Sep 27, 2010

இஸ்லாத்தில் அடைப்படைச் சித்தாந்தங்கள் இரண்டு.
ஒன்று: இணைவைக்காமல் அல்லாஹ்வை மட்டும் வணங்கி
வழிப்படுவது. இரண்டு: வழிபாடுகளின் முறைகளை
அல்லாஹ்வின் சட்டங்களிலிருந்தும், அவன் தூதர்
காட்டித்தந்த வாஜிப், முஸ்தஹப் என்ற விதிகளிலிருந்தும்
எடுத்து வழிபடுவது. தூதுவர்கள் ஒவ்வொருவரும்
ஒவ்வொரு காலத்தில் தோன்றியிருக்கிறார்கள்.
அவ்வப்போதுள்ள நபிமார்களின் ஏவல்களுக்கொப்ப
அல்லாஹ்வுக்கு வணக்கங்கள் செலுத்தப்பட்டன.
யூதர்களின் தௌராத் வேதம் உறுதி குலையாமல்
நேர்மையாக இருந்த காலத்தில் அதன் விதிப்படி
வணக்கங்கள் புரிந்தவர்கள் முஸ்லிம்களாக
மதிக்கப்பட்டனர். இன்ஜீலும் அப்படித்தான். அதாவது
இவ்வேதங்களில் மனிதக்கரம் நுழைந்து அவற்றை மாற்றி
மறிப்பதற்கு முன்னர் வேதங்களுக்கொப்ப வணங்கி
வழிபட்டு வந்தவர்களையே முஸ்லிம்களென்று கூறமுடியும்.
இஸ்லாத்தின் தொடக்கத்தில் பைத்துல் முகத்தஸை நோக்கி
நபியவர்கள் தொழுது வந்திருக்கிறார்கள். இந்த நாட்களில்
பைத்துல் முகத்தஸின் பக்கம் திரும்பி நின்று முஸ்லிம்கள்
நிறைவேற்றிய தொழுகை இஸ்லாமிய வணக்கமாக
கருதப்பட்டது. எப்பொழுதிலிருந்து கஃபாவை நோக்கித்
திரும்ப வேண்டுமென்று நபி (ஸல்) அவர்கள்
பணிக்கப்பட்டார்களோ அன்றிலிருந்து கஃபாவை நோக்கித்
தொழுதார்கள். இதுவும் இஸ்லாமியத் தொழுகைதான்.
இனிமேல் கஃபாவை புறக்கணித்து விட்டு பைத்துல்
முகத்தஸை நோக்கி எவன் தொழுகிறானோ அவனது
தொழுகை இஸ்லாத்திற்கு மாறான தொழுகையாகும்.
முஹம்மது (ஸல்) அவர்கள் நபியாக அனுப்பப்பட்ட
பிறகு எவரெல்லாம் அவர்கள் காட்டித்தந்த வாஜிப்,
முஸ்தஹப் போன்ற சட்டங்களை ஒதுக்கி விட்டு
அல்லாஹ்வும், ரஸூலும் சொல்லாத அமல்களை
வணக்கமாக எண்ணி அவற்ரைச் செய்து மனம் போன
போக்கில் வழிபாடுகள் செய்கிறார்களோ அவர்களை
முஸ்லிம்கள் என்று சொல்ல முடியாது. அத்துடன் மனிதன்
செய்கின்ற வாஜிப், முஸ்தஹப் போன்ற
சட்டத்துக்குட்பட்ட அமல்களையெல்லாம் அகில உலகைப்
பரிபாலிக்கும் அல்லாஹ் ஒருவனைக் கருதிச் செய்ய
வேண்டும். இதை அல்லாஹ்வே கூறுகிறான்:
“வேதத்தையுடையவர்கள் தங்களிடம் தெளிவான சான்று
வந்த பின்னர்தான் மாறு செய்து வேறுபட்டனர். ஆனால்
இறைவனுக்கு கலப்பற்ற மார்க்கத்தையே செய்ய
வேண்டும். அல்லாஹ் ஒருவனையே வணங்க வேண்டும்
என்றல்லாமல் வேறு எதையும் அவர்கள் ஏவப்படவில்லை”.
(98:4-5)
“(நபியே!) நிச்சயமாக முற்றிலும் உண்மையான
இவ்வேதத்தை நாம்தாம் உமக்கு இறக்கி
வைத்திருக்கிறோம். எனவே நீர் முற்றிலும் பரிசுத்த
மனதுடன் அல்லாஹ்வை வணங்கி வாரும். தூய வழிபாடு
அல்லாஹ்வுக்கே சொந்தமானது”. (39:2-3)
அல்லாஹ்வைக் கொண்டும் ரஸூலைக் கொண்டும்
ஈமான் கொள்ளுதல், ஏழை எளியோருக்குப் பொருளுதவி
செய்தல், மற்றும் இதர தான-தர்மங்கள் வழிபாடுகள்
புரிதல், அல்லாஹ்வையும் ரஸூலையும் நேசித்தல், மேலும்
சகல முஸ்லிம்கள் அனைத்து வாஜிப்-முஸ்தஹப்பான
ஆகியவையெல்லாம் அல்லாஹ் ஒருவனின் திருப்தியை
மட்டுமே நாடிச் செய்யவேண்டுமென மனிதன்
பணிக்கப்பட்டுள்ளான். இத்தகைய அமல்களுக்கு
சிருஷ்டிகளிடம் கூலி கேட்கலாகாது. அவர்களிடம் துஆ
வேண்டும் படியும், மற்ற எந்த விஷயங்களையும்
முறையிடவோ வேண்டவோ கூடாது. படைப்பினங்களிடம்
எதைக் கேட்க வேண்டும், எதைக் கேட்க கூடாது என்று
இஸ்லாம் வகுத்துத் தந்திருக்கிறது. சிருஷ்டிகளிடம் கேட்க
இஸ்லாம் அனுமதித்தவைக் கூட அவர்களிடம் கேட்பது
வாஜிப், முஸ்தஹப்பான சட்டங்களுக்குட்பட்ட
செய்கையொன்றும் அல்ல. அவை ஜாயிஸ் (அனுமதிக்கப்
பட்டவை) தான். ஜாயிஸாக இருந்தும் கூட சில
இடங்களில்தான் படைப்பினங்களிடம் கேட்பது
ஜாயிஸாகும் (அனுமதிக்கப்படும்). மேலும் ஒன்றைக்
கவனிக்க வேண்டும். ஒருமனிதரிடம் பிறர் வந்து கெஞ்சிக்
கேட்பதற்கு முன்னரே அவன் கொடுக்க வேண்டுமென்று
பணிக்கப்பட்டிருக்கிறான். அவ்வாறெனின் கேட்டல்
என்பது அடியோடு உலகிலிருந்து மாய்ந்து விட
வேண்டுமல்லவா?
இன்சா அல்லாஹ் தொடரும்…

Sep 25, 2010

பாபரி மஸ்ஜித் - முஸ்லிம்களுக்கு மாபெரும் அநீதி ?









பாபரி மஸ்ஜித் இடித்த கிரிமினல் வழக்கு:

அத்வானி கும்பலை நேர்த்தியாக தப்பவிட்ட காங்கிரஸ் கட்சி





கடந்த 1992 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 6ம் தேதியன்று சங்பரிவார பயங்கரவாதிகளால் பாபரி மஸ்ஜித் இடித்து தகர்க்கப்பட்டது. இந்த இடிப்புக்கு முன்பு ரத யாத்திரை என்ற பெயரில் அத்வானி போன்றவர்கள் ரத்த யாத்திரை நடத்தி கரசேவைக்கு ஆள் சேர்த்தனர்.



பொய்யையும் புரட்டையும் அவிழ்த்துவிட்டு பாபரி மஸ்ஜித் ஒரு அவமான சின்னம்; அதை இடிப்பதில்தான் இந்தியாவின் மானமே இருக்கிறது என்ற விதத்தில் பிரசாரத்தை கட்டவிழ்த்துவிட்டனர். கரசேவை என்பது கடப்பாறை சேவை என்றும் தெளிவாக அறிவித்தனர். இந்த சங்பரிவார தலைவர்களின் பேச்சை கேட்டு நாடு முழுவதும் உள்ள ஆர்.எஸ்.எஸ் தலைவர்கள் அயோத்திக்கு வந்து குவிந்தனர்.



அப்படி குவிந்த மக்களுக்கு மத்தியில் அத்வானி போன்றவர்கள் வெறியூட்டி பேசி பாபரி மஸ்ஜிதை இடிக்கத்தூ ண்டினர். அதன்பிறகு முஸ்லிம்களுக்கு சொந்தமான பாபரி மஸ்ஜித் இடித்து நொறுக்கப்பட்டது. இந்த செயல் அனைத்தும் இந்தியாவில் உள்ள அனைத்து மக்களுக்கு மட்டுமல்ல உலகுக்கே தெரியும்.



இப்படி பாபரி மஸ்ஜிதை திட்டமிட்டு தகர்த்த அத்வானி, முரளி மனோகர் ஜோசி, கல்யான் சிங்க, உமா பாரதி, வினய்கத்தியார், ரிதம்பரா உள்ளிட்ட 21 பேர் மீதி ரேபரேலி தனி நீதிமன்றத்தில் சி.பி.ஐ. கிரிமினல் வழக்கு தாக்கல் செய்தது. முறையான ஆவணங்கள் சாட்சிகளோடு இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தால் அத்வானி வகையறா இந்நேரம் கம்பிகளை எண்ணிக்கொண்டிருக்கும்.



அத்வானி கும்பலை தண்டிக்கும் எண்ணம் அன்றைய பிரதமர் நரசிம்மராவுக்கு இல்லை. அதனால் வழக்கு போடுவது போல் வலுவற்ற வழக்கை தாக்கல் செய்து முஸ்லிம்களை ஏமாற்றிய நரசிம்மராவ்; அத்வானி கும்பல் அந்த வழக்கிலிருந்து தப்புவதற்கும் வழிவகுத்து வைத்திருந்தார். பின்னர் அவர் செத்தும் போனார்.



இந்நிலையில் 1999 அக்டோபர் 10 முதல் 2004 மே வரை மத்தியில் வாஜ்பாய் தலைமையில் ஆட்சி அமைந்தது. அப்போது துணைப்பிரதமராக அத்வானி இருந்தார். சி.பி.ஐ. துறை அவர் வசம் கொண்டுவரப்பட்டது. எஜமானரான அத்வானிக்கு எதிராக சி.பி.ஐ. நடந்து கொள்ளமுடியுமா? முடியாது.



அந்த இலக்கணத்தின்படி பாபரி மஸ்ஜித் இடிப்பு கிரிமினல் வழக்கில் சி.பி.ஐ. சும்மா இருந்துவிட்டது. அதன் விளைவாக 2001 மே மாதம் 4ம் தேதியன்று அத்வானி கும்பலுக்கு எதிராக சி.பி.ஐ. போட்ட கிரிமினல் வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது.



தனி நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பை எதிர்த்து அலஹாபாத் உயர்நீதிமன்றத்தின் லக்னோ கிளையில் சி.பி.ஐ மறு ஆய்வு மனு தாக்கல் செய்தது. மறு ஆய்வு மனு தாக்கல் செய்யும்போது புதிய ஆதாரங்களையும், வலுவான வாதங்களையும் வைக்க வேண்டும். அப்படி வைத்திருந்தால் அத்வானி கும்பல் சட்டத்தின் பிடியில் சிக்கியிருக்கும். ஆனால் இந்த தடவையும் சி.பி.ஐ இதை செய்யவில்லை.



பாபரி மஸ்ஜித் இடிப்பு சம்பந்தமாக லிபர்ஹான் ஆணையத்தை அமைத்து பல்லாண்டுகளுக்கு பின்பு அந்த ஆணையத்தின் அறிக்கை பாராளமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டபோது, குற்றவாளிகளான அத்வானி கும்பலை தண்டிக்க மாட்டோம் என்று பட்டவர்த்தனமாக அறிவித்த காங்கிரஸ் கட்சி அலஹாபாத் உயர்நீதிமன்றத்திலும் அத்வானி கும்பலுக்கு ஆதரவாக நடந்துகொண்டது.



இதனால் கீழ் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை திருத்தி அமைப்பதற்கோ அல்லது குறிக்கிடுவதற்கோ தேவையான முகாந்திரம் எதுவும் இல்லை என்று சொல்லி நீதிபதி அலோக் குமார் சிங்க் சி.பி.ஐ.யின் மனுவை தள்ளுபடி செய்துவிட்டார்.



முஸ்லிம்களுக்கு துரோகம் செய்வதில் காங்கிரஸ் வேறு பி.ஜே.பி வேறு அல்ல. இரண்டு கட்சிகளும் ஒன்றையொன்று மிஞ்சிய கட்சிகள் என இதன் மூலம் விளங்குகிறது. அரசியல் ஆதாயத்திற்காக சி.பி.ஐ.யை காங்கிரஸ் கட்சி தவறாக பயன்படுத்துகிறது என்று சமீபத்தில் போராட்டம் நடத்திய பி.ஜே.பி குடியரசு தலைவரை சந்தித்து இது குறித்து மனுவும் அளித்துள்ளது.



ஆம் பாபரி மஸ்ஜித் இடிப்பு கிரிமினல் வழக்கில் அத்வானி கும்பலுக்கு ஆதரவாக சி.பி.ஐ.யை நடக்க செய்து முஸ்லிம்களுக்கு துரோகமிழைத்த காங்கிரஸ் கட்சி அரசியல் ஆதாயத்திற்காகவே இதை செய்துள்ளது என்று முஸ்லிம்கள் பொருமுகிறார்கள். பாபரி மஸ்ஜித் இடிப்பு வழக்கில் அத்வானி கும்பல் குற்றமிழைத்துள்ளது என்று உலகுக்கே தெரியும். இதை நீதிமன்றத்தில் நிரூபிக்க இயலாத சி.பி.ஐ.யின் திறமையை என்னவென்று சொல்லுவது?

Sep 24, 2010

இந்திய வரலாற்றின் கரும்புள்ளி அயோத்தி கி.பி. 1528-2002

babriஇந்திய வரலாற்றின் கரும்புள்ளியாகவும் மதவாத அரசியலுக்கு அடித்தளமாகவும் இருக்கும் அயோத்திப் பிரச்சனை குறித்து ஒரு பார்வை:
கி.பி. 1528: முகலாய மன்னர் பாபரிடம் பணியாற்றிய மீர்பாகி அயோத்தியில் மசூதியைக் கட்டினார்.
கி.பி. 1853: இந்த இடத்தில் 11ம் நூற்றாண்டைச் சேர்ந்த கோயில் இருந்தது என்றும், இது ராமர் பிறந்த இடம் எனவும் இந்துக்கள் உரிமை கொண்டாடினர். அயோத்தியில் இப்பிரச்சனை தொடர்பாக இந்துக்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையே நடந்த மோதலில் 75 பேர் கொல்லப்பட்டனர்.
கி.பி. 1857: மசூதி இருந்த இடத்தின் ஒரு பகுதியை இந்து சமயத் துறவிகள் கைப்பற்றி ஆலய வழிபாட்டை நடத்தினர்.
கி.பி. 1859: வழிபாட்டுத் தலங்களைப் பிரிக்கும் வகையில் சுற்றுச் சுவரை அப்போதைய பிரிட்டிஷ் அரசு கட்டியது.
கி.பி. 1934: இந்தியா முழுவதும் இந்து-முஸ்லிம் கலவரம் வெடித்தது. பாபர் மசூதியின் ஒரு பக்க சுற்றுச் சுவரும் மேல் பகுதியும் சேதப்படுத்தப்பட்டன.
கி.பி. 1949: மசூதியின் பூட்டை உடைத்து உள்ளே சென்று ராமரின் சிலையை அங்கு வைத்தனர். இதையடுத்து இப்பகுதியை சர்ச்சைக்குரிய இடமாக அரசு அறிவித்து பூட்டிவிட்டது.
கி.பி. 1983: ராமர் பிறந்த இடத்தை (?) மீட்டு, அங்கு ராமர் ஆலயம் கட்டுவதற்கான குழுவை விசுவ இந்து பரிசத் இயக்கம் உருவாக்கியது. இதற்காக எல்.கே. அத்வானி தலைமையில் ரத யாத்திரை நடைபெற்றது.
கி.பி. 1986: பாபரி மஸ்ஜித் தலத்தின் வாயிற்கதவின் பூட்டைத் திறந்து இந்துக்களின் வழிபாட்டுக்கு அனுமதிக்குமாறு பைசாபாத் மாவட்ட நீதிபதி உத்தரவிட்டார். இதற்கிடையில் பாபர் மசூதி செயல்கமிட்டி அமைக்கப்பட்டது.
கி.பி. 1989: மசூதிக்கு அருகில் ராமர் கோயில் கட்டுவதற்கான சிலைவழிபாட்டுக்கு முந்தைய ராஜீவ் காந்தி அரசு அனுமதி வழங்கியது. அங்கு ராமர் கோவிலுக்கான அடிக்கல் நாட்டப்பட்டது. இதைத் தொடர்ந்து நடைபெற்ற வன்முறைச் சம்பவங்களில் 500 பேர் கொல்லப்பட்டனர்.
கி.பி. 1990: ராமர் கோயில் கட்டும் இயக்கத்துக்கு ஆதரவு திரட்ட அத்வானி ரத யாத்திரை நடத்தினார்.
அயோத்தியில் ஒரு லட்சம் கரசேவகர்கள் திரண்டனர். சர்ச்சைக்குரிய இடத்தைத் தகர்க்க முயற்சித்தவர்கள் மீது போலீசார் துப்பாக்கி சூடு நடத்தினர். இதில் 30 பேர் உயிரிழந்தனர்.
கி.பி. 1992: ஜூலை மாதம் ராமர் கோயில் கட்டுவதற்கான பணிகள் துவங்கின.
கி.பி. 1992: டிசம்பர் 6ம் தேதி பாபர் மசூதி இடிக்கப்பட்டது. அங்கு தற்காலிக ராமர் கோயில் அமைக்கப்பட்டு பூஜை தொடங்கியது. இதைத் தொடர்ந்து நடந்த வன்முறைகளில் 3 ஆயிரம் பேர் உயிரிழந்தனர்.
கி.பி. 1993: பாபர் மசூதி இடத்தைச் சுற்றியிருந்த 67 ஏக்கர் நிலத்தை முந்தைய நரசிம்மராவ் தலைமையிலான மத்திய அரசு கையகப்படுத்தியது. அங்கு ராமனின் வரலாறு பற்றி கதாகலாட்சேபம் நடத்தும் பூங்கா அமைக்கத் திட்டமிட்டப்பட்டது.
கி.பி. 1994: அரசு கையகப்படுத்திய இடத்தில் எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளக்கூடாது என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. முன்பிருந்த நிலையே நீடிக்க வேண்டும் எனவும் அது தீர்ப்பளித்தது.
கி.பி. 2002 ஜனவரி: ராமர் கோயில் கட்டுவதற்கான பணிகளை மேற்கொள்ளப் போவதாக விசுவ இந்து பரிசத் இயக்கம் அறிவித்தது.
கி.பி. 2002 பிப்ரவரி 16: சர்ச்சைக்குரிய அயோத்திப் பிரச்சினைக்கு உச்சநீதிமன்றத் தீர்ப்பே சரியான தீர்வாக அமையும் என்று பிரதமர் வாஜ்பாய் அறிவித்தார். நீதிமன்றத் தீர்பபுக்குக் கட்டுப்படுவதாக விசுவ இந்து பரிசத்தும் ராமஜென்ம பூமி அறக்கட்டளை அமைப்பும் அறிவித்தன.
கி.பி. 2002 மார்ச் 6: அயோத்தி வழக்கு விசாரணையைத் துரிதப்படுத்துமாறு அலாகாபாத் உயர்நீதி மன்றத்தை மத்திய அரசு கேட்டுக் கொண்டது.
கி.பி. 2002 மார்ச் 10: பாபர் மசூதி இடத்தைச் சுற்றிலும் சுவர் எழுப்பிவிட்டு பூஜை நடத்த அனுமதிக்கலாம் என்ற காஞ்சி சங்கராச்சாரி முன் வைத்த ஒரு திட்டத்தை இஸ்லாமிய தனிநபர் சட்ட வாரியம் நிராகரித்தது.
கி.பி. 2002 மார்ச் 11: அயோத்தியில் பூஜை நடத்துவதில் நீதிமன்றத் தீர்ப்புப்படி மத்திய அரசு நடந்து கொள்ளும் என்று நாடாளுமன்றத்தில் பிரதமர் வாஜ்பாய் அறிவித்தார்.
கி.பி. 2002 மார்ச் 13: அயோத்தியில் தற்போதைய நிலையே தொடர்ந்து நீடிக்க வேண்டும். அங்கு பூஜையோ இதர நிகழ்ச்சிகளோ நடத்தக் கூடாது என உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.
http://aarifsaad.blogspot.com/

Sep 22, 2010

   திமிங்கிலம் (Whale)

அல்லாஹ் படைத்த பாலூட்டிகள் அனைத்திலும் திமிங்கிலம் மிக வித்தியாசமான சில தகவமைப்புகளைப் பெற்று விளங்குகின்றது. தன் வாழ் நாள் முழுதும் தண்ணீரிலேயே கழிக்கக் கூடிய ஒரே பாலூட்டி திமிங்கிலம் ஒன்றுதான். மேலும் நான்காயிரத்திற்கு மேற்பட்ட பாலூட்டி இனங்களில் மீன்களை ஒத்த உடல் அமையப் பெற்று நடக்கக் கூடிய வகையில் கால்கள் அமைப்பைப் பெறாத ஒரே உயிரினமும் திமிங்கிலம் ஒன்றுதான். இதுவும் அல்லாஹ்வுடைய படைப்புக்களில் விதிவிலக்கான அம்சமாகும். மேலும் இவைகளின் தலையின் மேற்பரப்பில் அமைந்துள்ள Blow hole என்ற சுவாசக் குழாய் அமைப்பு நுரையீரலுடன் நேரடியாக இணைக்கப் பட்டுள்ளதாலும் மற்ற பாலுட்டிகளைப் போன்று தொண்டையின் மூலம் சுவாசம் செல்ல வேண்டிய அமைப்பு இல்லாததனாலும் ஒரே நேரத்தில் இவைகளினால் உண்ணவும் சுவாசிக்கவும் இயலுகின்றது. இந்த அமைப்பும் இவற்றிற்கு இறைவனால் பிரத்யோகமாக கொடுக்கப் பட்ட அருட்கொடையாகும்.
பொதுவாக எல்லா பாலூட்டிகளுக்கும் இருக்கக் கூடிய பித்தப் பை (gall bladder) மற்றும் குடல் வால்வு (appendix) போன்ற உள் உறுப்புக்கள் இல்லாத அமைப்புகள் விதிவிலக்கான அம்சமாக திகழ்கின்றது. இந்த உலகில் வாழக்கூடிய உயிரினங்களில் மிகப் பெரியதும் இதுவரை கண்டெடுக்கப்பட்ட டைனோசர்களின் எலும்புக் கூடுகளில் மிகப் பெரிய அளவினை ஒத்த உடல் அளவையும் பெற்று பல சிறப்பு அம்சங்களுடன் அல்லாஹ்வுடைய படைப்பின் வல்லமையைப் பறைச்சாற்றும் இந்த திமிங்கிலங்களை பற்றி விரிவாக பார்ப்போம்.
திமிங்கிலம் என்றுச் சொன்னவுடன் நமக்கு மிகப் பெரிய அளவிளான மீனாகத்தான் நினைவுக்கு வருகின்றது. இவைகள் பல வகையிலும் மீன்களை ஒத்திருப்பினும் கூட இது மீன் இனத்தைத் சாராத பாலூட்டி ஆகும். மீன்கள் குளிர் இரத்த உயிரி ஆகும். மேலும் இவைகள் தண்ணீருக்கடியில் தங்கள் செவில்கள் மூலம் ஆக்ஸிஜனை கிரகிக்கும் அமைப்பைப் பெற்றுள்ளவை. ஆனால் திமிங்கிலங்கள் வெப்ப இரத்த பிராணி ஆகும். இவைகளின் உடல் வெப்ப நிலை மனிதனை போன்றே 37 டிகிரி செல்சியஸ் ஆகும். இவைகள் மற்ற பாலூட்டிகளைப் போன்றே நுறையீரல் அமைப்பை பெற்று விளங்குவதால் தங்களுக்குத் தேவையான ஆக்ஸிஜனை தண்ணீரின் மேற்பரப்பில் வந்துதான் பெற்றுக் கொள்ள இயலும்.
திமிங்கிலதில் 75-க்கு மேற்பட்ட வகைகள் இருக்கின்றன. ஓவ்வொன்றும் தனித்தனி குணாதிசியங்களைப் பெற்று விளங்குகின்றன. கருப்பு, வெள்ளை, நீலம் மற்றும் பல வண்ணங்களிலும் 24 மீட்டர் நீளம் முதல் 1.25 மீட்டருக்குக் குறைவான நீளம் வரையும் உப்பு நீர் மற்றும் நன்னீரிலும் வாழக்கூடியதாகவும் உலகில் உள்ள எல்லா கடல்களிலும் மற்றும் சில வகைகள் அமேசான், சீனாவின் மிகப் பெரிய ஆறான யாங்ட்ஜிலும் மற்றும் இந்தியாவின் கங்கை ஆற்றிலும் வாழக்கூடியதாகவும் காணப்படுகின்றன. 10 முதல் 16 மாத கால அளவில் வித்தியாசமான கர்ப்ப காலங்களை உள்ளடக்கியதாகவும் விளங்குகின்றது. டால்பின் புரொபோசிஸ் போன்றவைகள் உட்பட திமிங்கிலம் இனத்தை சேர்ந்தவையாகும். கீழ் காணும் படம் அமேசான் ஆற்றில் வாழும் Pink டால்பின் ஆகும்.
அமேசான் ஆற்று Pink dolphin
விஞ்ஞானிகள் திமிங்கிலங்களை இருப் பெரும் பிரிவுகளாகப் பிரிக்கின்றார்கள். ஒன்று பற்கள் உள்ளவை. வாயின் இருப் புறங்களிலும் வலிமையான தாடைகளுடன் கூடிய பற்களுடையவை. மற்றது பற்கள் அற்றவை அல்லது baleen என்ற அமைப்பைப் பெற்ற baleen திமிங்கிலங்கள். பற்கள் உள்ள வகைகளில் Sperm whale, Beaked, Narwhals, Beluga, Dolphin மற்றும் Porpoises போன்ற வகைகளும் பற்கள் அற்றவைகளில் Rorquals, Gray whales, Right whales என்ற மூன்று வகைகளும் இருக்கின்றன.
பற்கள் உடையத் திமிங்கில வகைகள்
பற்கள் உள்ள வகைகளில் 1.5 மீட்டருக்கு குறைவான Horbor porpoise முதல் 18 மீட்டர் நீளமும் 55 டன் எடையுடைய Sperm whale வரை பல வகைகள் இருக்கின்றன. இதில் பல வியக்கத்தக்க சிறப்பம்சங்களுடன் விளங்கும் Sperm whale பற்றிப் பார்ப்போம்.
Sperm whale வலிமையான பற்களைக் கொண்ட திமிங்கிலங்களில் முதன்மையான இடத்தை வகிக்கும் வகையைச் சேர்ந்ததாகும். இவை இத்தகைய பற்கள் அமைப்பை பெற்று விளங்குவதனால் மிகப் பெரிய அளவிளான மீன்களைக் கூட ஒரே நேரத்தில் பிடித்து விழுங்க முடிகின்றது. இவை தங்களின் முக்கிய உணவாக உட்கொள்ளும் Gaint squid என்னும் மீன் இனத்தின் நீளம் 10 மீட்டர் என்றுச் சொன்னால் இவற்றின் வாயின் அளவையும் பற்களின் வல்லமையையும் நம்மால் உணர முடிகின்றது.
இவை ஒரு முறை சுவாசித்ததன் பின்னர் 80நிமிடங்கள் வரை தண்ணீரின் அடியில் இவைகளினால் தாக்குப் பிடிக்க இயலுகின்றது. இவற்றின் உடல் அளவிடற்கறிய கடல் நீரின் அழுத்தத்தை தாங்கக் கூடிய வகையில் அமைந்துள்ளது. இவை தங்கள் இறையைத் தேடி கடலின் ஆழத்திற்கு செல்லும் தூரம் எந்த பாலூட்டிகளிளாலும் அடைய முடியாத ஒரு இலக்காகும். 1000 மீட்டர் (1 கிலோ மீட்டர்) முதல் 2000 மீட்டர்(இரண்டு கிலோ மீட்டர்) ஆழம் வரை செல்லக் கூடிய ஆற்றல் பெற்றது. சுபஹானல்லாஹ். இவ்வளவு ஆழக் கடலின் வெளிச்சம் அறவே இல்லாத அடர்ந்த இருளில் இரையை பிடிக்க பயன் படுத்தும் உத்தி எதிரொலி (echo location) மூலம் இரையின் இருப்பிடத்தை துல்லியமாக அறிந்துக் கொள்ளும் முறையாகும். இவைகள் சராசரியாக ஒரு நாளைக்கு 1500 கிலோ வரை உணவை உட்கொள்ளுகினன்றன. இதன் முக்கிய உணவான 10 மீட்டர் நீளமுள்ள Gaint squid பிடித்து உண்ணும் போது சில சமயம் இவைகளுக்கிடையே சண்டை ஏற்பட்டு Sperm Whale உடலில் மிக ஆழமான வெட்டுக் காயத்தை ஏற்படுத்தி விடுகின்றது. இருப்பினும் கூட முடிவில் அவற்றை கபளீபரம் செய்யத் இவைத் தவறுவதில்லை. இவை தங்களின் உணவை பிடித்து உண்டதன் பின்னர் தண்ணீரின் மேற்பரப்பிற்கு வந்து 10 முதல் 15 நிமிடங்கள் வரை காற்றை நன்கு சுவாசித்து ஆக்ஸிஜனை சேமித்து மீண்டும் ஆழ் கடலை நோக்கி தங்கள் பயணத்தை தொடர்கின்றன.
மனிதனின் மூளையைக் காட்டிலும் அளவில் நிறையில் பெரிய மூளையுடைய பாலூட்டிகள் இரண்டே இரண்டுதான். ஓன்று யானை மற்றது திமிங்கிலத்தினுடைய மூளையாகும். உலகில் உள்ள பாலூட்டிகளில் (அல்லது உயிரினங்களில்) மிகப் பெரிய மூளையுடையது என்ற சிறப்பும் இதற்கு உண்டு. திமிங்கில வகைகளில் மிக அதிக கர்ப்பக் காலமான 16 மாத கர்ப்ப காலம் இதனுடையதாகும். இவை 60 முதல் 70 வருடம் உயிர் வாழக்கூடியது.
பற்கள் அற்ற Baleen திமிங்கிலங்கள்
பற்கள் உள்ள திமிங்கிலங்களுக்கும் பற்கள் அற்ற பலீன் திமிங்கலங்களுக்கும் இரையை பிடிக்கப் பயன் படுத்தும் முறையில் மிக பெரிய அளவிளான வித்தியாசங்கள் உள்ளன. Baleen திமிங்கிலங்களின் வாயின் மேற்பரப்பில் தொங்கக் கூடிய அமைப்பில் அமைந்த உறுதியான நீண்ட சீப்புக்களைப் போன்ற வளைந்துக் கொடுக்கக் கூடிய தன்மையைக் கொண்ட இதுதான் பலீன் என்று அழைக்கப்படுகின்றது. Green land Right whale என்றழைக்கப்படும் ஆர்டிக் திமிங்கிலங்களின் பலீன் தகடுகள் அதிக பட்சமாக நான்கு மீட்டர் நீளம் வரை வளரக் கூடியது. இவைகள் பக்கத்திற்கு 270 முதல் 360 எண்ணிக்கை வரையும் வளரக்கூடியது. பலீன் திமிங்கிலங்கள் தங்கள் வாய்களில் உட் கொள்ளும் டன் கணக்கான தண்ணீரை திரும்பப் பீய்ச்சி வெளியேற்றுவதன் மூலம் இந்த பலீன் தகடுகளினால் வடிகட்டப் பட்டுச் சிக்கிக் கொள்ளும் சிறிய பிளாங்டன் மற்றும் சிறிய வகை மீன்களை உணவாக உட்கொள்கின்றன. இந்த பலீன்கள் முக்கோண வடிவில் அமைந்துள்ளன. வாயின் உட்புறத்தில் அமைந்த இவைகளின் வெளிப்புறம் நேரானதாகவும் அதன் உட்புறம் இருப்புறங்களிலும் தேய்ந்த அமைப்பில் அமைந்துள்ளதால் மிகச் சிறிய அளவிளான உயிரினங்கள் கூட இவற்றின் வாயிலிருந்து தப்பிக்க இயலுவதில்லை. (முதலை வாயில் மாட்டுவதை விட இதன் வாயில் மாட்டுவது ஆபத்து போலும்).
இந்த பலீன்கள் நீளமாகவும் மிக உறுதியாகவும் எலாஸ்டிக் போன்ற கெரட்டீன் என்ற மூலப் பொருளால் ஆனவை. இந்த கெரட்டீன்தான் மனிதர்களின் முடி மற்றும் விரல் நகங்களை உருவாக்க காரணமாக இருப்பவை. இத்தகைய அமைப்பை அடிப்படையாக கொண்ட பலீன் திமிங்கிலங்களில் மிகப் பெரியதும் பல சிறப்பான அம்சங்களையும் கொண்ட Blue Whale என்றழைக்கப்படும் நீல நிறம் கொண்டு திமிங்கிலத்தை பற்றிப் பார்ப்போம்.
பலீன் திமிங்கிலங்களில் Blue Whale என்றழைக்கப்படும் இந்த திமிங்கிலம்தான் இந்த பூமியில் உள்ள உயிரினங்களிலேயே மற்ற எவற்றுடனும் ஒப்பிட இயலாத அளவிற்கு மிகப் பெரியதாகும். 24 மீட்டர் வரை நீளமும் 150 மெட்ரிக் டன் வரை எடையும் கொண்டதாகும். இவற்றின் உள் உறுப்புகளில் ஒன்றான இதயத்தின் அளவு Volks wagen beetle என்றழைக்கப்படும் காருடைய அளவிற்கு ஒப்பான அளவு என்றால் எவ்வளவு பிரமாண்டமான உருவமாக இருக்கும் என்பதை நீங்களே எண்ணிப் பாருங்கள். இவைகள் 100 ஆண்டுகளுக்கு மேலான வாழ் நாளைக் கொண்டவை. பொதுவாக உலகில் உள்ள எல்லா கடல்களிலும் காணப்படும் இவைகள் பல்வேறு காரணங்களுக்காக வேட்டையாடப் பட்டு அழிவின் விளிம்பை நோக்கி விரைந்து செல்லுவதால் எண்ணிக்கையில் மிகக் குறைந்துக் காணப்படுகின்றன. 760 லிட்டர் வரைக் கொள்ளளவு வயிற்றைக் கொண்ட இவைகள் ஒரு நாளைக்கு உண்ணும் உணவின் அளவு 3600 கிலோ வரையாகும்.
இவைகள் இனப் பெருக்கத்தில் ஈடுபட்டு ஏறக்குறைய 11 -மாத கால அளவில் வழக்கமாக ஒரு குட்டியை ஈன்றெடுக்கின்றது. இதன் குட்டி பிறக்கும் போது தாயின் எடையில் 30 சதவீத எடையுடன் பிறக்கின்றது. 7.6 மீட்டர் நீளமும் மூன்று டன் எடையுடனும் பிறக்கக் கூடிய இவைகள் 7 முதல் 8 மாதங்கள் வரை தாயின் அரவணைப்பில் வாழுகின்றன. திமிங்கிலங்கள் தங்கள் குட்டிகளுக்குப் பால் கொடுக்கின்றன. விஞ்ஞானிகள் இவற்றைப் பாலூட்டிகளின் பட்டியலில் ஒன்றாகக் கருத இதுவே முழு முதற்காரணமாகும். இந்த Blue Whale தன் குட்டிக்கு ஒரு நாளைக்கு கொடுக்கும் பாலின் அளவு 600 லிட்டர்களாகும். இதனுடையக் குட்டி ஒரு நாளைக்கு 90 கிலோ எடை வரை வளர்ச்சியடைகின்றது.
Blue Whale-களுக்கு உள்ள மற்றுமொரு தனிச்சிறப்பு என்னவென்றால் இவை தண்ணீருக்கு அடியில் எழுப்பும் 150-க்கும் மேலான டெசிபலைக் கொண்ட (எந்த ஒரு உயிரினங்களையும் மிகைத்த) ஒலி ஒரு ஜெட் விமானம் கிளம்பும் போது ஏற்படுத்தும் சத்தத்தைக் காட்டிலும் கூடுதலாகும். இந்த ஒலி தண்ணீரின் அடியில் கடக்கும் தொலைவு 1000 கிலோ மீட்டருக்கும் மேலாகும். அல்லாஹ் நாடியதை அதிகப் படுத்தக்கூடியவன் . இதன் மூலம் இவைகள் மிகத் தொலைத் தூர பிரதேசத்தின் தங்கள் இனத்துடன் தொடர்புக் கொள்ள பயன் படுத்துவதாக விஞ்ஞானிகள் அபிப்ராயப் படுகின்றார்கள். இவை தங்கள் தலையின் மேற்பரப்பில் அமைந்த சுவாசக் குழாய் (Blow hole) மூலம் தண்ணீரை 9 மீட்டர் உயரம் வரை நீர் கம்பம் (Water Spout) போல பீய்ச்சி அடிக்கின்றன. இவ்வாறு மிகுந்த சப்தத்துடன் கூடிய இந்த நிகழ்ச்சியும் திமிங்கிலங்கள் ஒன்றுடன் ஒன்று தொடர்பு கொள்ளும் சாதனமாக பயன் படுத்துவதாக விஞ்ஞானிகளால் நம்பப் படுகின்றது. ஏனென்றுச் சொன்னால் இவை சத்தம் எழுப்பும் போது அதற்கு பதில் அளிக்கும் விதமாக தொலை தூர கூட்டத்தின் திமிங்கிலங்கள் சப்தம் இடுவதை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளார்கள்.
இனி திமிங்கிலங்களின் பொதுவான சில அம்சங்களைப் பற்றிப் பார்ப்போம். முதலாவதாக அவற்றின் உடல் அமைப்பை பற்றியும் அதன் செயல்பாடுகளைப் பற்றியும் பார்ப்போம். திமிங்கிலங்களின் உடலின் மேற்புறம் புரதத்தை உள்ளடக்கிய Bubler என்னும் மிகத்தடித்த அடுக்கு அமைந்துள்ளது. இது இவற்றின் உடல் வெப்பத்தை (உறை நிலையைக் கடந்த துருவப் பகுதிகளிலும்) சீராக வைத்துக் கொள்ளவும் தங்களுக்குத் தேவையான சத்துக்களை சேகரித்து வைத்துக் கொள்ளவும் பயனாகின்றது.
கடலின் மிக ஆழத்தில் இவை செல்லும் போது கடல் நீரின் மிக அதிக அளவான அழுத்தத்தை தாங்கக் கூடிய வகையில் இவற்றின் கண் அமைப்பு அமைந்துள்ளது. கண்களைக் சுற்றி அமைந்துள்ள தோல் போன்ற அமைப்பு தண்ணீரின் மிக அதிகமான அழுத்தத்தை தாங்கிக் கொள்ளவும் உப்பு நீரினால் கண்களுக்கு பாதிப்பு ஏற்படாமலும் காக்கக்கூடிய பாதுகாப்பு அரணாகவும் விளங்குகின்றது. இதே அமைப்பு கண்ணின் லென்சின் அமைப்பை மாற்றிக் கொடுப்பதன் மூலம் தண்ணீருக்கடியிலும் தண்ணீரின் மேற்பரப்பிலும் தெளிவாக காண வகைச் செய்கின்றது. பொதுவாக எல்லா பாலூட்டிகளுக்கும் அமையப் பெற்ற பித்தப்பை மற்றும் குடல் வால்வு அமைப்பு இவற்றிற்கு இல்லை என்பது குறிப்பிடத் தக்க அம்சமாகும். இவைகள் தண்ணீரின் அடியில் மணிக் கணக்காக தாக்குப் பிடிப்பதானால் இவற்றின் நுரையீரல் அமைப்பை பற்றி அறிந்துக் கொள்வது அவசியமான ஒன்றாகும். இவற்றின் நுரையீரல் மற்ற பாலூட்டிகளைப் போன்று தொண்டையின் இணைப்பின்றி காற்றுக் குழாய் (Blow hole) மூலம் நேரடியாக இணைக்கப் பட்டுள்ளதால் இவற்றினால் ஒரே நேரத்தில் உண்ணவும் சுவாசிக்கவும் இயலுகின்றது. இவற்றின் நுரையீரல் மனிதர்களின் நுரையீரலை விட அமைப்பில் சற்றுக் குறைந்திருப்பினும் கூட செயல் பாட்டில் மனிதர்களின் நுரையீரலை விட மிகைத்த ஒன்றாகும். மனிதர்களின் நுரையீரல் ஒரு சுவாசத்தின் மூலம் 15 முதல் 20 சதவீதம் வரைதான் ஆக்ஸிஜனை கிரகிக்க இயலுகின்றது. ஆனால் திமிங்கிலங்களின் நுரையீரலோ 80 முதல் 90 சதவிகித ஆக்ஸிஜனை கிரகித்துக் கொள்ளுகின்றது.
இவற்றின் நுரையீரல் ஆக்ஸிஜனை கிரகிக்கும் அதே வேளையில் கார்பன் டை ஆக்சைடை மிக வேகமாக வெளியேற்றுகின்றது. இதுவும் மனித நுரையீரலை விட வேகமான செயல்பாடாகும். எனவேதான் இவைகளினால் நீண்ட நேரம் தண்ணீரில் தாக்குப் பிடிக்க முடிகின்றது. இவற்றின் இரத்தம் மற்றும் திசுகளில் சேகரிக்கப் படும் அதிகப்படியான ஆக்ஸிஜன் ஹீமோ குலோபின் (hemoglobin) மற்றும் மையோ குலோபின்(Myoglobin) மூலம் 80 முதல் 90 சதவிகிதம் வரை ஆக்சிஜன் வினியோகம் செய்யப் படுவதால் தண்ணீருக்கு அடியில் நீண்ட நேரம் தாக்குப் பிடிக்க இயலுகின்றது. மேலும் இவை தண்ணீருக்கு அடியில் தங்கள் உணவுக்காக சென்றதன் பின்னர் இவற்றின் இதயம் நிமிடத்திற்கு 3 லிருந்து 5 முறை வரை மட்டுமே துடிப்பதனால் பல உறுப்புக்களுக்கு ஆக்சிஜன் வினியோகம் நிறத்தப் பட்டு நீண்ட நேரத்திற்கு இவைகளினால் பிராண வாயுவை பயன்படுத்திக் கொள்ள இயலுகின்றது. இதனால் இவற்றின் மூளை மற்றும் இதயத்தின் இயக்கம் குறைந்து இரத்த அழுத்தம் கட்டுப்படுத்தப் படுவதனால் நீண்ட காலம் வாழ இது வகைச் செய்கின்றது.
மனிதர்களின் மூளையைக் காட்டிலும் அளவில் பெரிய மூளை திமிங்கிலங்களுடையதாகும். மூளையின் அளவிற்கும் அறிவுத் திறனுக்கும் தொடர்பு இருப்பதாக விஞ்ஞானிகளினால் நம்பப்படுகின்றது. 1970 ஆண்டு வாக்கில்தான் திமிங்கிலங்கள் புத்திக் கூர்மையான செயல்பாடுகள் முதல் முதலாக அறியப்பட்டது. விஞ்ஞானிகள் திமிங்கிலங்களை புத்திசாலி உயிரினமாகவே கருதுகின்றார்கள். ஏனென்றுச் சொன்னால் மூளையின் முன் புறமாக அமைந்த cerebral cortex என்ற அடுக்கு யானை, நாய் மற்றும் மனிதர்கள் போன்ற புத்திசாலி உயிரினங்களுக்கு இருப்பது போல ஏன் மனிதர்களுக்கு இருப்பதை விட அதிகமாகவே இவற்றிற்கு இருக்கின்றது. ஆராய்ச்சியின் முடிவுகள் கூட இவற்றை நிரூபிக்கும் வண்ணமாகவே உள்ளன. சில வகை டால்பின்கள் சுயமான சிந்தித்து சமத்யோகமாக செயல்படுவதை ஆராய்ச்சியின் மூலம் கண்டறிந்துள்ளார்கள்.
பாலூட்டிகளின் சாம்ராஜியத்தில் மிக மிக அதிக தூர பயணத்தை மேற்க் கொள்ளக் கூடிய உயிரினம் என்ற சிறப்பம்சமும் திமிங்கிலங்களுக்கு உண்டு. Killer Whale மணிக்கு 50 கிலோ மீட்டர் வேகம் வரைச் செல்லக் கூடிய ஆற்றல் பெற்றவை. திமிங்கிலங்கள் தங்கள் இனப்பெருக்கத்திற்காக குளிர்ப் பிரதேசங்களையும் குட்டிகளை ஈன்றெடுக்க வெப்ப பிரதேசங்களையும் தேர்ந்தெடுத்து மிக நீண்ட தூரப் பயணத்தை மேற்கொள்ளுகின்றன. Gray Whale என்ற திமிங்கில வகை தங்கள் குட்டிகளை பெற்றெடுக்க அலாஸ்காவிற்க்கு அப்பாலிருந்து மெக்ஸிகோ கடற்கரைப் பகுதி வரை கடந்து வரக் கூடியத் தொலைவு 10,000 கிலோ மீட்டரை விட அதிகமாகும். இவைகளின் பயணம் சிறிய அல்லது பெரியக் கூட்டமாகவோ அல்லது தனித்தோ அல்லது ஆண்கள் மட்டுமோ அல்லது ஆண், பெண் இரண்டும் கலந்தோ மேற்கொள்ளுகின்றது.
இவைகள் பெரும் பயணத்தை மேற்கொள்ளும்போது இவைகளினால் எழுப்பப்படும் பாடல்கள் மிக மிக முக்கியமான விஷயமாக விஞ்ஞானிகளினால் கருதப்படுகின்றது. ஒவ்வொரு இனத்திற்கும் பிரத்யோகமான பாடல் இருப்பதாகவும் கண்டறிந்துள்ளார்கள். Hump back என்ற திமிங்கிலத்தின் பாடல் வரிகள் விட்டு விட்டோ அல்லது தொடர்சியாகவோ 20 நிமிடங்கள் வரை இவைகளினால் எழுப்பப் படுகின்றது. பயணத்தின் போது ஒரு கூட்டத்தினால் எழுப்பப்படும் இந்த பாடல் வரிகள் ஏறக்குறைய ஒத்திருக்கின்றது. வருடத்திற்கு வருடம் சற்று மாறுதலுடன் ஒலிக்கப்படும் இந்த பாடல்கள் நான்கு அல்லது ஐந்து வருடங்களில் முற்றிலும் புதிய பாடலாக வடிவெடுகின்றது. அலாஸ்காவில் வசிக்கக் கூடிய எக்ஸிமோக்கள் Bowhead திமிங்கிலம் தண்ணீருக்கு அடியில் எழுப்பும் ஓசை guitar என்ற இசை சத்தத்தை ஒத்து இருப்பதை அறிந்துள்ளனர். இவ்வாறு இவை எழுப்பும் பாடல்கள் இவற்றின் இனப் பெருக்கத்தின் ஒரு அங்கமாக இருக்கக் கூடும் என்று விஞ்ஞானிகள் கருதுகின்றார்கள். இவற்றின் பாடல் வரிகளை வரிசைப் படுத்தும் முயற்சியில் இதுவரை வெற்றி காண முடியவில்லை. இந்த முயற்ச்சியில் வெற்றி கிட்டினால் பல பயன் தரத்தக்க தகவல்கள் தெரியவரலாம். திமிங்கிலங்களின் புத்திக் கூர்மையை கண்டறியும் விஷயத்தில் மிகவும் பின் தங்கியிருப்பதை அறிவியல் அறிஞர்கள் ஒத்துக்கொள்ளுகின்றார்கள்.
உலகில் அழிந்து வரும் உயிரினங்களின் பட்டியலில் திமிங்கிலமும் ஒன்றாகும். இவை இவற்றிலிருந்துக் கிடைக்கும் எண்ணெய் மற்றும் இறைச்சிக்காகவும் அவற்றின் பலீன் தகடுகளுக்காகவும் பெருமளவு வேட்டையாடப் படுகின்றது. இவற்றின் எலும்புகளிலிருந்து 1600க்கு மேற்பட்ட கைவினைப் பொருட்கள் தயாரிக்கப் படுகின்றன. 1849ம் ஆண்டு பெட்ரோலியத்திலிருந்து கெரசின் என்ற மண்ணெண்ணெய் கண்டுப்பிடிப்பதற்கு முன்பு விளக்கெரிக்க பெருவாரியாக உலக மக்களால் திமிங்கில எண்ணெய் பயன் படுத்தப்பட்டு வந்தது. இதற்காகவே பெருமளவு சென்ற காலங்களில் வேட்டையாடப் பட்டும் வந்தது. தற்போது திமிங்கிலங்களை வேட்டையாடுவது சட்டப்படி குற்றமாகும். இந்த இனங்களை அழிவிலிருந்து காப்பாற்ற சர்வதேச அளவில் அமைக்கப்பட்ட I W C (INTERNATIONAL WHALING COMMISSION) என்ற அமைப்பு திமிங்கிலங்களைப் பிடிக்க பல நிபந்தனைகளை விதித்துள்ளது. வேட்டையாட அனுமதிக்கப் பட்ட எண்ணிக்கை அளவு இனம் போன்றவற்றை நிர்ணயித்துள்ளது. இருப்பினும் சட்ட விரோதமாக வேட்டையாடப் படுவதனால் இந்த பிரம்மாண்டமான உயிரினம் அழிவுறும் தருவாயை எட்டியுள்ளது. பின் வரும் படம் Sperm Whale வேட்டையாடப்பட்டு கிடக்கும் காட்சி.
அல்லாஹ்வின் படைப்பாற்றலின் ஒரு அங்கமாக விளங்கி வரும் இந்த திமிங்கிலங்களை பற்றிய சிந்தனையில் இன்னும் அறிவு ஜீவிகள் என்று சொல்லிக் கொள்ளும் பரிணாமத் தத்துவவாதிகள் ஊகத்தின் அடிப்படையில் பலவாறாக பிதற்றிக் கொண்டு இருப்பதை இன்றளவிலும் விட்டப்பாடில்லை. ஜீனோம் தொழில் நுட்பத்தில் புரட்சி ஏற்பட்டு இந்த நூற்றாண்டில் உலகிற்கு பிரமிப்பை ஏற்படுத்தக் கூடிய உண்மைகள் வந்துக் கொண்டிருக்கும் வேளையில் மீண்டும் பரிணாமத்திற்கு தோள் கொடுக்கும் இவர்கள் முயற்சி நம்மை வியப்படைய வைக்கின்றது.
திமிங்கிலங்கள் முன்பு நான்கு கால்கள் உள்ள விலங்காக இருந்ததாகவும் கடற்கரையின் ஓரங்களில் மீன்கள் மற்றும் கடல் வாழ் உயிரினங்களை உண்டு வாழ்ந்து வந்ததாகவும் காலப் போக்கில் இவைகளின் உணவுத் தேவை அதிகரிக்கவே அதை நிறைவு செய்யும் பொருட்டு கடலில் இறங்கி படிப் படியாக இன்றைய உருவ அமைப்பை எட்டியுள்ளதாகவும் சொல்கின்றார்கள். இவை ஹிப்போபொடமஸ் (Hippopotamus) என்ற விலங்கின் ஜீன்களோடு நெருக்கமான அமைப்பில் காணப்படுவதனால் இவை இந்த விலங்கிலிருந்துதான் திமிங்கிலமாக மாறி இருக்க வேண்டும் என்ற கருத்தை எடுத்து வைக்கின்றார்கள். எந்த விஷயத்தில் ஒரு திட்டவட்டமான முடிவை எட்ட வில்லையோ அதில் எதையாவது ஒரு கருத்தை சொல்லி வருவது கால காலமாக நடந்து வரும் நிகழ்ச்சிதான். முக்கியமாக இதையெல்லாம் ஒரு இறைவன்தான் திட்டமிட்டு படைத்தான் என்பதை இவர்களினால் ஏனோ ஏற்றுக் கொள்ள முடிவதில்லை.
இன்ஷா அல்லாஹ் எதிர் வரும் காலங்களில் இவர்களினால் மறுக்க முடியாத அல்லாஹ்வுடைய அத்தாட்சிகள் வரும் போது அதற்கு என்ன சமாதானத்தைக் கூறப்போகின்றார்கள். அல்லாஹ் நாடியவர்களை தவிர நேர்வழிப் பெறக் கூடியவர்கள் யார்? அல்லாஹ் தான் நாடியவர்களுக்கு மட்டுமே நேர் வழிக் காட்டக்கூடியவன். நம் இறைவன் மகாத் தூய்மையானவன்.
அவர்களில் அதிகமானோர் ஊகத்தை தவிர பின்பற்றுவதில்லை. ஊகம் ஒரு போதும் உண்மையை தேவையற்றதாக்காது. அவர்கள் செய்வதை அல்லாஹ் மிக அறிந்தவன். (அல்குர்ஆன் 10:36)

Sep 21, 2010

“பிரபஞ்ச’ ரகசியத்தை அறிய விஞ்ஞானிகள் ஆர்வம்

பூமி உள்ளிட்ட கோள்கள், நட்சத்திரங்கள் ஆகியவை பிரபஞ்சத்தில் எப்படி பிறந்தன என்பது குறித்து அறிந்து கொள்ள உலகில் உள்ள விஞ்ஞானிகள் பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றனர். ஆனால், அவர்கள் அறிந்து கொண்டது மிக சிறிதளவே. எனவே, மேலும் விவரங்களை தெரிந்து கொள்ள தொடர்ந்து ஆய்வுகள் செய்யப்பட்டு வருகின்றன.
இதன் ஒரு பகுதியாக, அணுவை மோத விட்டு பிரபஞ்சம் தோன்றிய ரகசியத்தை அறியும் மிகப்பெரிய முயற்சியில் அமெரிக்கா, ரஷ்யா, சுவிட்சர்லாந்து, ஜப்பான் நாட்டு விஞ்ஞானிகள் ஈடுபட்டனர். இவர்களுக்கு உதவியாக இந்தியா, கனடா, சீனா உள்ளிட்ட விஞ்ஞானிகளும் பணியாற்றினர். இதற்காக, சுவிட்சர் லாந்தில் ஜெனீவா நகருக்கு வெளியே 45 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் “செர்ன்’ என்ற இயற்பியல் சோதனைக்கூடம் அமைக்கப்பட்டது. அமெரிக்காவில் சிகாகோ நகருக்கு அருகேயும் இதே போன்று சிறியளவில் “டெவட்ரான்’ என்ற இயற்பியல் சோதனை கூடம் அமைக்கப்பட்டது. சோதனைக்கூடத்தில் அணு உற்பத்தி செய்யும் இயந்திரம் மிகுந்த பாதுகாப்புடன் வைத்து, உற்பத்தி செய்யப்பட்ட அணுக்கள் பலமுறை சுற்றி அதிக திசைவேகத்துடன் ஒன்றின் மீது ஒன்று மோதும் படி செய்து, ஏற்படும் விளைவுகள் குறித்து அறிந்து கொள்வதால் பிரபஞ்சம் எப்படி தோன்றியது என்ற ரகசியம் வெளிவரும் என்று விஞ்ஞானிகள் கருதினர்.
சுவிஸ் – பிரான்ஸ் எல்லையில் பூமிக்கடியில் “ஜீரோ’ டிகிரி வெப்பநிலையில் சுரங்க அமைப்பில் கட்டப்பட்ட பரிசோதனை கூடத்தில் முதல் வெடிப்பு நடத்தப் பட்டது. 27 கி.மீ., தூரத்தில் வைக்கப்பட்டிருந்த இரண்டு முனைகளிலிருந்து மின்காந்த விசையின் மூலம் சுழற்றி அனுப்பப்பட்ட புரோட்டான்கள் மிக வேகமாக வந்து மோதின. அப்போது மனிதனால் உருவாக்கப்பட்ட மிகச்சிறிய அணுவிலிருந்து 7 டிரில்லியன் “எலக்ட்ரான் ஓல்ட்’ ஆற்றல் ஏற்பட்டது. “செரன்’ அமைப்பின் தலைவர் ரால்ப்ஹியூர் கூறுகையில், “பிரபஞ்சம் எப்படி உண்டானது என்பது குறித்து கண்டறிவதில் விஞ்ஞானிகள் சிறிதளவு முன்னேற்றம் அடைந்துள்ளனர். இது பாராட்ட வேண்டிய, மகிழ்ச்சியான செய்தி.
இங்கு அமைக்கப் பட்டுள்ள இயந்திரம் விண்வெளி ஆய்வில் புதிய சகாப்தத்தை தோற்றுவித்துள்ளது. மேலும், இரண்டு வித்தியாசமான அணுக்கள் மோதும் போது தோன்றும் அதிக சக்தியை அறிந்து கொள்ள, தற்போது உள்ளதை விட நவீன இயற்பியல் சோதனைக்கூடம் தேவை. சமீபத்தில் நடந்த சோதனைகள் மற்றும் அதன் விளைவுகள் குறித்து “செரன்’ தலைவர் ரால்ப்ஹியூர் வெளியிட்ட முடிவுகளை பாரிஸ் நகரில் நடந்த “இயற்பியல் உயர் சக்தி’ என்ற சர்வதேச மாநாட்டில் குழுமியிருந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட இயற்பியல் விஞ்ஞானிகள் அறிந்து கொண்டனர்.
தற்போதுள்ள சாதனங்கள் மற்றும் தொழில்நுட்பங்கள் மூலம் செய்த சோதனையில் பிரபஞ்சம் எப்படி உண்டானது என்பது குறித்து ஒரளவிற்கு தெரிந்தது கொள்ள முடிகிறது. ஆயிரத்து 400 கோடி ஆண்டுகளுக்கு முன் ஏற்பட்ட பெரு வெடிப்பு காரணமாக பிரபஞ்சம் பிறந்தது என்பதை கொள்கையளவில் விஞ்ஞானிகள் ஏற்றுக் கொண்டுள்ளனர். அடுத்ததாக 57 ஆயிரத்து 825 கோடி ரூபாய் செலவில் 50 மைல் நீளத்திற்கு சர்வதேச இயற்பியல் கூடம் அமைத்து சோதனைகள் செய்ய திட்டமிடப் பட்டுள்ளது. இந்த சோதனை சர்வதேச ஒத்துழைப்புடன் செய்யப்படும். “செரன்’ சோதனை கூடத்தின் நோக்கம் உயர் சக்தி குறித்த ஆய்வு. ஆனால், ஹம்பர்க்கில் துவக்கப்படவுள்ள சர்வதேச பரிசோதனை கூடம் அதிக தொழில்நுட்பம் கொண்டதாக இருக்கும்’ என்றார்.
“கடந்த 2008ம் ஆண்டு செப்டம்பரில் அணுக்கள் மோதும் சோதனை செய்ய முடிவு செய்யப்பட்டது. ஆனால், சில பிரச்னைகள் ஏற்பட்டதால் அது நவம்பர் மாதத்திற்கு ஒத்தி வைக்கப்பட்டது. பின், வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டது. அது முதல் வெற்றி தான் தொடர்கிறது. முன்பு புரோட்டான்களுக்கிடையே மோதல் ஏற்பட வைத்து சோதனை செய்யப்பட்டது. ஆனால், சர்வதேச பரிசோதனை கூடத்தில் இனி நடைபெறவுள்ள சோதனையின் போது, எலக்ட்ரான் மற்றும் பாசிட்ரான் எதிரெதிரானவைகளை மோத விட்டு நடைபெறும் விளைவுகள் குறித்து ஆய்வு செய்யப்படும்’ என்கிறார் அணு இயற்பியல் அறிஞரான கே வார்ம்செர்.

Sep 20, 2010

பல ஒற்றுமைகளில் சில வேற்றுமைகள் (அறிமுகம்)

[தொடர் 1 : பல ஒற்றுமைகளில் சில வேற்றுமைகள்]

وَاللَّهُ خَلَقَ كُلَّ دَابَّةٍ مِنْ مَاءٍ فَمِنْهُمْ مَنْ يَمْشِي عَلَى بَطْنِهِ وَمِنْهُمْ مَنْ يَمْشِي عَلَى رِجْلَيْنِ وَمِنْهُمْ مَنْ يَمْشِي عَلَى أَرْبَعٍ يَخْلُقُ اللَّهُ مَا يَشَاءُ إِنَّ اللَّهَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ

ஒவ்வொரு உயிரினத்தையும் அல்லாஹ் நீரினால் படைத்தான். அவற்றில் தங்கள் வயிற்றால் நடப்பவைகளும் உள்ளன. தங்கள் இரு கால்களினாலும் நடப்பவைகளும் உள்ளன. நான்கு கால்களினால் நடப்பவையும் உள்ளன. நாடியதை அல்லாஹ் படைப்பான். அல்லாஹ் ஒவ்வொன்றின் மீதும் ஆற்றல் உடையவன். (அல்குர்ஆன் 24 :45)
அல்லாஹ் இந்த உலகத்தில் உயிரினங்களை பல்வேறுவிதமாக விலங்குகளாகவும், தாவரங்களாகவும், பறவைகளாகவும், ஊர்வன மற்றும் நீர் வாழ் உயிரினங்ளாகவும் படைத்துள்ளான். இவை அனைத்தையும் ஒரு பொதுவான நியதியின் அடிப்படையில் படைத்திருப்பினும் கூட அவற்றில் சிலவற்றை முற்றிலும் வித்தியாசமான விதிவிலக்கான ஒன்றாக படைத்து இறைவன் தன் வல்லமையும் ஆற்றலையும் வெளிப்படுத்துகின்றான்.
பாலூட்டிகளுக்கு (MAMMAL) குட்டி போட்டு பால் கொடுக்கும் அமைப்பை வைத்து முட்டையிட்டு பால் கொடுக்கக்கூடிய ‘எகிட்னா’(ECHIDNA), ‘பிளாட்டிபஸ்’ (PLATYPUS) இவைகளை படைத்த இறைவன் மிகத்தூய்மையானவன். பறவையைப் போன்று பறக்கும் தன்மையை கொண்ட பாலூட்டி ‘வவ்வாலை’ (BAT) படைத்தான்.
தாவரங்களில் அயல் மகரந்தச் சேர்க்கையை (DIOECISM) வைத்த இறைவன் தன் மகரந்தச் சேர்க்கையையும் (MONOECISM) வைத்தான். பல்கிப் பெருக ஆண்-பெண் அமைப்பை வைத்த இறைவன் நகரக்கூடிய உயிர்களில் ஈரின உறுப்புக்களை ஒருங்கே அமையப் பெற்ற ஒருசெல் உயிர் ‘அமீபா’வையும் (AMOEBA) தாவர வகைகளில் ஒருசெல் பாசியான ‘கிளாமிடோ மோனஸையும்’ (CHLAMYDOMONAS) படைத்த இறைவன் அனைத்தின்மீதும் ஆற்றல் நிறைந்தவன்.
ஆறு மணி நேரத்தில் முட்டையிலிருந்து வெளி வந்து, பறக்கக்கூடிய சக்தியைப் பெற்று, இனப்பெருக்கத்தில் ஈடுபட்டு, முட்டையிட்டு இறப்பெய்தக்கூடிய ‘மேஃபிலையை’ (MAYFLY) படைத்தானே அவன் நாடியதைச் செய்யக்கூடியவன். எந்தக் குஞ்சும் தன் தாயைக் கண்டதில்லை. எந்த தாயும் தன் குஞ்சை காண இயலாத சொற்ப நேர வாழ்க்கை. இதுவும் இறைவனின் வியப்பூட்டும் சான்றுகள்தான்.
அதே இறைவன்தான் 400 ஆண்டுகள் வரை வாழக்கூடிய ‘கடல் ஆமைகளையும்’ (TURTLE), தாவரத்தில் 5000 ஆண்டுகள் வரை வாழக்கூடிய ‘பிரிஸ்டிலேகோன்பைன்’ (BRISTLECONE PINE) மரத்தினையும் படைத்தான். கண் கொண்டு காண முடியாத சிறிய தாவர வகைகளைப் படைத்த இறைவன் 83 மீட்டர் வரை வானளாவி வளரக்கூடிய ‘ஜெய்ன்ட் சிகோயா’ (GIANT SEQUOIA) மரத்தினையும் நாட்டியுள்ளான்.
அடுத்து நீர் வாழ் உயிரினங்களை பார்ப்போம். மீன்களுக்கு நுரையீரல் அமைப்பு கிடையாது. தண்ணீரில் உள்ள ஆக்ஸிஜனை தங்கள் செவுள்களின் மூலம் சுவாசிக்கின்றன. இவைகளின் சுவாச அமைப்பு தண்ணீரில் உள்ளபோதுதான் ஆக்ஸிஜனை கிரகிக்க இயலும். கரையில் இவைகளினால் சுவாசிக்க இயலாது. உடனே இறந்துவிடும். அதே தண்ணீரில் வாழக்கூடிய திமிங்கிலத்திற்கு தண்ணீரில் உள்ள ஆக்ஸிஜனை கிரகிக்கும் அமைப்பு கிடையாது. இவை நுரையீரல் அமைப்புக் கொண்டுள்ளதால் நீர் பரப்பிற்கு மேல் வந்துதான் ஆக்ஸிஜனை சுவாசிக்க இயலும். இதுவும் அல்லாஹ்வின் அத்தாட்சிகளில் உள்ளதாகும்.
மிகவீரியமிக்க விஷத்தன்மை வாய்ந்தது ‘ராஜநாக’த்தினுடைய (KING COBRA) விஷமாகும். இவைகள் ஒரு முறை பிரயோகம் செய்யும் விஷம் மிகப்பெரிய யானையையே சில மணித்துளிகளில் மரணிக்கச் செய்யப் போதுமானதாகும். இவ்வளவு வீரியமிக்க இவற்றின் விஷம் மிகச்சிறிய ‘கீரிப்பிள்ளை’யை (MONGOOSE) கொல்லச் சக்தியில்லை என்றுச் சொன்னால் இந்தத்தன்மையில் சிந்திக்கக்கூடிய அம்சங்கள் ஏராளம். இதுவும் ஒரு அதிசயமிக்க விதிவிலக்கான அம்சம்தான்.
பறவைகளைப் பொறுத்த வரை வானில் பறந்து செல்லக்கூடிய ஆற்றலை பெற்றுள்ளன. அவை பறக்கும் தன்மையை பெற்றிருப்பதனால் தான் பறவைகள் என்று அழைக்கின்றோம். மிகமிகச் சிறிய ‘மொனார்க்’ வண்ணத்துப் பூச்சி (MONARCH) கனடாவிலிருந்து மிக நீண்டதொரு பயணத்தை மேற்கொண்டு அமெரிக்காவின் டெக்ஸாஸ், ‘ப்ளோரிடா’, ‘கலிபோர்னியா’ ஆகிய பகுதிகளுக்கு கிட்டதட்ட 2900 கிலோ மீட்டர்களைக் கடந்து தங்கள் கோடை வாசஸ்தலங்களுக்கு வருகை புரிகின்றன. இறைவன் தான் நாடியவைகளுக்கு ஆற்றலை அதிகப்படுத்துபவன். 2.4 மீட்டர் (மனிதர்களை விட உயரம்) உயரமும் 150 கிலோ எடையும் கொண்ட ‘ஆஸ்ட்ரிச்’ (OSTRICHES) பறக்கும் தன்மையில்லாத பறவையாகும். ஆனால், இவை மணிக்கு 60 கிலோ மீட்டர் வேகத்தில் ஓடக்கூடியவை.
இது போன்று அல்லாஹ்வின் அத்தாட்சிகளை அடுக்கிக்கொண்டே போகலாம். இருப்பினும் சுருக்கத்தை கருத்தில் கொண்டு விதிவிலக்காக படைக்கப்பட்டுள்ள அத்தகைய உயிரினங்களைப்பற்றியும் அவற்றின் அமைப்புகள் மற்றும் செயல்பாடுகளைப் பற்றியும் எந்த அம்சங்களில் மற்றவற்றுடன் வேறுபட்டுள்ளன என்பதைப் பற்றியும் தொடராக இப்பகுதியில் காண்போம்.
இந்த வரிசையிலே முதலாவதாக பாலூட்டி இனத்திலுள்ள விதிவிலக்கில் அடங்கக்கூடிய ‘எகிட்னா’ (ECHIDNA) என்று அழைக்கப்படும் எறும்புத்தின்னியைப் பற்றி இன்ஷா அல்லாஹ் அடுத்த தொடரில் பார்ப்போம்.

Sep 18, 2010

        ஊடகங்களின் நன்மையும் தீமையும்





                   ஊடகங்களின் மறைத்தலும், திரித்தலும் - தீர்வு என்ன?பாரெங்கும் பரந்து வாழும் பலதரப்பட்ட மக்களிடம் தகவல்களைக் கொண்டு சேர்ப்பதில் மீடியாக்கள் எனப்படும் ஊடகங்களின் பணி மகத்தானது. உலகின் ஒருகோடியில் நடைபெறும் ஒரு நிகழ்வை மறுகோடியில் வசிப்பவர்களால் உடனுக்குடன் அறியவும் அது குறித்து பேசவும் முடிகிறதெனில் பத்திரிகை, வானொலி, தொலைக்காட்சி, இணையம் ஆகிய ஊடகங்களின் மூலமே இது சாத்தியமாகிறது. ஊடகத்துறையால் மனித சமூகம் அடைந்த பயன்கள் கணக்கிலடங்கா.

மனித குல நன்மைக்காக உருவாக்கப்பட்ட ஊடகங்களில் சிலவற்றைத் தவிர பெரும்பாலும் வியாபாரத்தை மட்டுமே நோக்கமாகக் கொண்டிருப்பதும், பரபரப்பை ஏற்படுத்தும் நோக்கத்தில், இல்லாதவற்றை இட்டுக்கட்டுவதையும் உள்ளவற்றை மறைப்பதையும் திரிப்பதையுமே தமது குறிக்கோளாகக் கொண்டிருப்பதும் வேதனை தரும் உண்மை.
அகில உலகத்தையும் ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கும் இந்த ஊடகங்கள் மூலம் பரப்பப்படும் செய்திகளும் தகவல்களும் நல்லவையாக இருப்பின் மனித குலத்திற்கு நன்மை அளிக்கவும் தீயவையாக இருப்பின் தீமை அளிக்கவும் செய்கின்றன. ஊடகங்கள் மூலம் உரத்துச் சொல்லப்படும் கருத்துகள்தாம் மக்களின் உள்ளங்களில் ஊடுருவி ஓர் இனத்தை அல்லது தேசத்தை வழிநடத்தவோ வழிகெடுக்கவோ செய்கின்றன. சீர்கேடு-சீரமைப்பு ஆகிய இரண்டுமே ஊடகங்களால் சாத்தியப்படும்.
மறைத்தலுக்கும் திரித்தலுக்கும் காரணம்
உலகம் முழுவதும் இஸ்லாத்திற்கும் முஸ்லிம்களுக்கும் எதிராகப் பெருமளவில் களம் இறங்கியுள்ள ஊடகங்கள் இஸ்லாத்தையும் முஸ்லிம்களையும் குறித்த செய்திகளை மறைத்தும் திரித்தும் வெளியிடுவதையே தங்கள் குறிக்கோளாகக் கொண்டிருப்பதற்குச் சில காரணங்களும் இருக்கின்றன.
நாகரிகம் என்ற பெயரில் அநாச்சாரங்களிலும் கேடுகெட்டக் கலாச்சாரங்களிலும் ஊறிப்போன மேற்குலகும் அவற்றின் மூலம் பணம் சம்பாதிப்பதை மட்டுமே நோக்கமாகக் கொண்ட முதலாளித்துவமும் இவற்றுக் கெல்லாம் பெரும் சவாலாக, தனிமனித-சமூக ஒழுக்கத்தை வலியுறுத்தும் இஸ்லாத்தின் வளர்ச்சியைப் பொறுக்காமல் இஸ்லாத்தின் மீதும் முஸ்லிம்களின் மீதும் அவதூறுச் சேற்றை அள்ளி இறைத்து இஸ்லாத்தின் மீது களங்கத்தை ஏற்படுத்துவதே இவர்களின் நோக்கம். அதன் மூலம் காட்டாற்று வெள்ளமெனக் கரைபுரண்டோடும் இஸ்லாத்தின் வளர்ச்சியைத் தடுத்து நிறுத்திவிடலாம் என்பது இவர்களின் கனவு. அதற்காக இவர்கள் தம் ஆதிக்கத்தில் வைத்திருக்கும் ஊடகங்களைப் பயன்படுத்திக் கொள்கின்றனர்.
இந்தியா போன்ற கலாச்சாரப் பெருமை வாய்ந்த நாடுகளின் ஊடகங்கள் இஸ்லாத்தின் மீதும் முஸ்லிம்கள் மீதும் களங்கம் ஏற்படுத்தக் களம் இறங்கியிருப்பதற்கான காரணம் வேறுவிதமானது.
ஆண்டாண்டுக் காலமாக ஒரு சாராரை அடிமைப்படுத்தி, பிறப்பால் உயர்வு தாழ்வு கற்பித்து, அடக்கி ஒடுக்கி வைத்திருந்தவர்கள், இஸ்லாம் இந்த மண்ணில் வேரூன்றி ஏற்றத் தாழ்வுகளை வேரறுத்து சமத்துவத்தையும் சகோதரத்துவத்தையும் வலியுறுத்தியபோது அதன்பால் கவரப்பட்டு கோடானு கோடி மக்கள் விடியலைத்தேடி, சத்தியத்தை நோக்கி வருவதையும் அதன் காரணமாக இவ்வளவு காலமும் தமக்கு அடிபணிந்து, தலைவணங்கிச் சேவகம் செய்து வந்தவர்கள் வீறுகொண்டு எழுந்து நிமிர்ந்து நிற்பதைக் கண்டு பொறுக்காமல், தம் கைவசம் இருக்கும் ஊடகங்கள் மூலம் இஸ்லாம் மற்றும் முஸ்லிம்கள் தொடர்பான செய்திகளை மறைத்தும் திரித்தும் தங்கள் கைவரிசையைக் காட்டுவதன் மூலம் இந்திய மண்ணில் இஸ்லாம் அடைந்து வரும் அசுர வளர்ச்சியைத் தடுத்து நிறுத்திவிடலாம் என்பது இவர்களின் எண்ணம். இதையும் மீறி இஸ்லாம் வளர்ந்து வருகிறது என்பது வேறு விஷயம்.
வெகுவேகமாகப் பரவி வரும் சத்திய இஸ்லாத்தின் மீது கொண்ட காழ்ப்புணர்ச்சி காரணமாக உலக அளவில் யூத கிறிஸ்தவ சக்திகளும், நமது தேச அளவில் சங்பரிவார சக்திகளும் தம் கட்டுப்பாட்டில் உள்ள ஊடகங்களைப் பயன்படுத்தி இஸ்லாத்திற்கெதிராகவும் முஸ்லிம்களுக்கெதிராகவும் திட்டமிட்டு வதந்திகளைப் பரப்புவதையும் உண்மைச் செய்திகளை இருட்டடிப்பு செய்வதையும் தமது கொள்கையாகவே கொண்டுள்ளன.
ஊடகங்களின் பாரபட்சமான போக்கு
தீவரவாதத்திற்கு மதம், இனம், மொழி, தேசம் என்னும் எந்த வேறுபாடும் இல்லை. தீவிரவாதம் முற்றிலுமாக வேரறுக்கப்படவேண்டும் என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால் முஸ்லிமல்லாத ஒருவன் அவன் சார்ந்துள்ள மதத்தின் பெயராலோ, இனத்தின் பெயராலோ, மொழியின் பெயரலோ தீவிரவாதத்தில் ஈடுபட்டால் அந்த மதம், இனம், மொழி, ஆகியவற்றின் அடைமொழியுடன் அவன் அழைக்கப்படுவதில்லை. அதே செயலை ஒரு முஸ்லிம் செய்து விட்டால் 'முஸ்லிம் தீவிரவாதி' அல்லது 'இஸ்லாமியத் தீவிரவாதி' என்னும் அடைமொழியுடன் வெளியிட எந்த ஊடகமும் தயங்குவதில்லை.
எந்த இடத்தில் என்ன குற்றம் நிகழ்ந்தாலும் அக்குற்றத்தில் தொடர்புடையவர்கள் முஸ்லிம்களாக இருந்து விட்டால் அதைப் பெரிதுபடுத்தித் தலைப்புச் செய்தியாக வெளியிடுவதும், அதே குற்றத்தை மற்றவர்கள் செய்தால் அச்செய்தியை ஒரு மூலையில் சாதராணச் செய்தியாக வெளியிடுவதும், பல்லாயிரக் கணக்கில் முஸ்லிம்கள் கலந்து கொள்ளும் மாபெரும் மாநாடுகள், பேரணிகள் என்றால் சில நூறு பேர்கள் கலந்து கொண்டதைப்போலப் பத்திரிகைகளில் வெளியிடுவதும் தொலைக்காட்சி செய்திகளில் காண்பிக்கும்போது மாநாடு அல்லது பேரணி தொடங்குவதற்குமுன் மக்கள் வந்துசேரத் தொடங்கிய நிலையில் உள்ள காட்சிகளை மட்டும் வெளியிடுவதும்தான் அவர்களின் 'ஊடக தர்மம்'.
முஸ்லிம் வீடுகளில் பழைய பேட்டரிகளும் துண்டு ஒயர்களும் காய்கறி நறுக்கப் பயன்படுத்தும் கத்திகளும் கண்டெடுக்கப் பட்டால் அவை 'பயங்கர ஆயுதங்கள்'; ஆனால் பாசிச சக்திகளின் அங்கத்தவர் வீடுகளில் துப்பாக்கிளும் வெடிகுண்டுகளும் டெட்டனேட்டர்களும் கிடைத்தால் அவற்றைப் பரப்பிவைத்து எந்த காவல்துறையும் படம் காட்டாது.
பல்வேறு வகைகளிலும் முஸ்லிம்கள் குறித்த செய்திகள் மறைக்கப்படுவதையும் திரிக்கப்படுவதையும் அன்றாடம் கண்டு கண்டு நமது மனம் குமுறுகிறது.
இதற்கான தீர்வு என்ன?
"நமக்கென்று தனியாக நாளிதழும் தொலைக்காட்சியும் தேவை" இதுவே முஸ்லிம்கள் பெரும்பாலானோரின் பதிலாக இருக்கும். ஆம், தேவைதான் என்பதை மறுப்பதற்கில்லை. ஆனால் செய்தித்தாள் மற்றும் தொலைக்காட்சி ஒளிபரப்பு ஆகிய இவ்விரண்டையும் தொடங்குவதும் தொடங்கியதைத் தொய்வின்றித் தொடர்ந்து நடத்துவதும் பலரும் நினைப்பதுபோல் அவ்வளவு எளிதான காரியமல்ல.
இலாப நோக்கம் இல்லாவிட்டாலும் நஷ்டம் இல்லாமல் தொடர்ந்து நடத்துவதற்கு வாசகர்களாகிய நாம் நமது பங்களிப்பைச் சரியான முறையில் நல்குவதிலும் பெரும் வியாபார நிறுவனங்கள் பொறுப்புடன் தமது விளம்பரங்களைத் தந்துதவுவதிலும்தான் அவற்றின் எதிர்காலம் அடங்கியுள்ளது.
1.நமக்கென்று தனியாக ஊடகம் தொடங்கும் திட்டம்
முஸ்லிம்களுக்கெனத் தனியொரு நாளிதழ் தொடங்குவதானாலும், தொலைக்காட்சித் தொடங்குவதானாலும் அதற்கான ஏற்பாட்டைச் சமுதாய அக்கரை கொண்ட செல்வந்தர்களும் தொழிலதிபர்களும் செய்ய முன்வரவேண்டும். இவ்விதம் தொடங்கப்படும் ஊடகங்கள் இயக்கச் சார்பில்லாதவையாக இருக்க வேண்டும் என்பது மிக முக்கியம்.
நூளிதழ் தொடங்கத் திட்டமிடுபவர்கள், அண்டை மாநிலமான கேரளத்தில் அண்மையில் தொடங்கப்பட்ட 'மாத்யமம்' நாளிதழ், அதற்கு முன்னதாக நீண்ட காலமாக நடந்து வரும் பல்வேறு நாளிதழ்களைப் பின்னுக்குத் தள்ளிவிட்டு வெகுவேகமாக முன்னேறி வளைகுடாப் பதிப்பு வரை பல்வேறு பதிப்புகளை வெளியிடும் அளவுக்கு வளர்ந்திருப்பதையும் முன்னுதாரணமாகக் கொண்டு தமது திட்டத்தை அமைத்துக் கொள்ளலாம்.
2.கேபிள் தொலைக்காட்சி ஒளிபரப்பு
தனியாகத் தொலைக்காட்சி தொடங்குவது என்னும் பெரும் திட்டத்தை உடனடியாகச் செயல்படுத்துவது சற்றுச் சிரமம்தான் என்றாலும் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் பகுதிகளில் இஸ்லாமிய கேபிள் ஒளிபரப்புகளைத் தொடங்கலாம்.
நம் சமுதாயம் குறித்து மறைக்கப்பட்டவற்றை வெளிச்சத்திற்குக் கொண்டு வருவதும் திரிக்கப்பட்டவற்றின் உண்மை நிலையை பகிரங்கப்படுத்துவதும் இத்தகைய கேபிள் தொலைக்காட்சி ஒளிபரப்பின் மூலம் செயல்படுத்துவது எளிது.
சமீபத்தில் குமரி மாவட்டத்தில் ஒரு கிறிஸ்தவ சகோதரர் இஸ்லாமிய கேபிள் ஒளிபரப்பைத் தொடங்கி வெற்றிகரமாக நடத்திக் கொண்டிருப்பது மட்டுமின்றி உயரிய இஸ்லாத்தின் உன்னதக் கொள்கைகளால் கவரப்பட்டு அவரே இஸ்லாத்திற்கு மாறியதும் இங்குக் குறிப்பிடத் தக்கது.
நமக்கென நாளிதழும் தொலைக்காட்சியும் தொடங்கப்படும்போது நமது செய்திகள் உள்ளது உள்ளபடி உலகுக்கு உணர்த்தப்படும். அதற்கான காலம் கனிந்து வரும், இன்ஷா அல்லாஹ்.
இப்போதைக்கு நாம் செய்ய வேண்டியது என்ன?
3.தனியார் தொலைக்காட்சிகளைப் பயன்படுத்திக் கொள்ளுதல்
சமுதாய இயக்கங்கள் அவ்வப்போது தனியார் தொலைக்காட்சிகளில் தினந்தோறும் நேரத்தை ஒதுக்கி நிகழ்ச்சிகள் நடத்துகின்றன. இந்த நிகழ்ச்சிகளில் அவ்வப்போது மறைக்கப்பட்ட, திரிக்கப்பட்ட நம் சமுதாயச் செய்திகளின் உண்மை நிலவரங்களை விளக்கிச் சொல்வதிலும், உண்மை நிகழ்ச்சிகளை ஒளிபரப்புவதிலும் அதிக கவனம் செலுத்த வேண்டும்.
4.ஊடகத்துறை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துதல்
இனிவரும் அடுத்த தலைமுறையினராவது கல்வியில் மேம்பாடு அடைய வேண்டும் என்னும் உயரிய நோக்குடன் சமுதாய இயக்கங்கள் ஆண்டு தோறும் மாணவர்களுக்கென கல்வி வழிகாட்டுதல் சேவைகளை கோடை விடுமுறையில் வழங்கி வருகின்றன. அதன் காரணமாக அண்மைக் காலமாக உயர்கல்வி கற்பதில் நம் சமுதாய மாணவர்கள் அதிக அக்கரை எடுத்து வருவதும், பெற்றோர்கள் தம் பிள்ளைகளை உயர்கல்வி பயில ஊக்கப்படுத்துவதும் பாராட்டுக்குரியன.
உயர்கல்வி பற்றிய தெளிவை வழங்கும்போது ஊடகத்துறை பற்றியும் இதழியல் பற்றியும் மாணவர்களுக்கு எடுத்துக் கூறி அதிகமதிகம் நம் சமுதாய மாணவர்களை இத்துறையில் கவனம் செலுத்தும்படி உற்சாகப்படுத்தினால், நம் சமுதாயத்தில் ஊடகவியாலளர்கள் அதிகமதிகம் உருவாக வாய்ப்புகள் ஏற்படும். பரவலாக ஊடகத்துறையில் நாம் ஊடுருவும்போது பெருமளவில் மறைத்தலும் திரித்தலும் தவிர்க்கப்படும்.
ஊடகங்களில் பணிபுரிபவர்கள் பொதுவாக அவற்றின் நிர்வகத்துக்கு கட்டுப்பட்டுத்தான் செயல்பட முடியும் என்றாலும், செய்தியாளர்கள் செய்திகளை வழங்கும் விதத்தில்கூட மறைத்தலும் திரித்தலும் நடக்கின்றன என்பதும் உண்மை. நம் சமுதாயச் செய்தியாளர்கள் அதிகமாகும்போது அவர்கள் உண்மையான செய்திகளை உள்ளது உள்ளபடி தருவதற்கு அதிக வாய்ப்புகள் உண்டு.
5. சமுதாயப் பத்திரிகைகள் ஊடகப் பயிற்சிப் பட்டறைகளை உருவாக்குதல்
நம் சமுதாயத்தின் பிரபலமான பத்திரிகைகள், குறிப்பாக வார இதழ்கள், பத்திரிகைத் துறையில் ஆர்வமுள்ள, எழுத்தாற்றல் மிக்க இளைஞர்களுக்குக் கட்டுரைப்போட்டிகள், செய்திசேகரிப்புப் பயிற்சிகள் ஆகியவற்றை நடத்துவதன் மூலம், திறமையானவர்களைத் தேர்ந்தெடுத்து அவர்களுக்கு அனுபவம் உள்ள ஊடகவியலாளர்களைக் கொண்டு பயிற்சி அளித்து சிறந்த பத்திரிகையாளர்களாக உருவாக்க வேண்டும். இத்திட்டத்தின் மூலம் ஆண்டு தோறும் சிலரையாவது தேர்ந்தெடுத்து அதற்கான பயிற்சியை அளித்தால் நம் சமுதயத்திலும் நாளடைவில் சிறந்த பத்திரிகையாளர்கள் உருவாக வழிபிறக்கும்.
6.பத்திரிகைகளுக்கு வாசகர் கடிதம் எழுதுதல்
நாம் அன்றாடம் வாசிக்கும் பத்திரிகைளில் இஸ்லாத்திற்கும் முஸ்லிம்களுக்கும் எதிரான தகவல்களை நாம் காண நேர்ந்தால் அத்தகவல் தவறானதாக இருப்பின் சரியான தகவலை தகுந்த ஆதாரங்களுடன் உடனுக்குடன் அப்பத்திரிகைக்கு மறுப்புக்கடிதம் எழுத வேண்டும்.
எங்கோ ஓர் இடத்தில் நடந்ததாக நாம் படிக்கும் செய்தி பற்றிய உண்மை நிலை நமக்குத் தெரியாது தான். ஆனால் அவரவர் வசிக்கும் பகுதியில் நடந்ததாக ஒரு தவறான செய்தியை காணும்போது அப்பகுதியைச் சேர்ந்தவர்களாவது இது பற்றிய உண்மை நிலையை அறிந்து தமது மறுப்பையும் உண்மை நிலையையும் தெரிவிக்கலாம் அல்லவா?
நாம் எழுதும் கடிதங்களை சம்பந்தப்பட்ட பத்திரிகை பிரசுரிக்காவிட்டாலும் (பெரும்பாலும் பிரசுரிக்க மாட்டார்கள் என்பது வேறு விஷயம்) மனம் தளராமல் தொடர்ந்து ஒவ்வொரு தவறான தகவலுக்கும் நமது எதிர்ப்பைக் கடிதம் மூலம் தெரிவிக்க வேண்டும். இதற்காகப் பெரும் பொருள் செலவு செய்யவேண்டியதில்லை ஒரு சாதாரண அஞ்சலட்டையேகூடப் போதும். மேலும் மேலும் தொடர்ந்து மறுப்புகளும் எதிர்ப்புகளும் வரும்போது அடுத்தடுத்த செய்திகளிலாவது கொஞ்சம் அடக்கியே வாசிப்பார்கள்.
7. தொலைக்காட்சிகளுக்கு மறுப்பைத் தெரிவித்தல்
தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் இவ்விதம் தவறான தகவல்கள் வரும்போது, தொலைபேசி மூலம் நேயர்கள் நேரடியாக தொடர்பு கொள்ளும் நிகழ்ச்சிகள் நடக்கும் தருணத்தைப் பயன்படுத்தி, நம் சமுதாயம் தொடர்பாக தவறான தகவல் வெளியிட்ட அவர்களின் தவறான போக்கை கண்டிக்க வேண்டும். உடனே இணைப்பை அவர்கள் துண்டித்தும் விடலாம்; ஆனாலும் நடுநிலையான நேயர்கள் அவர்களை இனம் கண்டு கொள்வார்கள் அல்லவா?
8. நீதிமன்றங்களில் வழக்குத் தொடுத்தல்
சமுதாயத்துக்கு அவப்பெயரை ஏற்படுத்தும் நோக்கில் தவறான தகவல்களை வெளியிடும் ஊடகங்களுக்கு எதிராக நீதி மன்றங்களில் வழக்குத் தொடரலாம். இவ்விதம் வழக்குத் தொடுப்பது பற்றிய விபரங்களை அறிய சமுதாயத்தில் அக்கரை கொண்ட வழக்குரைஞர்களை அனுகலாம். இலவச சட்ட ஆலோனைகள் வழங்க எத்தனையோ நல்ல வழக்குரைஞர்கள் நம் சமுதாயத்தில் இருக்கின்றனர். அவர்களை அணுகி ஆலோசனைகள் பெறலாம்.
9. ஊடகங்களின் பேட்டிகளைப் பயன்படுத்திக் கொள்ளுதல்
அவ்வப்போது பத்திரிகைள் மற்றும் தொலைக்காட்சிகள் சார்பாக ஏதேனும் பிரச்சினைகள் குறித்து சமுதாயத் தலைவர்களிடம் பேட்டி காண்பது வழக்கம். அத்தகைய பேட்டிகளை சமுதாயத் தலைவர்கள், மறைக்கப்பட்ட உண்மைகளை வெளிக் கொணரவும் திரிக்கப்பட்ட செய்திகளைத் தெளிவாக விளக்கிச் சொல்லவும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
10.குறுஞ்செய்திகள் எனப்படும் எஸ் எம் எஸ் தகவல் பரிமாற்றம்
கைபேசி எனப்படும் செல்போன்கள் பட்டி தொட்டியெங்கும் பரவலாகப் பலரிடமும் உபயோகத்துக்கு வந்து விட்ட இக்காலத்தில் நமது கைகளில் உள்ள நமது கைபேசிகளையே நாம் ஓர் ஊடகமாக்கி அவ்வப்போது இஸ்லாம் மற்றும் முஸ்லிம்கள் குறித்த தவறான செய்திகள் ஊடகங்களில் படிக்க/பார்க்க நேர்ந்தால் அவற்றின் உண்மை நிலையைச் சுருக்கமாகக் குறுஞ்செய்திகள் எனப்படும் எஸ்எம்எஸ் மூலம் நமக்குத் தெரிந்தவர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம். குறிப்பாக மாற்று மத நண்பர்களுக்கு உண்மையை உணர்த்தலாம். பல கைபேசி இணைப்பு நிறுவனங்கள் இலவச எஸ்எம்எஸ் சேவையை வழங்குகின்றன. இத்தகைய இலவச சேவைகளை ஆக்கப்பூர்வமான வழிகளில் நாம் பயன்படுத்தலாம்.
11.ஜும்ஆ மேடைகள் என்னும் அற்புதமான ஊடகம்
ஊடகங்கள் உலகத்தில் உலாவரத் தொடங்குமுன்பே மிகச்சிறந்த ஊடகமாகிய ஜும்ஆ மேடைகள் நம்மிடம் இருக்கின்றன என்பதை நாம் உணரத் தவறிவிட்டோம்.
ஜும்ஆ மேடைகளில் தொழுகையையும் நோன்பையும் பற்றி மட்டுமே பேசிக் கொண்டிருக்காமல், சமுதாயத்திற்கு ஏற்பட்டுள்ள களங்கத்தைத் துடைத்தெறிவதும், நம் சமுதாயத்தைப் பற்றிய தவறான கண்ணோட்டத்தைக் களைவதும் கூட மார்க்கத்திற்கு உட்பட்டதுதான் என்பதை உணர்ந்து அந்தந்த வாரங்களில் நாம் சந்திக்கும் பிரச்சனைகளின் உண்மை நிலை குறித்து மக்களுக்கு உரை நிகழ்த்தும் ஆலிம்கள் உணர்த்த வேண்டும்.
ஜும்ஆ பிரசங்கம் நடத்தும் ஆலிம்கள் அவரவர் பகுதிகளில் நடக்கும் சம்பவங்கள் குறித்த விரிவான தகவல்களைத் திரட்டி அந்த வார ஜும்ஆ பிரசங்கத்தில் அது பற்றி விளக்க வேண்டும். ஆலிம்களாகிய மார்க்க அறிஞர்கள் அதற்கேற்பத் தங்களைத் தயார்படுத்திக் கொள்ள வேண்டும்.
செய்தி ஊடகங்களில் பெரும்பாலும் பொய்யான தகவல்கள் திரும்பத் திரும்பத் கூறப்படுவதால் அவற்றைக் கேட்கும் நம் சமுதாயத்தவர் சிலர் கூட இவை பற்றிய உண்மை நிலையை அறியாதிருக்கலாம். அத்தகையோர் இந்த ஜும்ஆ உரைகளைக் கேட்பதன் மூலம் உண்மையை உணர்ந்து கொள்வர். பெரும்பாலான பள்ளிகளில் ஜும்ஆ உரைகள் ஒலிபெருக்கி மூலம் ஒலிபரப்பப்படுவதால் பள்ளிக்கு வெளியே இருக்கும் மாற்றுமத சகோதரர்களின் செவிகளையும் இச்செய்திகள் சென்றடையும்.
12. ஊடகங்களைப் புறக்கணிக்கும் கட்டாயம்
டென்மார்க் பத்திரிகை ஒன்று கடந்த ஆண்டு நமது உயிரினும் மேலான நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் குறித்த கேலிச்சித்திரம் வெளியிட்டதையும், அதற்கு ஆதரவாக அந்நாட்டு அரசு, "அது பத்திரிகை சுதந்திரம்" என்று சப்பைக் கட்டு கட்டியதையும் கண்டித்து உலகம் முழுதும் வாழும் முஸ்லிம்கள், குறிப்பாக டென்மார்க் அரசின் தயாரிப்புகளைப் பெருமளவில் இறக்குமதி செய்து வந்த மத்திய கிழக்கு நாடுகள் டென்மார்க் தயாரிப்புகளைப் புறக்கணித்ததால் அந்நாட்டின் பொருளாதாரத்தையே ஆட்டம் காணச் செய்தோமே! அந்த முன்னுதாரணத்தைப் பின்பற்றி நமக்கு எதிராகச் செயல்படும் அனைத்து ஊடகங்களுக்கும் எதிராக நாம் களம் இறங்க வேண்டும். நமக்கு எதிராக எழுதும் பத்திரிகைகளைக் காசு கொடுத்து வாங்குவதை முதலில் நாம் நிறுத்த வேண்டும். நமக்கெதிராக செயல்படும் தினமலர் போன்ற பத்திரிகைகளை முற்றிலுமாகப் புறக்கணிக்க வேண்டும்.
13.மக்கள் சக்திப் போராட்டம்
நம் சமுதாயத்திற்கு எதிராகக் கங்கணம் கட்டிக் கொண்டு களம் இறங்கியுள்ள ஊடகங்களைக் கண்டறிந்து அவற்றை நாம் விழிப்புடன் கண்கானித்து வரவேண்டும். இதற்கென அறிஞர் குழு ஒன்றை அமைத்துக் கண்கானித்து, விஷமத்தனத்தை அவை அரங்கேற்றும்போது அதற்கு எதிராக முழு சமுதாயமும் ஒன்றினைந்து அத்தகைய ஊடகங்களுக்கெதிராக வீதியில் இறங்கி ஜனநாயக முறையில் போராடவேண்டும்.
சமீபத்தில் நமது உயிரினும் மேலான நபிகள் நாயகம் குறித்து டென்மார்க் பத்திரிகையின் கேலிச்சித்திரத்தை வேண்டுமென்றே மறுபிரசுரம் செய்த தினமலருக்கு எதிராக நாம் போராடியதும், நமது வீரியமான போராட்டத்தைக் கண்டு அஞ்சி அவர்கள் பகிரங்க மன்னிப்புக் கேட்டதும் நினைவிருக்கலாம்.
14. இணையம் - நமக்கு வாளும் கேடயமும்
ஊடகங்களில் அதிநவீனமானதும் உலகம் முழுவதும் இப்போது பரவலாக உபயோகத்திற்கு வந்து விட்டதுமான இன்டர்நெட் எனப்படும் இணையத்தில் நாம் அதிக கவனம் செலுத்த வேண்டும்.
இஸ்லாத்திற்கெதிரான கருத்துக்களைத் திட்டமிட்டு பரப்புவதில் பத்திரிகை, தொலைக்காட்சி ஆகியவற்றையெல்லாம் விட அதிகமாகப் பொய்யும் புரட்டும் மறைத்தலும் திரித்தலும் இணையத்தில் கொடிகட்டப்பறக்கின்றன.
நேருக்கு நேர் நின்று போராட நெஞ்சுரம் இன்றி ஒளிந்து கொண்டு புறமுதுகில் குத்தும் கோழைகள் ஒருபுறம், கொடிய நஞ்சைத் தேன் கலந்து கொடுப்பதுபோல் இஸ்லாத்தின் பெயரால் முஸ்லிம்களைக் கவரும் விதத்தில் இணையத்தில் சில கருத்துக்களைப் பதித்து, துவக்கத்தில் இஸ்லாமியப் பதிவுகளைப்போன்ற தோற்றத்தை ஏற்படுத்தி, பின்னர் வாழைப்பழத்தில் ஊசியை ஏற்றுவதைப்போல் இஸ்லாத்திற்கு எதிரான கருத்துக்களைத் திணிக்கும் தளங்கள் ஒருபுறம், பகிரங்கமாகவே இஸ்லாத்திற்கும் முஸ்லிம்களுக்கும் எதிராக வன்முறையைத் தூண்டும் சங்பரிவாரச் சதித்தளங்கள் இன்னொரு புறம், இவ்விதம் அநேக சவால்களை இணையத்தில் நாம் அன்றாடம் சந்திக்க நேருகிறது.
இணையத்தில் உலாவரும் இஸ்லாமியச் சகோதரர்கள் மிகவும் எச்சரிக்கையுடன் இணையத்தைக் கையாள வேண்டும். ஈமானின் வலிமையை இதயத்தில் தேக்கி இணைய எதிரிகளை இணையத்தின் மூலமே தோற்கடிக்க வேண்டும்.
சில புகழ்பெற்ற இணைய தளங்கள் இலவசமாகப் பதிவுகளை உருவாக்க வழிவகை செய்து வைத்துள்ளன. அவற்றை முறையாகப் பயன்படுத்தி இஸ்லாத்திற்கெதிரான சவால்களை இணையத்தில் முறியடிக்க வேண்டும்.
நாம் உருவாக்கிய பதிவுகளை நமக்கு அறிமுகமானவர்களுக்கு மட்டுமே கொடுத்துப் படிக்கச் சொல்வதை விடுத்து முறையாக இணைய தளங்களின் தேடுபொறிகளிலும் பதிவுகளைத் திரட்டும் தமிழ்மணம், தமிழ்வெளி, திரட்டி, போன்ற அனைத்துப் பதிவுத்திரட்டிகளிலும் பதிந்து வைத்தால்தான் நமது பதிவுகளும் அவற்றின் மூலம் நாம் சொல்லும் கருத்துக்களும் அனைவரையும் சென்றடையும்.
வலைப்பதிவுகளில் இஸ்லாத்திற்கெதிரான கருத்துக்களைக் காண நேர்ந்தால் உடனுக்குடன் அவற்றுக்குப் பின்னூட்டங்களின் மூலம் பதில் கொடுக்க வேண்டும். பின்னூட்டங்கள் இடும்போது சரியான தகவல்களை ஆதாரங்களுடன் பதிக்க வேணடும்.
பதில் சொல்லும் அளவுக்கு போதிய ஆற்றல் நமக்கு இல்லாவிட்டால் இதே விஷயம் குறித்துப் பல்வேறு முஸ்லிம் வலைப்பதிவர்கள் தரும் தகவல்களை நன்றியுடன் குறிப்பிட்டு அவற்றுக்கான தொடுப்புகளைக் கொடுக்க வேண்டும்.
இணையத்தில் உலா வரும் இஸ்லாத்திற்கெதிரான தகவல்களுக்கு திறமையுடன் பதில் அளிக்கும் சகோதரப் பதிவர்களான அபூமுஹை, நல்லடியார், இறைநேசன், வஹ்ஹாபி, ஜீஎன், இப்னுபஷீர், மரைக்காயர், அபூஸாலிஹா போன்ற சிறந்த பதிவர்கள் அருமையாக இப்பணியைச் செய்து வருகின்றனர். இவர்களைப்போல் இன்னும் ஏராளமான பதிவர்கள் அற்புதமாகவும் அமைதியாகவும் அழகாகவும் இணைய எதிரிகளை எதிர்கொண்டு வருவதைத் தொடர்ந்து இணையத்தில் உலா வருபவர்கள் அறிவார்கள். இவர்களின் பதிவுகளை ஊன்றி கவனித்தால் ஏராளமான தகவல்கள் நமக்குக் கிடைக்கும்.
15. முஸ்லிம் பதிவர்கள் நடத்தும் பொதுவான பதிவுகள்
மொழி, கலை, இலக்கியம், கதை, கவிதை, கட்டுரைகள் இப்படிப் பொதுவானவற்றில் ஆர்வம் கொண்ட முஸ்லிம் பதிவர்கள் இணையத்தில் நிறைய பேர் இருப்பது ஆறுதலான விஷயம். இஸ்லாமியப் பதிவுகள் எழுதும் எழுத்தாளர்களைவிடப் பொதுவான பதிவுகள் எழுதும் எழுத்தாளர்கள், இணையத்தில் இஸ்லாம் குறித்து மறைக்கப்படும் திரிக்கப்படும் செய்திகளை வெளிக் கொணர்வதற்கு மிகவும் ஏற்றவர்கள் எனலாம்.
இஸ்லாமிய பதிவுகளை முஸ்லிம்கள் மட்டுமே பெரும்பாலும் பார்வையிடுவர். எனவே இஸ்லாமியப் பதிவுகளில் எடுத்துவைக்கப்படும் கருத்துகள் முஸ்லிம்களை மட்டுமே சென்றடையும். ஆனால் பொதுவானவற்றில் ஆர்வம் கொண்டு இணையத்தில் உலாவரும் அனைத்துச் சமய சகோதர சகோதரிகள் கவனத்திற்கு நம்மைப் பற்றிய உண்மைகளை இத்தகைய வலைப்பதிவர்களால்தான் கொண்டு சேர்க்க முடியும்.
எனவே மொழி, இலக்கியம், கதை கவிதை கட்டுரைகளில் ஆர்வம் கொண்ட இஸ்லாமியப் பதிவர்களே! உங்கள் இலக்கிய ஈடுபாட்டுடன் நம் சமுதாயச் செய்திகளையும் இஸ்லாம் மற்றும் முஸ்லிம்கள் தொடர்பான உண்மையான தகவல்களையும் இடையிடையே உங்கள் வாசகர்களுக்கு மத்தியில் கொண்டு செல்லுங்கள். நடுநிலையான நல்லவர்கள் உண்மைகளை உணர்ந்து கொள்ள வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுங்கள். இதன் மூலம் இம்மையில் மட்டுமின்றி மறுமையிலும் வெற்றி பெறுவீர்கள். அல்லாஹ் உங்களுக்கு அளித்திருக்கும் அற்புதமான எழுத்தாற்றலை இஸ்லாத்திற்காகப் பயன்படுத்தியதற்கு அளப்பெரும் கூலியை நாளை மறுமையில் பெறுவீர்கள்.
16.இஸ்லாமிய இணைய தளங்களின் மேலான கவனத்திற்கு
பத்திரிகை, தொலைக்காட்சி ஆகிய ஊடகங்களைவிட இணையத்தில் இஸ்லாமிய எதிர்ப்பு எந்த அளவுக்கு இருக்கிறதோ அதைவிடவும் அதிகமாகவே இஸ்லாமியப் பிரச்சாரமும் நடக்கிறது என்பதே உண்மை. உலககெங்கும் இணைய வழியே இஸ்லாத்தை அறிந்து அதன்பால் ஈர்க்கப்பட்டவர்கள் அதிகம். இந்நிலையை உருவாக்கிய இஸ்லாமிய இணைய தளங்களைப் பாராட்ட வேண்டும்.
இஸ்லாமிய இணைய தளங்கள், இணைய உலகில் இஸ்லாத்திற்கும் முஸ்லிம்களுக்கும் எதிரான மறைத்தலையும் திரித்தலையும் சரியான முறையில் வெளிக் கொணர அதிக கவனம் எடுக்க வேண்டும். சதிகாரர்களின் சதியை துணிவுடன் தோலுரித்துக் காட்டிய தெஹல்கா போன்ற வீரமும் விவேகமும் நிறைந்த தளங்களைப்போல் உங்கள் தளங்களை பயன்படுத்தி உண்மைகளை வெளிச்சத்திற்கு கொண்டு வரவேண்டும்.
சமூகத்தின்பால் நீங்கள் கொண்டுள்ள அக்கரை அவ்வப்போது நீங்கள் வெளியிடும் ஆக்கங்களில் பிரதிபலிக்க வேண்டும். புகழ் பெற்ற இஸ்லாமிய இணைய தளங்களுக்கென ஏராளமான வாசகர்கள் உள்ளனர். சமுதாயம் உங்கள் நிலைபாட்டை உன்னிப்பாகக் கவனித்து வருகிறது.
நமது உயிரினும் மேலான நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை அவமதித்த தினமலர் நாளிதழுக்கெதிராக www.onlinepj.com  போன்ற இணைய தளங்கள் விடுத்த வேண்டுகோளை ஏற்று வளைகுடா நாடுகளில் வசிக்கும் வாசகர்கள், தாம் வசிக்கும் நாடுகளில் அந்த நாளிதழின் இணைய தளத்தை முடக்க மிகவும் ஆர்வத்துடன் செயல்பட்டதை இணையத்தில் தொடர்புடைய பலரும் அறிவர். எனவே எண்ணற்ற வாசகர்களைத் தம்வசம் கொண்டுள்ள இஸ்லாமிய இணைய தளங்கள் நம் சமுதாய மக்களிடையே போதிய விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.
17.மின்னஞ்சல் மூலம் உண்மையை உணர்த்துதல்
பல்வேறு இலவச மின்னஞ்சல் சேவைகள் இணையத்தில் கிடைக்கின்றன. அவற்றைப் பயன்படுத்தி மறைக்கப்பட்ட திரிக்கப்பட்ட கருத்துக்களின் உண்மையை விளக்கி எண்ணற்ற இணைய எழுத்தளர்கள் அற்புதமான மடல்களை எழுதிக் குவிக்கின்றனர். அத்தகைய மின்னஞ்சல்கள் நமக்கு வரும்போது சக நண்பர்களின் மின்னஞ்சல் முகவரிகளுக்கு அவற்றை அனுப்பிவைக்க வேண்டும். மடலாடற் குழுமங்களில் நமது மின்னஞ்சல் முகவரியை இணைத்துக் கொண்டு உண்மையை நம் சக நண்பர்களுக்கு மத்தியில் - குறிப்பாக - பிறமத நண்பர்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும்.
முடிவுரை
"உங்களில் எவரேனும் தீய செயல் நடப்பதைக் கண்டால் அவர் அதனைத் தம் கரங்களால் தடுக்கட்டும்; இயலாவிட்டால் நாவினால் தடுக்கட்டும்; (அதற்கும்) இயலா விட்டால் இதயத்தால் தடுத்து(ஒதுங்கி)க் கொள்ளட்டும். இது ஈமானின் பலவீனமான (இறுதி) நிலையாகும்" என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூ சயீத் (ரலி); ஆதாரம்: புகாரி.
மேற்காணும் நபிமொழிக்கேற்ப நமது சமுதாயத்திற்கெதிரான மறைத்தலும் திரித்தலும் நம் கண் முன்னே நடைபெறும்போது "நமக் கென்ன?" என்று ஒதுங்கி நிற்காமல் ஒவ்வொரு முஸ்லிமும் தம்மால் இயன்ற வழியில் இத்தகைய அநீதிக் கெதிராகக் களம் இறங்க வேண்டும்.
நம் சமுதாயம் விழிப்புடன் இருக்கிறது என்பதை ஊடக உலகம் உணர வேண்டும்.
இதை உணர்த்த வேண்டியது நமது கடமை என்பதை ஒவ்வொரு முஸ்லிமும் உணர்ந்தால் ஊடகங்கள் மட்டுமல்ல உலகமே இனி நம் கைகளில், இன்ஷா அல்லாஹ்.


Sep 17, 2010

புகை! உனக்குப் பகை!


வளர்ந்து வரும் தீமைகளில் புகைத்தல் பழக்கம் என்பது முக்கியமானதாகும். இன்றைய இளைஞர்களைத் தொற்றிக்கொள்ளும் ஆபத்துகளில் இது பிரதானமாகும். கட்டிளம் பருவ இளைஞர்கள் தான் பெரியவனாகி விட்டேன் என்பதற்கான ஒர் அடையாளமாகப் புகைத்தலைக் கருதுகின்றனர். மற்றும் சிலர் தானும் வளர்ந்து சமூகத்தில் ஓர் அங்கம் என்பதன் அடையாளமாகப் புகைத்தலை எடுத்துக்கொள்கின்றனர்.
சினிமா நடிகர்கள் ஊதித் தள்ளுவதை ஒரு ஸ்டைலாகவும், அதை வீரமாகக் காட்டி வருவதால் வளரும் இளைஞர்களிடம் இந்த ஆபத்து விரைவாக ஒட்டிக்கொள்கின்றது. சில இளைஞர்கள் புகையை ஒரு இழு இழுத்து விட்டு, வட்ட வட்டமாக அதை விடும் போது அதில் நமது ஆண்மை உறுதிப்படுத்தப்படுவதாக உணர்கின்றனர்.
நட்புக்காக:
சில இளைஞர்கள் நட்புக்காக இந்த நரக நடத்தையில் மாட்டிக்கொள்கின்றனர். “நண்பன் ‘டம்’ அடிக்கும் போது சும்மா ‘கம்பனி’ கொடுப்பதற்காகக் குடிக்கின்றேன்!” என நொண்டிச் சாட்டுக் கூறிக்கொள்கின்றனர். உங்கள் நட்புப் பிரிந்த பின்னர் கூட நட்புக்காக உங்கள் வாயில் வைத்த சிகரட்டைப் பிடித்து, எடுத்துத் தூர எறிய உங்களால் முடியாமல் போய் விடும். எனவே நட்புக்காகவென உங்கள் உடலையும், உள்ளத்தையும், மறுமையையும், பணத்தையும் புகைக்கு இரையாக்க முனையாதீர்கள்!
அறியும் ஆவல்:
பெரியவர்கள் “டம்” அடிக்கும் போது அதைப் பார்க்கும் இளைஞர்களுக்கு அப்படி என்ன அதிலிருக்கின்றது? ஒரு முறை அடித்துத்தான் பார்ப்போமே! என்ற ஓர் ஆர்வம் பிறக்கின்றது. மதுபானத்தையும் சிலர் இப்படித்தான் குடிக்க ஆரம்பிக்கின்றனர். பின்னர் மது அவர்களைக் குடிக்க ஆரம்பித்து விடுகின்றது. பின்னர் அதை விட்டும் கழன்றுகொள்ளும் சக்தி அற்றவர்களாக இவர்கள் மாறி விடுகின்றனர்.
அப்படி என்ன இருக்கின்றது? என்று ஆராயும் நண்பனே! நீ என்ன பெரிய விஞ்ஞானி என்று நினைப்பா உனக்கு? எதையும் அனுபவித்துத்தான் ஆராய வேண்டுமா? விஷத்தைக் குடித்துப் பார்த்து ஆராய்வாயா? சிங்கத்தின் வாயில் தலை விட்டுப் பார்ப்பாயா?
இது தேவையற்ற ஆராய்ச்சி!
முன்னர் இப்படி ஆராயப் போனவர்கள் இன்றைய குடிகாரர்கள்! நாளைய குடிகாரப் பட்டியலில் இடம்பிடிக்கத்தான் இன்று ஒரு “டம்” அடித்துப் பார்ப்போம் என்று அடம்பிடிக்கின்றாயா?
கவிதை வரும்! கற்பனை வரும்!
சிலர், “சிகரெட்டினால்தான் கற்பனை ஊற்றெடுக்கும்! கவிதை வரும்! கற்பனை வளம் கொழிக்கும்!” என்று தமது தவறை நியாயப்படுத்தி, பொய் கூறுவதில் நீ ஏமாந்து விட வேண்டாம்! சிகரெட் பிடித்தால் கவிதை-கற்பனையெல்லாம் வராது; வாயில் நாற்றம் வரும்; நுரையீரலில் நோய் வரும்; புற்றுநோய் வரும்; காசு போகும்; ஆண்மை குறையும். இந்த மாதிரி ஜடங்கள்தான் வரும்-போகுமே தவிர, கற்பனை-கவிதையெல்லாம் வராது! நம்முடைய நாட்டில் எத்தனையோ பெண் எழுத்தாளர்கள் உள்ளனர். அவர்களெல்லாம் “டம்” அடித்துத்தான் கவிதை எழுதுகின்றனரா?
“டம்” அடித்தால் நல்ல எழுத்து வரும்!” என்றும் கூறுவார்கள். யாராவது பரீட்சை மண்டபத்தில் “டம்” அடித்துக்கொண்டு பரீட்சை எழுதுவதைப் பார்த்ததுண்டா?
“டம்” அடித்தால்தான்..
மற்றும் சிலர் இப்படியும் உளருவர்;
“எனக்கு “டம்” அடித்தால்தான் காலையில் காலைக் கடனைக் கூட ஒழுங்காகச் செய்ய முடியும்!” என்பர். இப்படியும் கன்றாவித் தனமாக உளர முடிகின்றதே! என்று ஆச்சரியமாக உள்ளது.
நமது நாட்டுச் சிறுவர்கள் காலையில் மலம் கழிப்பதில்லையா? பெண்கள் மலம் கழிப்பதில்லையா? ஏன்! இப்படிக் கூறுபவனே “டம்”முக்கு அடிமையாகும் முன்னர் மலம் கழித்ததில்லையா? ஒழுங்காக மலம் கழிக்காத சிறுவர்களுக்கு ஒரு “டம்” அடிக்கக் கொடுங்கள்! அனைத்தும் சரியாகி விடும்! என்று கூறும் ஒரு மருத்துவரையாவது நீங்கள் கண்டதுண்டா? மொட்டைத் தலைக்கும், ழுழங்காலுக்கும் முடிச்சுப் போடுவது போன்று அர்த்தமற்ற வாதமாக இது தென்படவில்லையா? அல்லது “டம்” அடித்த போதையில்தான் இப்படி இவர்கள் உளறுகின்றனரா என்று புரியவில்லை.
“டம்” அடித்தால் ஆழழன வரும்:
இது சிலரது வரட்டு வாதம். தனது தவறை நியாயப்படுத்த அவர்களாக அடுக்கிக்கொண்டு செல்லும் அசட்டு வாதங்கள்தான் இவை. சரி! ஆழழன வருவதற்காக அடிப்பவன் வீட்டில் இருக்கும் போது தாம்பத்தியத்திற்கான சாத்தியம் இருக்கும் போது மட்டும் தானே புகைக்க வேண்டும். பயணத்தின் போதும், மனைவி பக்கத்தில் இல்லாத போதும் அடிக்கிறானே! அப்போது ஆழழன வந்தால் எங்கே போய் முட்டும் எண்ணம்! இதுவே இது போலிக் காரணம் என்பதைப் புரிய வைக்கப் போதிய சான்றாகும். ஆழழன வருவதற்காக அடிப்பவரின் மனைவிக்கு ஆழழன வர சிகரெட் பிடிக்க அனுமதிப்பாரா? சிகரெட் பிடித்து விட்டு, உனக்கு ஆழழன வந்தாலும் அந்த நேரத்தின் நாற்ற வாயுடன் இல்லறத்திற்கு நுழையும் போது மனைவிக்கு வாந்தி வரப் பார்க்குமே! “சனியன்! எப்ப தொலையுமோ!” என அவள் மனதுக்குள் வெறுத்துக்கொள்வாளே! அதற்கு என்ன செய்வதாம்? சிகரெட் பிடிப்பது ஆண்மையைக் குறைக்கின்றது என்பதுதான் அறிஞர்களின் கூற்றே தவிர, அது ஆண்மையை வளர்க்கும் என்பதல்ல என்பதைக் கவனத்திற்கொள்ளவும்!
அறிவு அற்றவன் செயல்:
புகைத்தல்” என்பது அறிவற்றவர்களின் செயலாகும். நீங்கள் ஒரு கடைக்குச் சென்று “நாற்றமெடுக்கும் வாடை கிடைக்குமா? அழுகிய பெட்டீஸ் கிடைக்குமா?” என்று கேட்டு வாங்குவீர்களா? ஒருவன், “பழைய பழுதான உணவு உண்டு!” எனக் கூறி அழைத்தால் அதனை உண்டு மகிழ்வீர்களா? அறிவிருந்தால் இதைச் செய்ய மாட்டீர்கள்! ஆனால், சிகரெட் பெட்டியிலேயே “புகைத்தல் உடல் நலத்திற்குக் கேடானது!” என்று எழுதியுள்ளார்கள். அதைக் காசு கொடுத்து வாங்கிக் குடிக்கின்றீர்கள் என்றால் இது அறிவுள்ளவர்களின் வேலையா? புத்தியுள்ள எவரும் இதைச் சரி காண்பார்களா? எனவேதான் “புகைத்தல்” என்பது புத்தியற்றவர்களின் செயல் என்கின்றேன்.
புகைத்தலின் மார்க்க நிலைப்பாடு:
“சிகரெட், பீடி, சுருட்டு என்று அனைத்து வகைப் புகைத்தலும் ஹறாம்!” என்பது இஸ்லாமிய உலக அறிஞர்கள் அனைவரினதும் ஏகோபித்த முடிவாகும்.
நபி(ஸல்) அவர்களது பணிகள் பற்றி அல்லாஹ் கூறும் போது;
“அவர்கள்தான் (எழுத்தறிவற்ற) உம்மி நபியான இத்தூதரைப் பின்பற்றுவார்கள். அவர் குறித்து எழுதப் பட்டிருப்பதைத் தங்களிடமுள்ள தவ்றாத்திலும், இன்ஜீலிலும் கண்டுகொள்வார்கள். அவர் அவர்களுக்கு நன்மையை ஏவித் தீமையை விட்டும் அவர்களைத் தடுப்பார். தூய்மையானவற்றை அவர்களுக்கு ஆகுமாக்கித் தீயவற்றை அவர்களுக்குத் தடை செய்வார். மேலும் அவர்களது சுமையையும், அவர்கள் மீதிருந்த விலங்குகளையும் அவர்களை விட்டும் நீக்குவார். எவர்கள் அவரை நம்பிக்கை கொண்டு, அவரைக் கண்ணியப் படுத்தி, அவருக்கு உதவியும் செய்து, அவருடன் இறக்கப்பட்டிருக்கும் (குர்ஆன் எனும்) ஒளியையும் பின்பற்றுகின்றார்களோ அவர்கள்தாம் வெற்றியாளர்கள்.” (7:157)
நபி(ஸல்) அவர்கள் நல்லவற்றை ஆகுமாக்குவார்கள்; கெட்டவற்றைத் தடுப்பார்கள். புகைத்தல் என்பது ஒரு கெட்ட நடத்தை என்பதை அனைவரும் ஏற்றுக்கொள்கின்றனர். இந்த வகையில் இது இஸ்லாமிய சட்டவாக்கத்தில் “ஹறாம்” என்ற வட்டத்திற்குள் வந்து விடுகின்றது.
“(நபியே!) மது, சூதாட்டம் குறித்து அவர்கள் உம்மிடம் கேட்கின்றனர். “அவ்விரண்டிலும் பெரும் கேடும், மனிதர்களுக்குச் (சில) பயன்களும் இருக்கின்றன. எனினும், அவ்விரண்டின் பயனை விட அவ்விரண்டின் கேடு மிகப் பெரியதாகும்!” எனக் கூறுவீராக! மேலும், தாம் “எதைச் செலவு செய்வது?” என்றும் உம்மிடம் கேட்கின்றனர். “(தேவைக்குப் போக) மீத முள்ளதை!” எனக் கூறுவீராக! நீங்கள் சிந்திக்க வேண்டும் என்பதற்காக இவ்வாறே அல்லாஹ் வசனங்களை உங்களுக்குத் தெளிவுபடுத்துகின்றான்.” (2:219)
மேற்படி வசனம் மதுபானத்தில் சில நன்மைகளும், பெரிய தீமைகளும் இருப்பதாகக் கூறுகின்றது. சில நன்மைகள் இருந்து, அதை விட அதிகத் தீமைகளிருந்தால் அது ஹறாம் என்றிருக்குமானால் தீமைகள் மட்டும் நிறைந்த, எந்த நன்மையுமற்ற சிகரெட்டின் நிலை என்ன என்பதைச் சிந்தித்துப் பாருங்கள்!
தற்கொலைக்கு நிகர்:
சிகரெட்டின் நுணியில் நீங்கள் நெருப்பு வைக்கும் போதே அது உங்கள் உயிரிலும், உடலிலும் தீ மூட்டி விடுகின்றது.
இன்று இளவயது மரண விகிதாசாரம் அதிகரித்துச் செல்வதில் சிகரெட்டுக்குக் கூடிய பங்கு இருப்பதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர். வருடாந்தம் இலட்சக்கணக்கானோர் சிகரெட் மூலம் மரணத்தைத் தழுவுகின்றனர்.
ஒரு போட்டி நடத்தப்பட்டது:
ஒரு சிகரெட்டைப் பற்ற வைத்து அந்தச் சிகரெட் முடியும் போது அதே சிகரெட்டில் இன்னுமொரு சிகரெட்டைப் பற்ற வைக்க வேண்டும். இப்படி “அதிக சிகரெட் பிடிப்பவர்கள் யார்” என்பதுதான் போட்டி. ஒருவர் 18 உம், மற்றவர் 17 உம் பிடித்து முறையே முதலாம், இரண்டாம் இடங்களைப் பிடித்தனர். மற்றவர்கள் இடைநடுவில் தோல்வியை ஏற்றுக்கொண்டனர். இந்தப் போட்டியின் பரிசுகளை வழங்குவதற்கு முன்னரே வெற்றியாளர்கள் இருவருக்கும் சிகரெட் மரணத்தைப் பரிசாக வழங்கி விட்டது. சராசரியாக ஒரு சிகரெட் ஒரு மனிதனது ஆயுளில் 11 செக்கன்களைக் குறைக்கின்றது எனக் கணிப்பீடுகள் கூறுகின்றன. எனவே, புகைத்தல் என்பது தற்கொலைக்குச் சமமானது.
“மேலும், அல்லாஹ்வின் பாதையில் செலவு செய் யுங்கள்! (செலவு செய்யாமல்) அழிவின் பக்கம் உங்கள் கைகளைக் கொண்டு செல்லாதீர்கள்! நன்மையும் செய்யுங்கள்! நிச்சயமாக அல்லாஹ் நன்மை செய்வோரை நேசிக்கின்றான்.” (2:195)
எனவே, இந்த அடிப்படையிலும் சிகரெட் “ஹறாம்” என்ற வட்டத்திற்குள் வந்து விடுகின்றது.
வீண்-விரயம்:
இஸ்லாம் வீண்-விரயம் செய்வதைத் தடுக்கின்றது. 10 ரூபா பணத்தை எடுத்து எந்த விதத்திலும் நன்மை நல்காத, தீமையைத் தரக் கூடிய சிகரெட்டை வாங்கி ஊதித் தள்ளுவதென்பது மிகப் பெரிய வீண்-விரயமாகும். ஒரு சிகரெட் 10 ரூபா என்று வைத்துக்கொள்வோம். ஒருவன் சராசரியாகக் குறைந்தது ஒரு நாளைக்கு 7 சிகரெட் குடிப்பதாக இருந்தால்..
ஒரு நாளைக்கு ” 70 ருபாய்
ஒரு வாரத்துக்கு ” 490 ருபாய்
ஒரு மாதத்திற்கு ” 2,100 ருபாய்
ஒரு வருடத்திற்கு ” 24,200 ருபாய்
பத்து வருடங்களிற்கு ” 242,000 ருபாய்
நாற்பது வருடங்களிற்கு ” 968,000 ருபாய்
இவ்வாறு பார்க்கும் போது சிகரெட்டின் விலை 40 வருடங்களிற்குக் கூட்டப்படாவிட்டாலும், சிகரெட் குடிப்பவர் குடிக்கும் எண்ணிக்கையைக் கூட்டாவிட்டால் கூட வருடத்திற்குச் சுமார் 242,000 ரூபா சிகரெட்டுக்குச் செலவாகின்றது. தனது பிள்ளையின் படிப்புக்குக் கூட ஒருவன் வருடத்திற்கு 25,000 செலவழிப்பதில்லையே! 10 வருடங்களிற்கு இதே கணக்கு என்று எடுத்துக்கொண்டால் கூட 250,000 அதிகமாகச் செலவாகின்றதே! இது வீண்-விரயமில்லையென்று கூற முடியுமா?
இதே வகையில் இருந்தால் 40 வருடங்களாகின்ற போது 10 இலட்சத்திற்கும் அதிகமாக செலவிடப்படுகின்றதே! இந்த வீண்-விரயத்திற்கு அல்லாஹ்விடம் என்ன பதில் கூறப் போகின்றீர்கள்?
“நிச்சயமாக வீண்விரயம் செய்வோர் ஷைத்தானின் சகோதரர்களாகவே இருக்கின்றனர். ஷைத்தான் தனது இரட்சகனுக்கு நன்றி கெட்டவனாகவே இருக்கின்றான்.” (17:27)
என்ற வசனத்தின் படி சிகரெட் குடிப்பவர்கள் ஷைத்தானின் சகோதரர்களாகின்றனரே! ஷைத்தானின் சகோதரனாக இருக்க உங்களுக்குச் சம்மதமா?
நாளை மறுமையில் ஒவ்வொரு மனிதனதும் பணத்தைத் தான் எப்படிச் சம்பாதித்தேன்? என்றும், எந்த வழியில் செலவழித்தேன்? என்றும் கணக்குக் காட்ட வேண்டும். 40 வருடங்கள் சிகரெட் குடித்த ஒருவன், “பத்து இலட்சம் ரூபாப் பணத்தைப் பற்ற வைத்து ஊதித் தள்ளினேன்!” என்று அல்லாஹ்விடம் கூற முடியுமா? அப்படிக் கூறி விட்டுத் தப்பி விடத்தான் முடியுமா? எனவே, உங்களை அழிக்கும்/உங்கள் பொருளை அழிக்கும் இந்தப் “புகை” எனும் பகைவனுடன் ஏன் இன்னும் உங்களுக்கு நட்புறவு? புகைத்தலைப் பகைத்தல் என்பது மார்க்கக் கடமை என்பதை உணர்ந்து உறுதியான முடிவை எடுங்கள்!
பிறருக்குத் தொல்லை:
“நல்ல முஸ்லிம் யார்?” என நபி(ஸல்) அவர்களிடம் கேட்கப்பட்ட போது, “தன் கையாலோ, நாவாலோ பிறருக்குத் தீங்கிழைக்காதவனே சிறந்த முஸ்லிம்!” என நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.
(புகாரி)
ஒருவன் புகைப்பதால் அவன் மட்டும் பாதிக்கப்படுவதில்லை. அவன் ஊதித் தள்ளும் புகையைச் சுவாசிப்பவர்களும் சேர்ந்தே பாதிக்கப்படுகின்றனர். ஒரு கர்ப்பிணி புகைத்தால் அவளது குழந்தையும் சேர்ந்தே பாதிக்கப்படுகின்றது. வீட்டில் ஊதித் தள்ளும் ஊதாரித் தந்தையர்களால் குழந்தைகள் உடல் ரீதியாகவும் பாதிக்கப்படுகின்றனர்; மன ரீதியாகவும் பாதிக்கப்படுகின்றனர். இத்தகைய குழந்தைகள் வெகு விரைவாகப் புகைத்தலுக்கு அடிமையாகின்றனர். சில சிறுசுகள் தந்தை வீசும் பீடி/சிகரெட் துண்டுகளை எடுத்துத் தாமும் ஒரு முறை ஊதிப் பார்த்துக்கொள்கின்றனர். நீங்கள் ஒரு சிறந்த முஸ்லிமாக இருக்க உங்களுக்கு ஆசையில்லையா? அடுத்தவருக்குத் தீங்கிழைக்காத ஒரு சராசரி நல்ல மனிதனாக இருக்க உங்களுக்கு ஆசையில்லையா? பரவாயில்லை! உங்கள் மனைவியைக் கொஞ்சம் எண்ணிப் பாருங்கள்!
பொதுவாகப் பெண்களுக்கும், சிகரெட் குடிக்காதவர்களுக்கும் அந்த நாற்றம் பிடிக்கவே பிடிக்காது. வயிற்றைக் குமட்டிக்கொண்டு வரும். நீங்கள் இல்லறத்தில் ஈடுபடும் போது சிகரெட் நாற்றம் பிடிக்காமல் உங்கள் மனைவி வேண்டா வெறுப்புடன் வாழ்க்கை நடத்தினால் அது எவ்வளவு பெரிய கொடுமை என்று எண்ணிப் பாருங்கள்! வாழ்க்கையில் திருப்தியற்ற இத்தகைய பெண்கள் வேலி தாண்டிய வெள்ளாடுகளாகிப் போனால் அந்தக் குற்றத்தில் உங்கள் நறுமனம் சிகரெட்டினால் கமழும்(?) வாய்க்கும் முக்கிய பங்கிருக்கும் என்பதை மறந்து விடாதீர்கள்!
வெங்காயமும், வெள்ளைப்பூடும்:
வெங்காயம். வெள்ளைப்பூடு. இவையிரண்டும் சிறந்த மருத்துவக் குணங்கொண்டவையாகும். இவற்றை உண்பதை நபி(ஸல்) அவர்கள் அனுமதித்தார்கள். எனினும் இவற்றைப் பச்சையாக உண்டவர், பல் துலக்காமல் பள்ளிக்கு வர வேண்டாம் என நபி(ஸல்) அவர்கள் தடுத்தார்கள். (புகாரி)
ஏனெனில், வெங்காயம்-வெள்ளைப்பூடு சாப்பிட்டால் வாயில் வாடை வரும். அந்த வாடை அருகில் தொழுபவர்களுக்கு மட்டுமன்றி மலக்குகளுக்குக் கூட அவை வெறுப்பை உண்டுபண்ணுவதாகக் கூறினார்கள். அனுமதிக்கப்பட்ட வெங்காயம்-வெள்ளைப்பூட்டின் நிலையே இதுவென்றால் சிகரெட்டின் நிலை என்னவென்று நிதானமாகச் சிந்தியுங்கள்!
எனவே, புகைக்கும் நண்பர்களே!
புகைக்கும் பழக்கத்தை விட்டு விட வேண்டும் என்று உறுதியாக முடிவு எடுங்கள்! அதில் உறுதியாக இருங்கள்! சிகரெட்டுப் பிடிக்கும் நண்பர்களை விட்டும் கொஞ்சம் ஒதுங்குங்கள்! நீங்கள் சிகரெட் குடிக்கும் நேரங்களில் உங்கள் மனம் விரும்பும் ஏனைய காரியங்களில் ஆர்வம் காட்டுங்கள்! அப்படியும் முடியவில்லையென்றால் ஒரு டொஃபியையோ(மிட்டாய்), சுவிங்கத்தையோ அந்நேரத்தில் வாயில் போட்டுக்கொள்ளுங்கள்! நண்பர்களாகச் சேர்ந்து “டம்” அடித்த இடங்களைத் தவிருங்கள்!
“ரமழான்” – நல்ல வாய்ப்பு:
புகைத்தலை விடுவதற்கு “ரமழான்” நல்ல வாய்ப்பாகும். 14 மணி நேரம் உண்ணாமல், பருகாமல் பயிற்சி எடுக்கின்றோம். இப்படிப் பயிற்சியெடுத்த சிலர் சிகரெட்டை ஒரு கடமை போன்றும், அதைக் கழாச் செய்து விட வேண்டும் என்பது போன்றும் கருதி, நோன்பு திறந்ததிலிருந்து ஸஹர் வரைக்கும் ஊதித் தள்ளிப் பகல் குடிக்காததையும் ஈடு செய்து விடுகின்றனர்.
சிகரெட் குடிப்பதில்லை என நீங்கள் உறுதியான முடிவெடுத்து விட்டால் இஃப்தாருக்குப் பின்னர் சற்று நேரந்தான் நீங்கள் ஓய்வாக இருக்கின்றீர்கள். அந்த நேரத்தில் உறுதியாக இருந்து விட்டால் அதன் பின் கியாமுல்லைல்; அதன் பின் உறக்கம்; விழித்ததும் ஸஹர் என்று காலம் போனால் சிகரெட்டை முழுமையாகக் கைவிட முடியும். நீங்களாக ஏற்படுத்திக்கொண்ட இந்த வீணான செயலை நீங்களேதான் விட வேண்டும். வேறு யாரும் வந்து உங்களுக்கும் சிகரெட்டுக்குமிடையில் பிரிவை ஏற்படுத்த மாட்டார்கள்.
எனவே, புகைத்தலின் தீமையை உணருங்கள்! அதை விட்டு விடுவதாக உறுதியாக முடிவு செய்யுங்கள்! நினைத்தால் முடியாதது எதுவுமில்லை. இந்த நோன்பிலாவது இதை நீங்கள் விட்டு விடவில்லையென்றால் உங்கள் வாழ்வை ஹறாத்தை விட்டும் நீங்கள் காத்துக்கொள்ளவில்லையென்றால் நீங்கள் சிகரெட்டில் வைத்த நெருப்பு நாளை நரக நெருப்பு வரை உங்களைக் கொண்டு சென்று விடலாம் என்பது குறித்து எச்சரிக்கையாக இருங்கள்!

Blog Archive

Translate