மயில் மீன்
இயற்கை வளம் நிறைந்த மன்னார் வளைகுடா கடல் பகுதியில் அரியவகை கடல்வாழ்உயிரினங்கள் 3600க்கும் மேற்பட்டவை உள்ளன. இவற்றில் துடுப்பு மீன்கள்,கணுக்காலிகள், கடல் அட்டை, கடல் குதிரை, கணவாய் மீன்கள், ஓடுடைய மீன்கள்,கடல் ஆமைகள், கடல் பாலூட்டிகள், பவளப்பாறைகள், கடற்புற்கள், கடற்பாசிகள் போன்ற உயிரினங்கள் ஏராளமானவை இப்பகுதியில் பல்கிப் பெருகியுள்ளன.
இது போன்ற கடல்வளம் உலகில் வேறு எந்த நாட்டிலும் இல்லை என்கிறார்கள். எனவே தான் இந்தியாவில் முதல் முதலாக 1986 ஆம் ஆண்டு ராமேசுவரம் முதல் கன்னியாகுமரி வரையிலான கடல்வளம் நிறைந்த இப்பகுதியை இந்திய அரசு தேசிய கடற்பூங்காவாக அறிவித்துள்ளது. கடல்நீரின் மேல்பகுதி, நடுப்பகுதி மற்றும் தரைப்பகுதிகளிலும் அலைபடும் இடங்களில் இருந்து ஆழ்கடல் பகுதிகள் வரை சூழ்நிலைக்குத் தகுந்தவாறு பல உயிரினங்கள் வாழ்ந்தாலும் ஆழ்கடலில் மிகமிக வேகமாக செல்லும் ஓர் அரிய ஜீவன்களில் ஒன்றே மயில் மீன்.
பறவைகளில் மயிலுக்கு தோகைகள் இருப்பதைப் போல இவ்வகை மீன்களுக்கும் தோகைகள் போன்று இறக்கைகள் இருப்பதால் இதனை மயில்மீன் என்கிறார்கள். ஆங்கிலத்தில் இதனை ள்ஹண்ப் ச்ண்ள்ட் என்கிறார்கள். அட்லாண்டிக் செயில் பிஷ்,இந்தோ பசிபிக் செயில்பிஷ் என்றும் இரு வகைகள் உள்ளன. இவ்வகை மீன்களின் மேல்புறத்தில் இரு இறக்கைகளும்,வால் பகுதியில் ஒரு இறக்கையும் இருக்கும். இந்த மீனின் மேல்தாடை கீழ் தாடையை விட இரு மடங்கு பெரிதாக இருக்கிறது. மீனின் உடல்பகுதியில் இருபுறமும் 20க்கும் மேற்பட்ட வெள்ளைநிற வரிக்கோடுகள் காணப்படுகின்றன.
பறவைகளுக்கு அலகு இருப்பது போல இதன் அலகும் சுமார் 10அடி வரை நீளம் உடையதாகவும், மிகவும் கூர்மையானதாகவும் இருக்கிறது. இந்த அலகின் மூலம் படகுகளைக் கூட கொத்தி உடைத்து விடும் சக்தி உடையது. மீனின் மேல்பகுதி கரு ஊதா நிறத்திலும் அடிப்பகுதி வெள்ளை நிறம் கலந்த பிரவுன் கலரிலும் காணப்படுகிறது. ஒரு வருடத்தில் 1.2மீ முதல் 1.5 மீ வரை வளரக் கூடியது.
சுமார் 100கிலோ வரை எடையுடைய இம்மீன்கள் 16 ஆண்டுகள் வரை உயிர் வாழ்கிறதாம். ஒரு மீன் மட்டுமே குறைந்தது 2 லட்சம் மைல்களுக்கு மேல் கடலில் பிரயாணம் செய்வதுடன் வெவ்வேறு கடல் பகுதிகளுக்கும் மாறி, மாறிச் சென்று கொண்டேயிருக்கும்.
ஒரு மீன் மட்டும் 45லட்சம் முட்டைகள் வரை சங்கிலித் தொடர் போல இடுகிறதாம். இடப்பட்ட முட்டைகள் தட்ப, வெட்ப சூழ்நிலைகளைத் தாங்கி அதற்கேற்றவாறு மீன்குஞ்சுகளாக மாறிக் கொள்கின்றன. மத்தி, வஞ்சிரம், கணவாய் மற்றும் தவளைகள் போன்றவையே இவற்றின் விருப்ப உணவு. இந்த மீனும் பெரும்பாலும் மனிதர்கள் சமைத்து சாப்பிடத்தான் பயன்படுகிறது என்றாலும் இவற்றைப் பிடிப்பது மிகவும் அரிதாகவே உள்ளது.
கடல் விட்டு கடல் மாறிச் சென்று கொண்டே இருப்பதால் இவற்றின் இருப்பிடங்களைச் சரியாக அறிந்து கொண்டு அவற்றைப் பிடிக்க முடிவதில்லை. கடலுக்கு அடியில் ஆழமான பகுதியில் ராக்கெட் வேகத்தில் அதாவது ஒரு மணி நேரத்திற்கு 97 கி.மீ வேகத்தில் செல்கிறது இந்த ஃபாஸ்ட் சுவிம்மிங் ஜீவன்.