இஸ்லாமிய மார்க்கம் ஓர் அறிவார்ந்த மார்க்கமென மாற்று மதத்தவர்கள் கூட கூறிக் கொண்டிருக்கும் நேரத்தில் முஸ்லிம்களில் பலர் மூடப்பழக்க வழக்கங்களை மார்க்கத்தின் பெயரால் அரங்கேற்றி வருகின்றார்கள்.
இந்த மூடப் பழக்க வழக்கங்களை அவர்கள் இஸ்லாமிய மார்க்கத்திலிருந்து கற்றார்களா என்றால் நிச்சயமாக இல்லை. மாறாக மாற்று மதத்தினர்களின் செயல்களைக் கண்டு அவர்கள் செய்வதைப் போன்று இவர்களும் செய்கின்றனர். இவ்வாறு மாற்று மதக் கலாச்சாரத்தைப் பின்பற்றக் கூடியவர்கள் நம்மைச் சார்ந்தவர்கள் அல்ல என்று நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.
தனக்குப் பின்னர் முஸ்லிம்கள் பல பித்அத்தான காரியங்களைப் பின்பற்றுவார்கள் என்பதை நபி (ஸல்) அவர்கள் உணர்ந்த காரணத்தினால் தான் பித்அத்துகளை தோற்றுவிக்காத அந்த நபித்தோழர்களுக்கு நபி (ஸல்) அவர்கள், புதுமையான காரியங்களை, பித்அத்துக்களைப் பற்றி எச்சரித்துக் கூறியுள்ளார்கள்.
முஸ்லிம்கள் எந்த அளவுக்கு மாற்று மதக் கலாச்சாரத்தைப் பின்பற்றுவார்கள் என்பதையும் நபி (ஸல்) அவர்கள் தெளிவாகக் கூறியுள்ளார்கள்.
உங்களுக்கு முன்னால் உள்ளவர்களை நீங்கள் ஜானுக்கு ஜான், முளத்திற்கு முளம் பின்பற்றுவீர்கள். அவர்கள் உடும்புப் பொந்தில் நுழைந்தால் நீங்களும் அதில் நுழைவீர்கள் என்று கூறியுள்ளார்கள். (புகாரி 3456)
இவ்வாறு புதிதாக ஒரு பித்அத்தைச் செய்தால் அதைச் செய்தவருக்கு அதன் தீமை கிடைக்கும். இத்துடன் அல்லாமல் இவரைப் பார்த்து யார் யாரெல்லாம் செய்வாரோ அவரின் தீமையும் கிடைக்கும் என்றும் நபி (ஸல்) அவர்கள் பித்அத்தைப் பற்றி எச்சரித்துக் கூறியுள்ளார்கள். இது போன்று நபி (ஸல்) அவர்களின் எச்சரிக்கைகள் பல இருக்கும் போது, இஸ்லாமிய சமுதாயம் இவற்றை எல்லாம் ஒதுக்கி வைத்து விட்டு மனம் போன போக்கில் செல்லக்கூடிய நிலையை தற்காலத்தில் அதிகம் கண்டு வருகிறோம்.