدِيْهِ وَتَخْشَى النَّاسَ ۚ وَاللّٰهُ اَحَقُّ
اَنْ تَخْشٰٮهُ ؕ فَلَمَّا قَضٰى زَيْدٌ مِّنْهَا وَطَرًا زَوَّجْنٰكَهَا لِكَىْ
لَا يَكُوْنَ عَلَى الْمُؤْمِنِيْنَ حَرَجٌ فِىْۤ اَزْوَاجِ اَدْعِيَآٮِٕهِمْ
اِذَا قَضَوْا مِنْهُنَّ وَطَرًا ؕ وَكَانَ اَمْرُ اللّٰهِ مَفْعُوْلًا
யாருக்கு அல்லாஹ் அருள்
புரிந்து (முஹம்மதே!) நீரும் அவருக்கு அருள் புரிந்தீரோ, அவரிடம் “உமது மனைவியை உம்மிடமே வைத்துக்கொள்!
அல்லாஹ்வை அஞ்சிக்கொள்” என்று
நீர் கூறியதை எண்ணிப் பார்ப்பீராக! அல்லாஹ் வெளிப்படுத்த இருந்ததை உமது மனதுக்குள்
மறைத்துக் கொண்டீர். மனிதருக்கு அஞ்சினீர்! நீர் அஞ்சுவதற்கு அல்லாஹ்வே
தகுதியானவன்.
(அல்குர்ஆன் 33:37)
(அல்குர்ஆன் 33:37)
இந்த வசனத்தில் எல்லாம் வல்ல அல்லாஹ் நபி
(ஸல்) அவர்களை நோக்கி விமர்சனத்துக்கு அஞ்சாமல் தன்னையே அஞ்சும்படி
கட்டளையிடுகின்றான். அந்த விமர்சன பயம் தான் இன்று மக்களை, இந்த அளவுக்குப் பொருளாதாரத்தைச்
செலவு செய்வதற்குக் காரணமாக அமைகின்றது.
அடுத்த காரணம் புகழ்ச்சி! எதற்கும்
மயங்காத மனிதன் புகழுக்கு மயங்கி விடுகின்றான். யார் எந்த வணக்கத்தைச் செய்யும்
போதும் மக்கள் புகழ வேண்டும் என்பதற்காக செய்யத் துவங்கி விட்டால் நிச்சயமாக அது
முகஸ்துதியாக ஆகி விடும். ஒரு மனிதன் தான் இறந்த பிறகும் புகழப்பட வேண்டும்
என்பதற்காக தன்னையே அழித்து, தன்னுடைய
உயிரைக் கூட தியாகம் செய்கின்றான். புகழுக்காக உயிரையே தியாகம் செய்யும் போது
சொத்துக்களை ஏன் விற்க மாட்டான்.
இவர் இத்தனை பேருக்கு விருந்து
போட்டார், அவர் ஊரை அழைத்து விருந்து போட்டார்
என்றெல்லாம் புகழப்பட வேண்டும் என்பதற்காகவும் இந்த விருந்துகள் வைக்கப்படுகின்றன.
அதனால் தான் சொத்துக்களை விற்று அல்லது கடன் வாங்கி இந்த விருந்துகளை
வைக்கின்றார்கள்.
எனவே விமர்சன பயம் அல்லது புகழ் ஆகிய
இரண்டுக்காக வலீமா எனும் வணக்கத்தை நாம் செய்கின்ற போது அதில் இக்லாஸ் அடிபட்டுப்
போகின்றது. அத்தகைய வணக்கம் மறுமையில் மேற்கண்ட நபரின் முகத்தில் வீசி
எறியப்படுகின்றது. எனவே இது போன்ற அடிப்படையிலான விருந்துகளிலிருந்து நாம் விலகிக்
கொள்ள வேண்டும்.
நபி (ஸல்) அவர்கள் கைபருக்கும்
மதீனாவுக்கும் இடையில் (உள்ள சத்துஸ்ஸஹ்பா என்னுமிடத்தில் ஸஃபிய்யா பின்த் ஹுயை
அவர்களை மணமுடித்து) மூன்று நாட்கள் தங்கினார்கள். அங்கு ஸஃபிய்யா அவர்களுடன் வீடு
கூடினார்கள். அப்போது நபி (ஸல்) அவர்களின் வலீமா – மணவிருந்துக்கு முஸ்லிம்களை நான் அழைத்தேன். அந்த விருந்தில்
ரொட்டியோ, இறைச்சியோ இருக்கவில்லை. நபி (ஸல்)
அவர்கள், பிலால் (ரலி) அவர்களிடம் தோல்
விரிப்பைக் கொண்டு வருமாறு உத்தரவிட அவ்வாறே அது விரிக்கப்பட்டது. பிறகு
பேரீச்சம்பழம்,
பாலாடைக்கட்டி, நெய் போன்றவற்றை இட்டார்கள். (ஹைஸ்
எனப்படும் எளிமையான உணவைத் தயாரித்து மக்களுக்கு விருந்தளித்தார்கள்)
அறிவிப்பவர்: அனஸ் (ரலி), நூல்: புகாரி 4213
திருமணம் போன்ற அனுமதிக்கப்பட்ட
விருந்தாக இருந்தாலும் நம்முடைய சக்திக்கு உட்பட்டுத் தான் வைக்க வேண்டும். கடன்
வாங்கியோ அல்லது கையில் உள்ளதை விற்றோ வைக்கக் கூடாது. மேற்கண்ட ஹதீஸைப் பின்பற்றி
நமது சக்திக்கு உட்பட்டு இருப்பதை வைத்து விருந்து கொடுத்துக் கொள்ளலாம்.
80களுக்குப் பின்னால் எழுந்த ஏகத்துவ
எழுச்சியின் பயனாய், இன்று
சமுதாயத்தில் மார்க்கத்திற்கு முரணான விருந்துகளுக்கு ஓரளவுக்கு மூடு விழா
நடத்தப்பட்டு வருகின்றன. இது ஒரு நல்ல சமுதாய மாற்றம்! மறுமலர்ச்சி! ஆனால் அனுமதிக்கப்பட்ட
விருந்துகளைப் பொறுத்த வரை ஏகத்துவ இளைஞர்களையும் மீள முடியாத அளவுக்குக் கவ்விப்
பிடித்திருக்கும் மயக்கமாக இந்த விருந்து மயக்கம் அமைந்துள்ளது. அதாவது கடன்
வாங்கியாவது விருந்து வைக்க வேண்டும் என்ற நிர்ப்பந்தம் உள்ளது.
இந்த நிர்ப்பந்தங்களை உடைத்தெறிந்து, எளிய திருமணங்களை நடத்திக் காட்டும்
பொறுப்பு இளைய ஏகத்துவவாதிகளுக்கு இருக்கின்றது.
அனாச்சாரமில்லாத, பித்அத்துகள் இல்லாத ஆனால் அதே சமயம்
பெரிய அளவிலான விருந்துகள் வைத்து நடத்தப்படும் திருமணங்கள் நிறையவே நடக்கின்றன.
இன்றைய தேவையும் அவசியமும் எளிமையான முறையில் நடத்தப்படும் முன்மாதிரி திருமணங்கள்
தான். இந்த முன்மாதிரியைப் படைப்பது இன்றைய ஏகத்துவ இளைஞர்களின் கடமையாகும்.
வலீமா விருந்து என்பது ஒரு சுன்னத்
என்ற அடிப்படையில் தான் இந்த விருந்துகள் நடத்தப்படுகின்றன. இந்த சுன்னத்தைப்
புறக்கணிக்க வேண்டும் என்று நாம் கூறவில்லை. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள்
காலத்திலும் இந்த சுன்னத் பேணப்பட்டது. ஆனால் நபித்தோழர்கள் எதற்கு முன்னுரிமை
அளிக்க வேண்டுமோ அதற்கு முன்னுரிமை அளித்தார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள்
கூறியது போன்று உறவினர்களை ஆதரித்தார்கள்.
ஒருவருக்கொருவர் கருணை புரிவதிலும்
அன்பு செலுத்துவதிலும் இரக்கம் காட்டுவதிலும் இறைநம்பிக்கையாளர்களை ஓர் உடலைப்
போன்று நீ காண்பாய். (உடலின்) ஓர் உறுப்பு சுகவீனமடைந்தால் அதனுடன் மற்ற
உறுப்புகளும் (சேர்ந்து கொண்டு) உறங்காமல் விழித்துக் கொண்டிருக்கின்றன. அத்துடன்
(உடலும்) காய்ச்சல் கண்டு விடுகின்றது
(நூல்: புகாரி 6011)
என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்)
அவர்கள் கூறுவது போல்
சமுதாயத்தின் ஓர் உறுப்பு கடன்
பட்டான் என்றால் அவனைக் கை கொடுத்து நபித்தோழர்கள் தூக்கினார்கள்.
ஆனால் இன்று என்ன நடக்கின்றது? தன் மகன் மருத்துவக் கல்லூரியில்
சேர்வதற்கு அல்லது பொறியியல் கல்லூரியில் சேர்வதற்கென்று ஒரு லட்சம் தேவை என்று
ஒருவர் கேட்கும் போது உறவினர்களில் பணக்கார உறவினர் அவரை ஏறெடுத்தும் பார்க்க
மாட்டார். ஆனால் அதே சமயம் ஊர் மெச்சும் அளவுக்குப் பந்தல் போட்டு பல லட்ச
ரூபாயில் பந்தி பரிமாறுவார்.
கடன் பட்டு தன் வீட்டை விற்பான். தன்
கடனைக் கழிக்க முடியாமல் கண்ணீர் மல்க வீட்டை விற்பான். ஆனால் அதே தெருவில்
வசிக்கும் செல்வந்தர் பல இலட்ச ரூபாய் செலவில் விருந்து போடுவார். இப்படியொரு நிலை
நபித்தோழர்கள் காலத்தில் நடந்ததில்லை. இது போன்று பாதிக்கப்பட்டவர்களுக்கு அவர்கள்
உதவி செய்யத் தவறியதில்லை.
அந்த நிலை என்றைக்கு நம்மிடம்
வருகின்றதோ அன்றைக்குத் தான் இந்த வலீமா விருந்து, சுன்னத் என்று சொல்லப்படுவதற்கு ஒரு சரியான அர்த்தம் இருக்க
முடியும். அப்படி ஒரு நிலையைக் கொண்டு வருவது ஏகத்துவ இளைஞர்களின் கைவசத்தில் தான்
இருக்கின்றது. அவர்கள் இத்தகைய சமூக நிர்ப்பந்தங்களுக்கு சமாதி கட்டி எளிமைத்
திருமணங்களின் முன்மாதிரியாகத் திகழ வேண்டும்.
எம். ஷம்சுல்லுஹா