![]() |
திருப்பூர்:
பொங்கி வரும் வெள்ளநீரை பொருட்படுத்தாது சீறிவந்து தீண்டிய கண்ணாடி
விரியன் பாம்பை கண்டும் பயப்படாது உயிரை துச்சமென மதித்து ஒரு
குடும்பத்தையே காப்பாற்றிவிட்டு பாம்புக்கடி சிகிச்சைக்காக மருத்துவமனையில்
அனுமதிக்கப்பட்டிருக்கும் இப்ராஹிம் அனைவராலும் ஹீரோவாக போற்றப்படுகிறார்
திருப்பூர்,மங்கலம்
ரோடு, கோம்பைத்தோட்டத்தை சேர்ந்த யாக்கூப் என்பவரது மகன் முஹமது இப்ராஹிம்
(33); இவர் ஒரு சுமை தூக்கும் தொழிலாளி ஆவார். இப்ராஹிம் வீடு
நொய்யலாற்றின் கரையோரம் இருந்ததால் கடந்த 6ம் தேதி நள்ளிரவில்
நொய்யலாற்றில் வெள்ளம் வந்த்தை கண்ட அவர் தனது மூன்று குழந்தைகள், மனைவி,
தந்தை மற்றும் அருகில் உள்ளவர்களை மேடான பகுதிக்கு வருமாறு சத்தம்
போட்டார். அவரின் சத்தத்தை கேட்ட பலரும், பாதுகாப்பாக மேட்டுப்பகுதிக்கு
சென்று உயிர் தப்பினர்.
இந்நிலையில்,
அருகிலுள்ள காயிதே மில்லத் நகருக்கும் வெள்ளம் வந்து விடும் என்பதால்,
அங்குள்ளவர்களை காப்பாற்ற ஓடினார் அங்கும் வெள்ளம் சூழ்ந்து நின்றது
அங்குள்ள வீடு ஒன்றில் குழந்தைகளும், பெரியவர்களும் சிக்கியுள்ளதாக,
அருகில் உள்ளவர்கள் கூறியதை கேட்ட இப்ராஹிம் உடனடியாக அந்த வீட்டுக்குள்
சென்றார். வீட்டுக்குள், மார்பு வரை தண்ணீர் சூழ்ந்திருந்தது. விட்டத்தில்
குழந்தைகளும் பெரியவர்களுமாக நான்கு பேர் உட்கார்ந்து காப்பாற்றக் கூறி
சத்தம் போட்டனர்.
அவர்களை காப்பாற்ற இப்ராஹிம் விட்டத்தில் ஏற முயன்றபோது அங்கு கண்ணாடி விரியன் பாம்பு ஒன்று சீறிக்கொண்டிருந்தது.
ஒரு கணம்
யோசித்த இப்ராஹிம், விட்டத்தின் மேலேறி திடீரென பாம்பின் தலையை பிடித்தார்.
ஆனால் அவர் பிடித்த அதே வேகத்தில் பாம்பு அவரின் இடது கை பெருவிரலை
கடித்து விட்டது. உயிர் போகிற வலியுடன் கொடிய விஷமுள்ள பாம்பை தூக்கி
வெளியே எறிந்தார். குழந்தைகளையும், பெரியவர்களையும் கஷ்டத்துடன் வெளியே
கொண்டு வந்து சேர்த்தார். வெளியே இருந்தவர்கள், பாம்பை அடித்துக் கொன்றனர்.
விஷம் தலைக்கேறியதால் இப்ராஹிம் மயங்கி சரிந்தார்.
உடனே
அருகில் இருந்தவர்கள், அவரை, திருப்பூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
அங்கு அளித்த சிகிச்சைக்கு உரிய பலன் கிடைக்கவில்லை என்பதால், உறவினர்கள்
உதவியுடன், அவிநாசியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக
சேர்க்கப்பட்டார். தீவிர சிகிச்சை பலனாக, அவர் தற்போது அபாய கட்டத்தை
தாண்டி விட்டதாக மருத்துவமனை நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.
உயிரை
பணயம் வைத்து, நான்கு உயிர்களை காப்பாற்றிய இப்ராஹிம் மனைவி பாத்திமா
கூறியதாவது: யாருக்கு எப்போது அடிபட்டாலும் முதள் ஆளாய் நின்று
மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வார். வெள்ளம் வந்தபோது, எங்களது குழந்தைகளை
பற்றி கூட கவலைப்படாமல், பிறரை காப்பாற்ற சென்றபோது, பாம்பு கடித்தது.
இருந்தாலும், அதைப்பற்றி கவலைப்படாமல், "அவர்கள் எவ்வாறு உள்ளனர்,' என்று
கேட்கிறார். எங்கள் வீட்டுக்குள் வெள்ளம் புகுந்து மூன்று குழந்தைகளின்
சான்றிதழ்கள், புத்தகம் எல்லாம் போய் விட்டன. என்ன செய்வதென்றே
தெரியவில்லை. பக்ரீத் பண்டிகையின்போது இவ்வாறு ஏற்பட்டுள்ளது வருத்தம்
அளிக்கிறது.
எனது
கணவரை எப்படியாவது இறைவன் காப்பாற்றி விடுவார் என்ற நம்பிக்கை எனக்கு
உள்ளது, என்று கண்ணீர் மல்க பேசினார். அவிநாசி மருத்துவமனையில் சிகிச்சை
பெற்று வரும் முஹமது இப்ராஹிமை எம்.எல்.ஏ., கருப்பசாமி உட்பட பலர்
சந்தித்து, அவரது மனைவி, தந்தைக்கும் ஆறுதல் கூறினர். தன்னுயிரை பணயம்
வைத்து பிற உயிர்களை மனிதநேயத்துடன் காப்பாற்றிய இப்ராஹிமை, பலரும் ஹீரோவாக
நினைத்து பாராட்டுகின்றனர்.
______________________________________________________________________________________________
______________________________________________________________________________________________