Oct 4, 2020

தடை செய்யப்பட்டவைகளை விற்பது கூடுமா?

 



தடை செய்யப்பட்ட பொருட்களைப் பயன்படுத்துவது எவ்வாறு தடை செய்யப்பட்டுள்ளதோ அது போல் அதை விற்பனை செய்வதும் மார்க்கத்தில் தடுக்கப்பட்டுள்ளது. 

 

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மக்கா வெற்றியின் போது, 'நிச்சயமாக அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் மதுபானம், செத்தவை, பன்றி, உருவச் சிலைகள் ஆகியவற்றை விற்பனை செய்வதைத் தடை செய்துள்ளனர்!' என்று கூறினார்கள். அப்போது அவர்களிடம், 'அல்லாஹ்வின் தூதரே! செத்தவற்றின் கொழுப்புகள் கப்பல்களுக்குப் பூசப்படுகின்றன; தோல்களுக்கு அவற்றின் மூலம் மெருகேற்றப்படுகின்றது; மக்கள் விளக்கெரிக்க அவற்றைப் பயன்படுத்துகின்றனர்; ஆகவே, அதைப் பற்றிக் கூறுங்கள்!' எனக் கேட்கப்பட்டது. அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், 'கூடாது! அது ஹராம்!' எனக் கூறினார்கள். மேலும் தொடர்ந்து, 'அல்லாஹ் யூதர்களைத் தனது கருணையிலிருந்து அப்புறப்படுத்துவானாக! அல்லாஹ் யூதர்களுக்குக் கொழுப்பை ஹராமாக்கிய போது, அவர்கள் அதை உருக்கி விற்று, அதன் கிரயத்தைச் சாப்பிட்டார்கள்!' என்று கூறினார்கள்.

 

அறிவிப்பவர்: ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி)

 

நூல்: புகாரி 2236 

 

ஒரு மனிதர் மதுவை விற்பதாக அறிந்த உமர் (ரலி), 'அவரை அல்லாஹ் சபிப்பானாக! யூதர்களுக்குக் கொழுப்பு ஹராமாக்கப்பட்ட போது, அதை உருக்கி அவர்கள் விற்றதால் அல்லாஹ் அவர்களை அழிப்பானாக' என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதை அவர்கள் அறியவில்லையா?' என்று கேட்டார்கள்.

 

அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)

 

நூல்: புகாரி 2223

 

இந்த ஹதீஸ்களின் அடிப்படையில் எந்தெந்த பொருட்கள் பயன்படுத்தத் தடை செய்யப்பட்டுள்ளனவோ அவற்றை விற்பனை செய்வதும் கூடாது அறியலாம்.


தடை செய்யப்பட்டவைகளைப் பிற மதத்தவர்களுக்கு விற்பதற்கு அனுமதி இல்லை.

 

தடை செய்யப்பட்டவை இரு வகைகளில் உள்ளன. நூறு சதவிகிதம் முற்றிலுமாக தடுக்கப்பட்டவை ஒரு வகை. இது போல் தடை செய்யப்பட்டவைகளை முஸ்லிம்களுக்கும் பிற மதத்தவர்களுக்கும் விற்பதற்கும் அன்பளிப்பு செய்வதற்கும் அனுமதி இல்லை.

 

 

Translate