நோய் நிவாரணம் தருவது யார் ?
உயர் நாயனின் அருள், தூதர், குடும்பத்தார், தோழர்கள், ஃபாத்திமாவின் பிள்ளைகள் மீது உண்டாகட்டுமாக! நான் அவர்களுக்கு ஸலாம் சொல்கின்றேன். ஹுசைனின் ஆன்மாவைப் போற்றுகின்றேன். வேண்டுதல் முன் வைக்கப்படுபவரான அவரிடம் தான் இப்னு அஹ்மத் (என்ற இந்தக் கவிஞனின்) நோய்க்கு நிவாரணம் இருக்கின்றது.
இவை ஹுஸைன் மவ்லிதில் இடம்பெறும் வரிகளாகும்.
பொதுவாக எந்த ஒரு மவ்லிதாக இருந்தாலும் அந்த மவ்லிதின் ஆரம்ப வரிகள் அல்லாஹ்வைப் புகழ்ந்து போற்றி அவனைப் பாராட்டியும் அதன் பின் முஹம்மது (ஸல்) அவர்கள் மீது ஸலாம், ஸலவாத்துச் சொல்லியும் ஏகத்துவத்தின் அடிப்படையில் தான் அருமையாகத் துவங்கும். இவற்றைப் படிக்கவும், பாடவும் ஆரம்பித்தவர், இவை தன்னை ஏகாந்த லயிப்பிலும், ரசிப்பிலும் ஏகத்துவ உலகத்திற்கு இழுத்துச் செல்வதைப் போன்ற ஒரு ஸ்பரிசத்தை உணர்வார்.
அதன் பிறகு வரக்கூடிய இணை வைப்புப் பாடல் வரிகள் முன்னால் சொன்ன ஏகத்துவக் கருத்துகளை அப்படியே தலைகீழாகப் புரட்டி விடும். அப்போது, இணைவைப்பு என்னும் இருட்டறைக்கு, குமட்டலைத் தருகின்ற பிண வாடை வீசும் பிணக் கிடங்கிற்கு நாம் வந்து விட்டோம் என்று உணர்வார். அந்த அவலத்தையும் அலங்கோலத்தையும் தான் இப்போது நாம் இந்தக் கவிதை வரிகளில் பார்க்கின்றோம்.
உயர் நாயனின் அருள், தூதர், குடும்பத்தார், தோழர்கள், ஃபாதிமாவின் பிள்ளைகள் மீது உண்டாகட்டுமாக! நான் அவர்களுக்கு ஸலாம் சொல்கின்றேன். இந்தக் கவிதை வரிகளில் எந்தப் பிரச்சனையும் இல்லை. இதன் பின்னால் வருகின்ற விஷயம் தான் தவ்ஹீத் கருத்தைக் குழி தோண்டி புதைப்பதாக உள்ளது.
ஹுசைனின் ஆன்மாவைப் போற்றுகின்றேன். வேண்டுதல் முன் வைக்கப்படுபவரான அவரிடம் தான் இப்னு அஹ்மத் என்ற (இந்த கவிஞனின்) நோய்க்கு நிவாரணம் இருக்கின்றது.
இதை எழுதிய காயல்பட்டினத்தைச் சார்ந்த முஹம்மது பின் அஹ்மத் என்பவர் "வேண்டுதல் வைக்கப் படக்கூடியவர் ஹுசைன் (ரலி)' என்று கூறுகின்றார்.
முதலில் இந்தக் கவிஞன் செய்கின்ற குற்றம், இறந்து போன ஹுசைனிடம் உதவி தேடுவதாகும். இது மாபெரும் இணை வைப்பாகும்.,
ஏனெனில், எல்லாம் வல்ல அல்லாஹ் தனது திருக்குர்ஆனில்
அல்லாஹ்வையன்றி யாரை அழைக்கிறார்களோ அவர்கள் எதையும் படைக்க மாட்டார்கள். அவர்களே படைக்கப்படுகின்றனர். அவர்கள் இறந்தவர்கள்; உயிருடன் இருப்போர் அல்லர். "எப்போது உயிர்ப்பிக்கப்படுவார்கள்" என்பதை அவர்கள் அறிய மாட்டார்கள்.
அல்குர்ஆன் 16:20, 21
நீங்கள் அவர்களை அழைத்தால் உங்கள் அழைப்பை அவர்கள் செவியுற மாட்டார்கள். செவியேற்பார்கள் என்று வைத்துக் கொண்டாலும் உங்களுக்குப் பதில் தர மாட்டார்கள். கியாமத் நாளில் நீங்கள் இணைகற்பித்ததை அவர்கள் மறுத்து விடுவார்கள். நன்கறிந்த (இறை)வனைப் போல் உமக்கு எவரும் அறிவிக்க முடியாது.
அல்குர்ஆன் 35:14
இந்த வசனங்கள் இன்னும் இதே கருத்தில் அமைந்த வசனங்கள் மிகத் தெளிவாக இறந்தவர்கள் செவியேற்க மாட்டார்கள் என்று கூறுகின்றன. இந்த அடிப்படையில், இறந்தவர்கள் செவியுறுகின்றார்கள் என்று இந்தக் கவிஞர் நம்புவது வல்ல அல்லாஹ்வுக்கு வைக்கின்ற முதல் இணை வைப்பாகும்.
வேண்டுதல் முன் வைக்கப்படுபவர் ஹுசைன் என்ற வார்த்தையை இவர் பயன்படுத்துகின்றார். ஆனால், வல்ல நாயன் தனது திருக்குர்ஆனில்,
என்னைப் பற்றி எனது அடியார்கள் உம்மிடம் கேட்டால் "நான் அருகில் இருக்கிறேன். பிரார்த்திப்பவன் என்னைப் பிரார்த்திக்கும் போது பிரார்த்தனைக்குப் பதிலளிக்கிறேன். எனவே என்னிடமே பிரார்த்தனை செய்யட்டும்! என்னையே நம்பட்டும். இதனால் அவர்கள் நேர்வழி பெறுவார்கள்'' (என்பதைக் கூறுவீராக அல்குர்ஆன் 2:186) என்று கூறுகின்றான்.
இந்த வசனத்தில் அடியார்கள் தன்னிடம் தான் பிரார்த்திக்க வேண்டும் என்று அல்லாஹ் கூறுகின்றான்.
"பிரார்த்தனை தான் வணக்கமாகும்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறிவிட்டு, பிறகு "என்னை அழையுங்கள்! உங்களுக்குப் பதிலளிக்கிறேன்; எனது வணக்கத்தை விட்டும் பெருமையடிப்போர் நரகத்தில் இழிந்தோராக நுழைவார்கள் என்று உங்கள் இறைவன் கூறுகிறான்'' (40:59) என்ற வசனத்தை ஓதினார்கள்.
அறிவிப்பவர்: நுஃமான் பின் பஷீர் (ரலி)
நூல்: திர்மிதீ 3170, 2895, 3294
இந்த ஹதீஸில், நபி (ஸல்) அவர்களும், துஆ ஒரு வணக்கமாகும் என்று குறிப்பிடுகின்றார்கள்.
ஆனால், இவரோ ஹுசைனிடத்தில் பிரார்த்திக்க வேண்டும் என்று கூறுகின்றார். இந்த அடிப்படையில் இவர் இறைவனுக்கு வைக்கின்ற இரண்டாவது இணை வைப்பாகும்.
அடுத்து, நோய் நிவாரணம் ஹுசைனிடம் தான் இருக்கின்றது என்று கூறுகின்றார். இது அடுத்த இந்தக் கவிஞர் செய்கின்ற அடுத்த இணை வைப்பாகும்.
மனிதனுக்கு நோய்களை ஏற்படுத்துபவனும், அதை நீக்குபவனும் அல்லாஹ் தான். இதில் நபிமார்கள் உட்பட யாருக்கும் அதிகாரம் இல்லை என்பது இஸ்லாத்தின் அடிப்படைக் கொள்கை.