உங்கள் அடுத்த கம்ப்யூட்டராகும் “டேப்ளட் பிசி”

கம்ப்யூட்டர் உலகம் தற்போது நான்கு முனைச் சந்திப்பில் நின்று கொண்டிருக்கிறது. எந்தப் பக்கம் எட்டு எடுத்து வைப்பது என்று புரியாமல் உள்ளது. இன்றைக்கு பலருக்கு, முதல் கம்ப்யூட்டர் எது என்றால் அது பெர்சனல் கம்ப்யூட்டராக இல்லை. ஸ்மார்ட் போனாகத்தான் உள்ளது. ஒரு பெர்சனல் கம்ப்யூட்டர் வீட்டில் அல்லது அலுவலகத்தில் ஒரு மேஜையில் அமர்ந்து கொண்டு செயல்படுகிறது. ஆனால் ஸ்மார்ட் போன்கள் நாம் எங்கு சென்றாலும் உடன் வருகின்றன. அதன் மூலம் நம் வாழ்க்கையின் ஒரு பகுதியாக மாறிவிட்டன. எவ்வளவுதான் திறனுடன் செயல்பட்டாலும், ஒரு ஸ்மார்ட் போன், பெர்சனல் கம்ப்யூட்டராக முழுமையாக இடம் பெறாது. எனவே தான் பெர்சனல் கம்ப்யூட்டருக்கும், ஸ்மார்ட் போனுக்கும் இடையே ஒரு சாதனம் இரண்டின் பயன்பாட்டினையும் முழுமையாகத் தரும் வகையில் தேவையாய் இருந்தது. அந்த இடத்தில் டேப்ளட் பிசி வந்து நம் தேவைகளை நிறைவு செய்து வருகிறது. இதனால், கம்ப்யூட்டர் பயன்பாடு தற்போது இரு வகை கணினிகளில் மேற்கொள்ளப்பட்டு, எதில் தொடர்வது என்ற கேள்விக் குறியுடன் தொடர்கிறது. ஆனால், அண்மையில் லாஸ்வேகாஸ் நகரில் நடந்து முடிந்த தகவல் தொழில் நுட்பக் கருத்தரங்கில் அறிமுகம் செய்யப்பட்ட பட்டயக் கணிப்பொறிகளைக் (Tablet PC) காண்கையில், அதன் மாடல் எண்ணிக்கையைக் கருத்தில் கொள்கையில், இவை மொத்தமாக மக்களை சென்றடையும் நாள் வெகு தூரத்தில் இல்லை என்றே தெரிகிறது. எனவே நம்மைத் தயார்படுத்திக் கொள்ளும் வகையில், அதன் சில அம்சங்களை இங்கு பார்க்கலாம்.
1. பழைய மாடலில் மாற்றம்: தற்போதைய டேப்ளட் பிசி இதன் முன்னோடிகளிலிருந்து முற்றிலும் வேறுபட்டுள்ளது. முதலில் ஒரு டேப்ளட் பிசி, லேப்டாப் கம்ப்யூட்டரில், சுழலும் திரை ஒன்றை இணைத்தது போல வடிவமைக்கப்பட்டது. ஆனால் மக்களிடம் இவை எடுபடவில்லை.